394. மூஸா நபியின் மீது சுமத்தப்பட்ட பழி என்ன?

 

இவ்வசனத்தில் (33:69) மூஸா நபியின் சமுதாயத்தவர் கூறியதிலிருந்து அல்லாஹ் மூஸா நபியை விடுவித்தான் எனக் கூறப்பட்டுள்ளது.

 

மூஸா நபியைப் பற்றி அவர்களின் சமுதாயம் கூறியது என்ன என்பதில் இருவேறு கருத்துக்கள் உள்ளன.

 

மூஸா நபியின் சமுதாயத்தினர் வெட்ட வெளியில் நிர்வாணமாகக் குளிப்பது வழக்கம். ஆனால் மூஸா நபியவர்கள் தனியாக ஒதுங்கி யாரும் பார்க்காத விதத்தில் குளிப்பார்கள். இதன் காரணமாக மூஸா நபிக்கு விரை வீக்கம் இருப்பதாக அவரது சமுதாயத்தினர் பேசிக் கொண்டனர். ஒரு நாள் மூஸா நபியவர்கள் தமது ஆடைகளை ஒரு கல்லின் மீது வைத்து விட்டுக் குளித்தனர். அப்போது அந்தக் கல் அவர்களது ஆடையுடன் ஓடியது. "என் ஆடை, என் ஆடை'' எனக் கூறிக் கொண்டே மூஸா நபியவர்கள் தண்ணீரை விட்டு வெளியே வந்தனர். அப்போது மூஸா நபியவர்களுக்கு விரை வீக்கம் இல்லை என்று அவர்களின் சமுதாயத்தினர் விளங்கிக் கொண்டனர். அதைத்தான் இறைவன் குறிப்பிடுகிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக புகாரி 278, 3404, 3407, 3152 ஆகிய ஹதீஸ்களில் காணலாம்.

 

மூஸா நபியவர்களும், ஹாரூன் நபியவர்களும் ஒரு மலை உச்சிக்குச் சென்றபோது ஹாரூன் நபி மரணித்து விட்டார்கள். இதை மூஸா நபி தமது சமுதாயத்திடம் வந்து கூறியபோது மூஸா நபியின் மீதே அவர்களின் சமுதாயத்தினர் கொலைப்பழி சுமத்தினார்கள். இந்தப் பழியை ஜிப்ரீல் (அலை) அவர்களை அனுப்பி அல்லாஹ் நீக்கி வைத்தான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக ஹாகிமில் இடம் பெற்றுள்ளது. இதுவும் ஆதாரப்பூர்வமான ஹதீஸாகும்.

 

இவ்விரண்டு காரணங்களில் ஹாகிமில் இடம் பெற்ற காரணமே ஏற்புடையதாக உள்ளது.

 

ஏனெனில் இறைத்தூதர்களின் நாணயம், நேர்மை, ஒழுக்கம் ஆகியவற்றைப் பாதிக்கும் விஷயங்கள் இறைத்தூதரகளின் பிரச்சாரத்துக்கு பாதிப்பு ஏற்படுத்து. உடலில் ஏற்படும் ஏற்படும் குறைகள் பிரச்சாரப் பணியைப் பாதிக்காது. எத்தனையோ இறைத்தூதர்களுக்கு பலவிதமான நோய்கள் இருந்துள்ளன. அதனால் அவர்களின் தூதுப்பணிக்கு எந்தப் பங்கமும் ஏற்பட்டதில்லை.

 

ஆனால் இறைத்தூதர்களின் நன்னடத்தைக்கு எதிராகச் சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் தான் தூதுப்பணிக்கு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும். மூஸா நபி, கொலை செய்து விட்டார்கள் என்ற குற்றச்சாட்டு மக்களிடம் பரவினால் அவர்களின் தூதுத்துவத்திலேயே சந்தேகம் ஏற்பட்டு விடும். எனவே இந்தப் பழியிலிருந்து அல்லாஹ் அவரை நீக்குவது முக்கியமானதாகும்.

 

எனவே புகாரியில் இடம்பெற்ற காரணத்தை விட ஹாகிமில் இடம் பெற்ற காரணமே ஏற்புடையதாகவுள்ளது.

 

 








free counters
மொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் | © 2019 tamilquran.in. Designed by Ahadh Media.
You 're visitors No. 270093