157. பாதுகாக்கப்பட்ட ஏடு என்றால் என்ன

 

உலகைப் படைப்பதற்கு முன் அல்லாஹ் ஒரு ஏட்டைத் தயாரித்து அதில் உலகம் அழியும் காலம் வரை நடக்க இருக்கும் அனைத்தையும் தனது கட்டளையால் பதிவு செய்தான். உலகில் எது நடந்தாலும் அந்தப் பதிவேட்டில் எழுதப்பட்டு இருக்கும். ஒரு இலை உதிர்ந்தாலும் அது எந்த நேரத்தில் விழும் என்ற விபரம் அந்தப் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டு இருக்கும். இந்த ஏடு லவ்ஹூல் மஹ்ஃபூல் என்று சொல்லப்படுகிறது.

 

பதிவுப் புத்தகம், பாதுகாக்கப்பட்ட ஏடு, மறைக்கப்பட்ட ஏடு, தெளிவான ஏடு என்ற வார்த்தைகளாலும் இந்தப் பதிவுப்புத்தகம் குறிப்பிடப்படுகிறது.

 

ஒருமனிதன் நல்லவனாக வாழ்வதும், கெட்டவனாக வாழ்வதும் அந்தப் பதிவேட்டில் உள்ளபடிதான் நடக்கிறது. ஒருவன் பிறப்பதும், மரணிப்பதும் அந்தப் பதிவேட்டில் உள்ளபடி தான் நடக்கின்றன. ஒருவன் செல்வந்தனாவதும், ஏழையாவதும் அந்தப் பதிவேட்டில் உள்ளபடி தான் நடக்கின்றன.

 

6:38, 6:59, 9:36, 10:61, 11:6, 13:39, 17:58, 20:52, 22:70, 23:62, 27:75, 30:56, 33:6, 34:3, 35:11, 36:12, 43:4, 50:4, 52:3, 54:43, 56:78, 57:22, 85:22 ஆகிய வசனங்கள் இது குறித்து பேசும் வசனங்களாகும்.

 

திருக்குர்ஆன் கூட அந்தப் பதிவேட்டிலிருந்து தான் எடுத்து முஹம்மது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டதாக 85:21-22, 56:77-78 ஆகிய வசனங்கள் கூறுகின்றன.

 

எல்லாமே பதிவேட்டில் உள்ளபடி தான் நடக்கின்றன என்றால் மனிதனுக்குச் சுதந்திரம் கிடையாதா? ஒருவன் கெட்டவனாக இருப்பதும் விதிப்பலகையில் எழுதியபடிதான் நடக்கின்றன என்றால் அவனைத் தண்டிப்பது என்ன நியாயம் என்று இதில் கேள்விகள் எழுகின்றன.

 

இந்தக் கேள்விகளுக்கான விடையை அறிந்து கொள்ள 289வது குறிப்பை வாசிக்கவும்.

 

 








free counters
மொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் | © 2019 tamilquran.in. Designed by Ahadh Media.
You 're visitors No. 269950