48. மாதவிடாயின்போது தவிர்க்க வேண்டியவை
இந்த வசனத்தில் (2:222) மாதவிடாய் நேரத்தில் மனைவியரை விட்டு கணவர்கள் விலகியிருக்குமாறு கூறப்படுவதால் அப்பெண்கள் தொழுகை, நோன்பு உட்பட அனைத்து வணக்க வழிபாடுகளையும் செய்யலாம் என்று சிலர் வாதிடுகின்றனர். இது தவறாகும். எப்படி இது தவறாக உள்ளது என்பதை விளக்கமாகப் பார்ப்போம்.
மாதவிடாய் பற்றி என்ன கேள்வி கேட்கப்பட்டதோ அதற்கு விடையளிக்கும் விதமாகவே இவ்வசனம் அருளப்பட்டது. மாதவிடாய் சமயத்தில் வணக்க வழிபாடுகள் செய்யலாமா? என்று கேள்வி கேட்கப்பட்டிருந்தால் அது குறித்து பதிலளிக்கும் வகையில் இறைவசனம் அருளப்பட்டிருக்கும். மாதவிடாய் நேரத்தில் குடும்ப வாழ்க்கையில் ஈடுபடலாமா என்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டதால் அதற்கு மட்டும் இவ்வசனத்தில் நேரடியாக விடையளிக்கப்பட்டது.
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
யூதர்கள் மாதவிடாய் ஏற்பட்ட பெண்களுடன் அமர்ந்து சாப்பிட மாட்டார்கள்; வீடுகளில் அவர்களுடன் ஒட்டி உறவாடாமல் (ஒதுங்கி) இருப்பார்கள். எனவே, நபித்தோழர்கள், (இது குறித்து) நபியவர்களிடம் கேட்டனர். அப்போது, (நபியே!) அவர்கள் மாதவிடாய் பற்றி உம்மிடம் வினவுகின்றார்கள். அது ஓர் (இயற்கை) உபாதை என்று நீர் கூறுவீராக! எனவே, மாதவிலக்கு நேரத்தில் பெண்களை (தாம்பத்திய உறவு கொள்வதை) விட்டு விலகியிருங்கள்... என்று தொடங்கும் (2:222 ஆவது) வசனத்தை அல்லாஹ் அருளினான். அதையடுத்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தாம்பத்திய உறவைத் தவிர மற்ற காரியங்களைச் செய்து கொள்ளுங்கள் என்று கூறினார்கள்.
நூல் : முஸ்லிம் 507
மாதவிடாய் நேரத்தில் பெண்கள் யூத சமுதாயத்தில் மிகவும் இழிவாக நடத்தப்பட்டு வந்தனர். வீட்டுக்குள் பெண்களைச் சேர்க்க மாட்டார்கள். தனியாக ஒதுக்கி விடுவார்கள். பெண்களைத் தொடமாட்டார்கள். மாதவிடாய் ஏற்பட்ட பெண்கள் தொட்ட பொருள்களையும் தொடமாட்டார்கள். இந்த மூட நம்பிக்கைகளை இஸ்லாம் ஒப்புக் கொள்ளவில்லை.
இதை மறுப்பதற்காகத் தான் இவ்வசனம் அருளப்பட்டது.
மாதவிடாய் நேரத்தில் உடலுறவு தவிர மற்றவைகளுக்குத் தடை இல்லை என்றால், யூதர்கள் தாமாகத் தடை செய்து கொண்ட காரியங்களுக்குத் தடை இல்லை என்ற கருத்தில் தான் புரிந்து கொள்ள வேண்டும். வணக்க வழிபாடுகள் செய்ய அனுமதி உண்டு என்று புரிந்து கொள்ளக் கூடாது.
திருக்குர்ஆனின் 5:6 வசனத்தில் தொழுகையைப் பற்றி இறைவன் குறிப்பிடும்போது குளிப்புக் கடமையானவர்களாக நீங்கள் இருந்தால் தூய்மையாகிக் கொள்ளுங்கள் என்று கூறுகின்றான்.
தொழுகைக்கு தூய்மை அவசியம் என்று இவ்வசனத்தில் இருந்து தெரிகிறது.
திருக்குர்ஆனின் 4:43 வசனத்தில் தொழுகையைப் பற்றி இறைவன் குறிப்பிடும்போது குளிப்பு கடமையானவர்களாக நீங்கள் இருந்தால், குளித்துக் கொள்ளுங்கள் என்று குறிப்பிடுகிறான். அந்தத் தூய்மை குளிப்பதுதான் என்பதை இவ்வசனத்தில் இருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.
மாதவிடாய் பற்றிக் குறிப்பிடும் மேற்கண்ட வசனத்தில் அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை நெருங்காதீர்கள்! அவர்கள் தூய்மையாகி விட்டால் அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிட்டவாறு அவர்களிடம் செல்லுங்கள்! என அல்லாஹ் குறிப்பிடுகிறான்.
மாதவிடாயின்போது பெண்கள் தூய்மை இல்லாமல் உள்ளனர் என்று இவ்வசனம் கூறுவதாலும், தூய்மை இல்லாமல் தொழக் கூடாது என்று 4:43, 5:6 ஆகிய வசனங்கள் கூறுவதாலும் இவற்றை ஒன்றிணைத்துப் பார்க்கும்போது மாதவிடாயின்போது தொழக் கூடாது என்பதை யாரும் அறிந்து கொள்ளலாம்.
தொழுவது, நோன்பு நோற்பது, கஅபாவை தவாஃப் செய்வது ஆகிய வணக்கங்களும் தாம்பத்தியத்தில் ஈடுபடுவதுமே அவர்களுக்குத் தடுக்கப்பட்டுள்ளன என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
மாதவிடாய் நேரத்தில் தொழக்கூடாது என்பதை புகாரி 228, 304, 306, 320, 325, 331 ஆகிய ஹதீஸ்களில் காணலாம்.
மாதவிடாய் நேரத்தில் நோன்பு நோற்கக் கூடாது என்பதை புகாரி 1951 ஹதீஸில் காணலாம்.
மாதவிடாய் நேரத்தில் தவாப் செய்யக் கூடாது என்பதை புகாரி 294, 305, 1650, 5548, 5559 ஆகிய ஹதீஸ்களில் காணலாம்.
மற்ற விஷயங்களில் எல்லாப் பெண்களையும் போல் எல்லாப் பணிகளிலும் அவர்கள் ஈடுபடலாம்.