64. நிறைவேற்றப்பட வேண்டிய சத்தியங்கள்
இவ்வசனங்களில் 2:224, 2:225, 3:77, 5:89, 16:91, 16:94, 58:16, 63:2 சத்தியம் செய்வது குறித்த சட்டங்கள் கூறப்படுகின்றன.
மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட காரியத்தைச் செய்வதாக அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்தால் அதைக் கட்டாயம் நிறைவேற்ற வேண்டும். அவ்வாறு நிறைவேற்றாவிட்டால் 5:89 வசனத்தில் கூறப்படும் பரிகாரத்தைச் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அது தண்டனைக்குரிய குற்றமாகும்.
சிலர் அல்லாஹ்வின் பெயரால் சத்தியம் செய்யும் எண்ணமின்றி வாய் தவறி "அல்லாஹ்வின் மீது சத்தியமாக'' எனக் கூறி விடுவதுண்டு. சத்தியம் செய்யும் எண்ணமில்லாமல் அந்தச் சொல்லைக் கூறியதற்காக அல்லாஹ் தண்டிக்க மாட்டான் என 2:225 வசனம் கூறுகிறது.
பிறரை ஏமாற்றுவதற்காகவோ, தம்மைக் காக்கும் கேடயமாகவோ "அல்லாஹ்வின் மீது சத்தியமாக'' என்று கூறுவது குற்றம் என 2:224, 3:77, 16:91, 16:92, 16:94, 58:16, 63:2 ஆகிய வசனங்கள் கூறுகின்றன.
வாங்கிய கடனைத் திருப்பித் தராமல் ஏமாற்றவோ, தங்களுக்கு ஏதேனும் சங்கடங்கள் வருவதைத் தவிர்ப்பதற்காகவோ அல்லாஹ்வின் பெயரைப் பயன்படுத்துவோர் மேற்கண்ட வசனங்களைப் பார்த்து தங்களைத் திருத்திக் கொள்ள வேண்டும்.
அல்லாஹ்வின் பெயரைப் பயன்படுத்தி அவனை சாட்சியாக்கிப் பேசும்போது பொய் சொல்வதும், அல்லாஹ்வின் பெயரால் அளித்த வாக்கை நிறைவேற்றாமல் இருப்பதும் கடும் குற்றமாகும்.
சத்தியம் செய்தல் குறித்து மேலும் அறிய 379வது குறிப்பையும் பார்க்கவும்.