190. அல்லாஹ்வின் பெயரைத் திரித்தல்
அல்லாஹ்வுக்கு அழகான பெயர்கள் உள்ளன என்றும் அப்பெயர்களாலேயே அவனை அழைக்க வேண்டும் என்றும் இவ்வசனங்கள் (7:180, 17:110) கூறுகின்றன.
அல்லாஹ்வின் பெயரைத் திரித்துக் கூறுவதும், சிதைப்பதும் கடும் குற்றம் எனவும், அவ்வாறு செய்பவர்கள் தண்டிக்கப்படுவார்கள் எனவும் இவ்வசனங்கள் கடுமையாக எச்சரிக்கின்றன.
இன்று முஸ்லிம் சமுதாயத்தில் பலர் "தியானம்" என்ற பெயரில் அல்லாஹ்வின் பெயரைச் சிதைத்து, நரகத்திற்குத் தாங்களைத் தயார்படுத்தி வருவதைக் காண முடிகிறது.
ராத்திபு, திக்ரு என்ற பெயரில் "ஹு ஹு" என்று அல்லாஹ்வை தியானம் செய்கின்றனர். இது அல்லாஹ்வின் பெயர்களில் ஒன்று அல்ல. "ஹு" என்றால் அவன் என்பது பொருள். ஷைத்தானைக் கூட "ஹு" என்று கூறலாம்.
எந்த ஒரு தன்மையையும் குறிக்காத சொல்லை, அல்லாஹ்வின் பெயராக இல்லாத சொல்லை அல்லாஹ்வை திக்ரு செய்ய இவர்கள் பயன்படுத்துகின்றனர். இவர்களுக்கு இவ்வசனம் கடும் எச்சரிக்கையாக உள்ளது.
"ஹக் தூ ஹக்" என்று அரபியும், உருதும் கலந்த புதுப் பெயரைக் கண்டுபிடித்து, அதையும் திக்ரு என்ற பெயரில் உச்சரிக்கின்றனர். புனித ரமளான் மாதத்தில் பள்ளிவாசல்களிலும் "ராத்திபு" என்ற பெயரில் அல்லாஹ்வுக்குக் கோபம் ஏற்படுத்தும் இந்தச் செயல் அரங்கேற்றப்படுவதைக் காண்கிறோம்.
அல்லாஹ் என்பதில் முதல் எழுத்தையும் கடைசி எழுத்தையும் மட்டும் வெட்டி எடுத்து "அஹ்" என்று புதுச் சொல்லை உண்டாக்கி அல்லாஹ்வை திக்ரு செய்கின்றனர்.
இப்ராஹீம் என்பது இவர்களின் பெயர் என்றால் "இம்" என்று அதைச் சுருக்குவதில் சந்தோஷம் அடைவார்களா? அல்லாஹ்வின் பெயரைத் திரிக்க இவர்கள் யார்? இதைச் சிந்திக்க வேண்டும்.
இவ்வாறு செய்பவர்கள் தோன்றுவார்கள் என்பதை அறிந்த அல்லாஹ் முன்கூட்டியே இவர்களைப் பற்றி இவ்வசனத்தில் எச்சரித்து விட்டான். நன்மையை அடைவதாக நினைத்துக் கொண்டு இவர்கள் செய்யும் இக்காரியம் இவர்களை நரகத்தில் சேர்க்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை என இவ்வசனத்திலிருந்து உணரலாம்.
இது பற்றி மேலும் விபரங்கள் அறிய 180, 192 ஆகிய குறிப்புகளையும் காண்க!