92. மஸீஹ் அரபுச் சொல்லா?

 

இவ்வசனங்களில் (3:45, 3:92, 4:157, 4:171,172, 5:17, 5:72, 5:75, 9:30,31) ஈஸா நபி அவர்கள் மஸீஹ் என்ற பெயரால் குறிப்பிடப்படுகிறார்கள்.

 

ஈஸா என்பது அவர்களின் இயற்பெயராக உள்ளது போல் மஸீஹ் என்பதும் அவர்களின் இயற்பெயராகும். இது அவர்களின் பண்பைக் குறிக்கும் சொல் அல்ல. அரபு மொழியில் மஸீஹ் என்ற சொல்லுக்கு தடவப்பட்டவர் என்று பொருள் இருந்தாலும் இந்தப் பொருளில் இச்சொல் இந்த இடங்களில் பயன்படுத்தப்படவில்லை.

 

திருக்குர்ஆனில் 3:45 வசனத்தில் ஈஸா நபியைப் பற்றிக் கூறும்போது, அவரது பெயர் மஸீஹ், ஈஸா என்று அல்லாஹ் கூறுகின்றான். அதாவது மஸீஹ் என்பதும் ஈஸா என்பதும் அவரது பெயர் தான் என்று அல்லாஹ் கூறுவதால் நிச்சயமாக அது அரபுமொழிச் சொல்லாக இருக்க முடியாது.

 

அதற்குப் பொருள் செய்யவும் கூடாது. ஈஸா என்பதை எப்படிப் பொருள் செய்யாமல் அவரது பெயராகவே பயன்படுத்துகிறோமோ அப்படித்தான் மஸீஹ் என்பதையும் பயன்படுத்த வேண்டும்.

 

யூத, கிறித்தவ வேதங்களிலும் மஸீஹ் என்ற சொல்லுக்கு நெருக்கமான மெஸாயா என்று ஈஸா நபி குறிப்பிடப்பட்டுள்ளார்கள்.

 

இதுபோல் தான் தஜ்ஜாலைப் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிடும்போது மஸீஹ், தஜ்ஜால் என்று குறிப்பிட்டுள்ளனர். இதுவும் தஜ்ஜாலின் பெயராகத்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது.

 

அரபு மொழியில் மஸீஹ் என்ற வார்த்தை இருந்தாலும் ஈஸா மற்றும் தஜ்ஜால் ஆகியோர் விஷயத்தில் பெயராகத்தான் இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. மஸீஹ் என்ற அரபிமொழிச் சொல்லின் பொருளில் பயன்படுத்தப்படவில்லை.

 

 








free counters
மொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் | © 2019 tamilquran.in. Designed by Ahadh Media.
You 're visitors No. 219808