223. பலியிட அழைத்துச் செல்லப்பட்டவர் யார்?
இப்ராஹீம் நபி (ஆப்ரஹாம்) அவர்கள் தமது ஒரு மகனை இறைவனுக்காகப் பலியிட முயன்றார். அப்போது அதைத் தடுத்து ஒரு ஆட்டை இறைவன் பலியிடச் செய்து அந்த மகனைக் காப்பாற்றினான் என்று முஸ்லிம்கள் நம்புவது போல் கிறித்தவர்களும் நம்புகிறார்கள்.
பலியிட அழைத்துச் செல்லப்பட்ட மகன் இஸ்ஹாக் என்று கிறித்தவர்கள் கூறுகிறார்கள். இஸ்மாயீல் தான் என்று முஸ்லிம்கள் சொல்கிறார்கள். சில முஸ்லிம்களும் பலியிட அழைத்துச் செல்லப்பட்டவர் இஸ்ஹாக் என்று கூறுகின்றனர். அவர்களுக்கு இவ்வசனம் (11:71) மறுப்பாக அமைந்துள்ளது.
இஸ்ஹாக் என்ற மகன் பிறக்கப் போகும் நற்செய்தியை இறைவன் இப்ராஹீம் நபியிடம் கூறினான். அப்படி கூறும்போது யாகூப் என்ற பேரன் பிறக்கப் போவது பற்றியும் கூறுகிறான் என்று இவ்வசனத்தில் சொல்லப்பட்டுள்ளது.
பேரனைப் பற்றி நற்செய்தி கூறப்பட்டதால் மகன் இஸ்ஹாக் சிறு வயதில் மரணிக்க மாட்டார் என்பதும், அவர் மணம் முடித்து யாகூபைப் பெறுவார் என்பதும் இப்ராஹீம் நபிக்கு இதன் மூலம் முன்பே தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இவ்வாறு தெரிவிக்கப்பட்ட பின் இஸ்ஹாக்கைப் பலியிடுமாறு கூறி இப்ராஹீம் நபியைச் சோதிக்க முடியாது. இஸ்ஹாக் இப்போது சாகமாட்டார் என்று இறைவனே கூறிய பிறகு இப்ராஹீம் நபியவர்கள் தமது மகனை அறுத்துப் பலியிட முன் வந்ததில் பெரிய தியாகம் ஏதும் இருக்காது.
தன் மகன் இப்போது சாக மாட்டான் என்று திட்டவட்டமாகத் தெரிந்தால் யார் வேண்டுமானாலும் இதைச் செய்ய முன்வருவர். எனவே இஸ்மாயீலை அறுத்துப் பலியிடுமாறு இறைவன் கட்டளையிடுவது தான் இருவரையும் சோதித்துப் பார்ப்பதாக அமைய முடியும்.
பைபிளின் கருத்துப்படியும் இஸ்மாயீல் தான் பலியிட அழைத்துச் செல்லப்பட்டவர் என்பதை பைபிள் சான்றுகளுடன் அறிந்து கொள்ள 455வது குறிப்பைப் பார்க்கவும்.