68. சக்திக்கேற்ற சட்டங்கள்
2:185, 2:220, 2:233, 2:286, 4:28, 5:6, 6:152, 7:42, 23:62, 65:7 ஆகிய வசனங்கள் மனிதனின் சக்திக்கு உட்பட்டதாகவே இஸ்லாத்தின் சட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன என்று கூறுகின்றன.
இந்தச் சொற்றொடர் பல பிரச்சினைகளுக்குத் தீர்வு சொல்வதாகும்.
நாம் வாழ்கின்ற காலம், நாடு, பிரதேசம் ஆகியவற்றைப் பொறுத்தும், உடல்நிலை, நோய், முதுமை போன்றவை காரணமாகவும் சில கட்டளைகளைச் செயல்படுத்த முடியாமல் போகலாம். ஒருவருக்கு இயலவில்லை என்ற நிலையில் சில கட்டளைகளைச் செயல்படுத்தாமல் இருந்தால் அவரை அல்லாஹ் குற்றம் பிடிக்க மாட்டான்.
திருக்குர்ஆன் கூறும் அரசியல் சட்டங்களை இந்தியாவில் நடைமுறைப்படுத்த நம்மால் இயலாது. ஏனெனில் நம்மிடம் ஆட்சி இல்லை. இந்தியாவில் உள்ள சூழ்நிலையில் இதை நடைமுறைப்படுத்தாமலிருப்பது குற்றமாகாது என்பதற்கும் இவ்வசனங்கள் சான்றுகளாக உள்ளன. இன்னும் கவனமாகச் சிந்தித்தால் இந்தச் சொற்றொடர் இன்னும் பல பிரச்சினைகளுக்குத் தீர்வு சொல்வதை அறிந்து கொள்ளலாம்.