452. எண்ணிச் சொல்லாதது ஏன்?

 

யூனுஸ் நபியின் சமுதாய மக்களின் எண்ணிக்கையைக் கூறும்போது திட்டவட்டமாக ஒரு எண்ணிக்கையைக் கூறாமல் ஒரு லட்சம் அல்லது அதைவிட அதிகமான மக்களுக்கு அவரை அனுப்பினோம் என்று அல்லாஹ் இவ்வசனத்தில் (37:147) கூறுகிறான்.

 

மனிதன் இப்படி உத்தேசமாகச் சொல்லலாம். எத்தனை பேர் என்பதில் அல்லாஹ்வுக்குச் சந்தேகம் வரலாமா என்று குர்ஆனில் குறை காண்பவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

 

ஆனால் இந்தக் கேள்வி அர்த்தமற்றதாகும். ஒரு தூதரை அனுப்புதல் என்பது ஒரு நொடியில் முடிந்து போகும் விஷயம் அல்ல. அவரது பணி பல ஆண்டுகள் நீடிக்கும். அந்தக் காலகட்டத்தில் மக்கள் தொகை அதிகமாகிக் கொண்டே இருக்கும்.

 

யூனுஸ் நபி அனுப்பப்பட்ட நேரத்தில் ஒரு லட்சம் பேர் இருந்தால் அவர் அம்மக்களுக்குப் பிரச்சாரம் செய்த காலத்தில் நாள்தோறும் மக்கள் தொகை அதிகமாகி இருக்கும். அவ்வாறு அதிகமாகும் மக்களுக்கும் அவர் தான் தூதராவார்.

 

ஏழு கோடி மக்களுக்கு அதிபராக ஒருவர் தேர்வு செய்யப்பட்டால் அவர் பதவியின் இறுதிக் காலத்தில் ஏழரைக் கோடியாக மக்களுக்கு அதிபராகி இருப்பார்.

 

இப்படிச் சிந்திக்கும்போது இந்தச் சொற்றொடர் எவ்வளவு அற்புதமான சொற்றொடர் என்று அறிந்து கொள்ளலாம்.

 

ஒரு லட்சம் பேருக்கு நபியாக அனுப்பினோம் என்று குர்ஆன் கூறி இருந்தால் யூனுஸ் நபி காலத்தில் வாழ்ந்த யாரும் பிள்ளை பெறவில்லையா எனக் கேட்டு அல்லாஹ்வின் கூற்றைப் பொய்யாக்கி இருப்பார்கள். எனவேதான் அல்லாஹ் வித்தியாசமான சொற்றொடரைப் பயன்படுத்தியுள்ளான். இதைச் சொன்னவன் அல்லாஹ் தான் என்பதை இவ்வசனம் உறுதி செய்கிறது.

 

 








free counters
மொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் | © 2019 tamilquran.in. Designed by Ahadh Media.
You 're visitors No. 45030