162. மார்க்கத்தைப் பரப்ப பொய் சொல்லலாமா?

 

திருக்குர்ஆனின் இந்த (6:76-78) வசனங்களை மேலோட்டமாகப் பார்க்கும்போது இப்ராஹீம் நபியவர்கள் முதலில் நட்சத்திரத்தைக் கடவுள் என நம்பினார்கள்; பிறகு சந்திரனைக் கடவுள் என நம்பினார்கள்; பிறகு சூரியனைக் கடவுள் என நம்பினார்கள்; பிறகு இவை கடவுளாக இருக்க முடியாது என்று விளங்கிக் கொண்டார்கள் என்று தெரிகிறது.

 

ஆனால் இப்ராஹீம் (அலை) அவர்கள் ஒருபோதும் இணைவைத்தவராக இருந்ததில்லை என 2:135, 3:67, 3:95, 6:161, 16:120, 16:123 ஆகிய வசனங்களில் கூறப்படுகிறது.

 

இப்ராஹீம் நபியவர்கள் அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தவராகவே இருந்ததில்லை என்ற காரணத்தினால் சூரியனை, சந்திரனை, நட்சத்திரங்களைக் கடவுள் எனச் சொன்னது மக்களுக்குப் படிப்படியாகப் புரிய வைப்பதற்காகத்தான் இருக்க முடியும்.

 

அவற்றைக் கடவுள் என்று இப்ராஹீம் நபியவர்கள் உண்மையாக நினைத்திருந்தால் "அவர் இணைவைத்தவராக இருந்ததில்லை'' என்று கூறும் குர்ஆன் வசனங்களுக்கு மாற்றமாக அமைந்து விடும்.

 

ஆரம்பத்தில் அறியாமையின் காரணமாக இப்ராஹீம் நபியவர்கள் நபியாக ஆவதற்கு முன் இவ்வாறு கூறியிருக்கலாமா என்றால் அதுவும் தவறாகும்.

 

ஏனெனில் இந்தச் சான்றை நாம் தான் இப்ராஹீமுக்கு வழங்கினோம் என்று 6:83 வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான். இவ்வாறு இப்ராஹீம் நபி வாதிட்டது அல்லாஹ் கற்றுக் கொடுத்த அடிப்படையில்தான் என்பது இதிலிருந்து தெரிகிறது. மக்களுக்குப் புரிய வைப்பதற்காகவே இவ்வாறு இப்ராஹீம் நபியவர்கள் கூறினார்கள் என்பதும் இதன் மூலம் உறுதியாகிறது.

 

இப்ராஹீம் (அலை) அவர்கள் மக்களுக்கு உண்மையைப் புரிய வைப்பதற்காகச் சில தந்திரமான வழிமுறைகளைக் கையாண்டிருக்கிறார்கள்.

 

அவர்களுடைய வரலாற்றைப் படிப்பினையாக அல்லாஹ் நமக்குச் சொல்லிக் காட்டுவதால் பிறருக்குப் புரிய வைப்பதற்காக படிப்படியாகச் செய்திகளைச் சொல்லலாம் என்ற படிப்பினையையும் இதிலிருந்து பெறலாம்.

 

மார்க்கம் தடை செய்துள்ள அம்சங்கள் ஏதும் இடம் பெறாமல் நாடகம் போன்ற வடிவில் நல்ல அறிவுரைகளைக் கூறலாம் என்பதற்கும் இவ்வசனத்தைச் சான்றாகக் கொள்ளலாம்.

 

இப்ராஹீம் நபியின் இந்த வழிமுறையை அல்லாஹ்வும் 6:83 வசனத்தில் அங்கீகரிக்கிறான்.

 

மக்களைத் திருத்துவதற்காக இப்ராஹீம் நபி அவர்கள் பொய் சொன்னது போல் நாமும் மக்களை நல்வழிப்படுத்த பொய் சொல்லலாம் என்று சிலர் நினைக்கின்றனர்.

 

குருடர் பார்க்கிறார்; செவிடர் கேட்கிறார் என்று சில மதத்தினர் பிரச்சாரம் செய்வது போல் நாமும் பிரச்சாரம் செய்யலாம் என்றும் கருதுகின்றனர். இப்ராஹீம் நபியவர்களின் இந்த வழிமுறையைத் தமக்குரிய சான்றாக இவர்கள் காட்டுகின்றனர். இது முற்றிலும் தவறாகும்.

 

ஏனெனில் குருடர் பார்க்கிறார் என்பது போன்ற பிரச்சாரம் செய்பவர்கள், அந்தப் பொய்யை மக்கள் நம்பி, ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே சொல்கின்றனர். அதற்குச் செவி கொடுக்கின்ற மக்களும் அதை மெய்யாகவே கருதுகின்றனர்.

 

ஆனால் இப்ராஹீம் நபி, தாம் சொன்னதை உண்மை என்று நம்பிச் சொல்லவில்லை. மக்கள் அதை உண்மை என்று நம்ப வேண்டும் என்பதற்காகவும் சொல்லவில்லை. சூரியனையோ, சந்திரனையோ கடவுளாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காகவும் இதைச் சொல்லவில்லை.

 

எந்தவிதமான ஆற்றலும் இல்லாத சிலையை விட நட்சத்திரம் பரவாயில்லை எனக் கூறி அம்மக்களை ஒருபடி மேலே கொண்டு வருகின்றனர்.

 

நட்சத்திரத்தில் அவ்வளவு வெளிச்சம் இல்லை; அதை விட அதிக வெளிச்சம் தரும் சந்திரன் எவ்வளவோ பரவாயில்லை என்று கூறி இன்னொரு படி அவர்களை மேலே ஏற்றுகிறார்கள்.

 

கடவுள் என்று நம்புவதற்கு இது போதாது; இதை விடவும் பெரிதாக உள்ள சூரியன் தான் கடவுளாக இருக்க வேண்டும் எனக் கூறுகிறார்கள். இதன் மூலம் இன்னொரு படி அம்மக்களின் சிந்தனையைக் கூர்மைப்படுத்துகிறார்கள்.

 

பின்னர் அகில உலகையும் படைத்தவன் தான் கடவுளாக இருக்க முடியும் எனக் கூறி அம்மக்களைச் சரியான இடத்தில் கொண்டு வந்து நிறுத்தி விடுகிறார்கள்.

 

கீழே இருப்பவரைப் படிப்படியாக மேலே கொண்டு வந்து நிறுத்துவதற்குத்தான் இப்ராஹீம் நபியின் வழியில் முன்மாதிரி உள்ளது.

 

மதத்தைப் பரப்ப பொய் சொல்வோர் தப்பான கொள்கையை மக்கள் ஏற்று நம்ப வேண்டும் என்பதற்காகவே பொய் சொல்கிறார்கள். அந்தப் பொய்யிலேயே மக்களை நிலைத்திருக்கச் செய்கிறார்கள். மக்கள் எந்த நிலையில் இருக்கிறார்களோ அந்த இடத்திலேயே அவர்களை நிறுத்துவதற்காகச் சொல்லும் பொய்க்கும், இப்ராஹீம் நபியின் இந்த வழிமுறைக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை.

 

(மேலும் விபரத்திற்கு 236, 336, 432 ஆகிய குறிப்புகளையும் காண்க!)

 

 








free counters
மொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் | © 2019 tamilquran.in. Designed by Ahadh Media.
You 're visitors No. 43328