186. தூய்மையற்றவைகளைத் தடுக்கும் அதிகாரம்
இவ்வசனங்களில் ஒன்றை ஹலாலாக ஆக்கவும், ஹராமாக ஆக்கவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அதிகாரம் இருப்பதாகக் கூறப்படுகிறது.
ஒன்றை அனுமதிக்கவும், தடுக்கவும் அல்லாஹ்வுக்கே அதிகாரம் உண்டு. அல்லாஹ் அனுமதித்ததைத் தடை செய்யவோ, அல்லாஹ் தடை செய்ததை அனுமதிக்கவோ யாருக்கும் அதிகாரம் இல்லை.
5:87, 6:138,139, 6:150, 7:32, 10:59, 16:116 ஆகிய வசனங்களில் ஹலாலை ஹராமாக்கும் அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டுமே உரியது என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
ஆயினும் இவ்விரு வசனங்களில் (7:157, 9:29) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இறைவன் இந்த அதிகாரத்தை வழங்கியுள்ளதாகக் கூறுகிறான்.
இதை மேற்கண்ட வசனங்களுக்கு முரணாகக் கருதக் கூடாது.
ஏனெனில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குத் திருக்குர்ஆன் எனும் செய்தி ஜிப்ரீல் (அலை) மூலம் கிடைத்தது போல் மற்றொரு வகையான செய்தியும் இறைவன் புறத்திலிருந்து கிடைத்தது.
அந்தச் செய்தியின் அடிப்படையிலேயே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹலால் என்றோ, ஹராம் என்றோ அறிவிப்பார்கள் என்பதால் அதுவும் இறைவன் புறத்திலிருந்து கிடைத்த செய்தி தான்.
"அல்லாஹ் அனுமதித்ததை நீர் எப்படி ஹராமாக்கலாம்?" என்று 66:1 வசனம் கூறுவதையும் இதற்கு எதிராகக் கருதக் கூடாது.
66:1 வசனத்தில் கூறப்படும் ஹராம் என்பது மக்களுக்குத் தடை செய்தது பற்றிக் கூறவில்லை. மாறாக, அனுமதிக்கப்பட்ட ஒன்றை தம் அளவில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தவிர்த்துக் கொள்வதைத்தான் கூறுகிறது.
அனுமதிக்கப்பட்ட ஒரு பொருள் ஒருவருக்குப் பிடிக்காவிட்டால் தவிர்த்துக் கொள்வதில் தவறில்லை. ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமக்கு அது பிடித்திருந்தும், வேறு காரணங்களுக்காக இதைத் தொட மாட்டேன் என்று சபதம் செய்தார்கள். இதையே 66:1 வசனம் தடுக்கிறது. "உமது மனைவியரின் திருப்தியை நாடி ஏன் இவ்வாறு செய்கிறீர்?'' என்ற கேள்வியிலிருந்து இதை அறியலாம்.
மேலும் விளக்கத்துக்கு 42, 272 ஆகிய குறிப்புகளையும் காண்க!