140. தூதர் அருள்புரிய முடியுமா?
இவ்வசனங்களில் (9:59, 9:74) அல்லாஹ்வும், அவனது தூதரும் அவனது அருளை வழங்குவார்கள் என்று கூறப்படுவதைச் சிலர் தவறாக விளங்கிக் கொள்கின்றனர்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், மக்களுக்குச் செல்வத்தை வழங்குவதற்கான அதிகாரம் படைத்தவர்கள் எனவும், அல்லாஹ் வழங்குவதைப் போலவே நபியவர்களும் வழங்குவார்கள் எனவும் நினைக்கின்றனர். இது தவறாகும்.
ஏனெனில் 2:245, 13:26, 16:71, 17:30, 28:82, 29:17, 29:62, 30:37, 34:36, 34:39, 39:52, 42:12 ஆகிய வசனங்களில் நான் நாடியவர்களுக்கு செல்வத்தை வழங்குவேன் என்று அல்லாஹ் கூறுகிறான்.
மேலும் அல்லாஹ்வின் கருவூலங்கள் என்னிடம் இல்லை என்று பிரகடனம் செய்யுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் கட்டளை பிறப்பித்ததாக 6:50 வசனம் கூறுகிறது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம்மையே செல்வந்தராக்கிட இயலவில்லை. தமது தோழர்கள் பலர் வறுமையில் உழன்றபோதும் அவர்களைச் செல்வந்தர்களாக்கிட இயலவில்லை.
எனவே, அவ்வசனங்களுக்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலுக்கும் முரண் இல்லாத வகையில்தான் இவ்வசனங்களை (9:59, 9:74) விளங்கிக் கொள்ள வேண்டும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைத்தூதராக மட்டுமின்றி இஸ்லாமிய அரசின் அதிபராகவும் இருந்தார்கள். அதிபர் என்ற முறையில் அரசின் கருவூலத்தில் இருந்து ஏழைகளுக்கு வழங்கும் கடமை அவர்களுக்கு இருந்தது. அதைத்தான் இவ்வசனம் குறிப்பிடுகிறது.
இன்றைக்கும் கூட ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் ஏழைகளுக்குத் தாராளமாக வாரி வழங்கினால் "ஏழைகளைத் தன்னிறைவு அடையச் செய்யும் அளவுக்கு வழங்குகிறார்'' என்று கூறலாம்.
யாருக்கு வேண்டுமானாலும் பயன்படுத்தப்படும் சாதாரண அர்த்தத்தில் அமைந்த இச்சொல்லுக்கு விபரீதமான வியாக்கியானம் கொடுக்கக் கூடாது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வைப் போல் செல்வத்தை வழங்குவார்கள் என்று வாதிட்டு, இதுபோல் மகான்களும் வழங்குவார்கள் என்று கூறி மேலும் வழிகேட்டை சிலர் விரிவுபடுத்துகின்றனர். இதற்கு இவ்வசனம் இடம் தரவில்லை.
தர்கா வழிபாட்டை நியாயப்படுத்துவோரின் இதர வாதங்கள் எப்படி தவறானவை என்பதை அறிந்து கொள்ள 17, 41, 49, 79, 83, 100, 104, 121, 122, 141, 193, 213, 215, 245, 269, 298, 327, 397, 427, 471 ஆகிய குறிப்புகளையும் காண்க!