70. மஹரை விட்டுக் கொடுத்தல் நல்லது
இவ்வசனத்தில் (2:237) மஹரை நீங்கள் விட்டுக் கொடுப்பதே சிறந்தது என்று கூறப்படுகிறது.
கணவன் மனைவி பற்றி பேசப்படுவதால் நீங்கள் என்பது கணவர்களைக் குறிக்கிறதா? மனைவியரைக் குறிக்கிறதா? என்பதில் விரிவுரையாளர்கள் முரண்பட்ட இரண்டு கருத்துக்களையும் சொல்கிறார்கள்.
திருமணம் செய்து மனைவியைத் தீண்டுவதற்கு முன் விவாகரத்துச் செய்தால் பாதி மஹர் கொடுப்பது அவசியம் என்றாலும் "முழு மஹரையும், ஏன் அதையும் விட அதிகமாகவே தருகிறேன்'' என்று ஆண்கள் விட்டுக் கொடுப்பதே சிறந்தது.
"நீங்கள் விட்டுக் கொடுப்பதே சிறந்தது'' என்ற வாசகம் ஆண்களைக் குறிக்கும் என்பது தான் சரியான கருத்தாகும்.
தமிழ் மொழியில் "நீங்கள் விட்டுக் கொடுப்பது'' என்பதை ஆண்களுக்கும் பெண்களுக்கும் கூறலாம். ஆனால் அரபு மொழியில் நீங்கள் என்பதை ஆண்களுக்குப் பயன்படுத்தும்போது ஒரு சொல்லமைப்பும், பெண்களுக்குப் பயன்படுத்தும்போது வேறு சொல்லமைப்பும் உள்ளது.
இவ்வசனத்தில் ஆண்களைக் குறிக்கும் வகையிலான சொல்லமைப்பு அதாவது ஆண்பால் முன்னிலை சொல்லமைப்பு பயன்படுத்தப்பட்டுள்ளது.
எனவே ஆண்கள் விட்டுக் கொடுப்பதே சிறந்ததாகும் என்பது தான் இங்கே சொல்லப்படுகிறது.
"நீங்கள் விட்டுக் கொடுப்பதே இறையச்சத்திற்கு நெருக்கமானது. உங்களுக்கிடையே (சிலருக்கு) இருக்கும் உயர்வை மறந்து விடாதீர்கள்'' என்று இதைத் தொடர்ந்து கூறப்படுகிறது. இது ஆண்களுக்கு இருக்கும் உயர்வையே குறிக்கிறது. எனவே ஆண்கள் விட்டுக் கொடுப்பதே சிறந்ததாகும் என்பதே இதன் கருத்து.
இரு பாலரையும் இது குறிப்பதாக பெரும்பாலோர் விளக்கம் கூறியிருந்தாலும் இலக்கண அடிப்படையிலும், நியாயத்தின் அடிப்படையிலும் அது தவறாகும். ஆண்கள்தான் இதில் பெருந்தன்மை காட்ட வேண்டும் என்பது தான் இவ்வசனத்தின் (2:237) அறிவுரையாகும். விவாகரத்துச் செய்யப்பட்டு பாதிக்கப்பட்டவளாக பெண் இருக்கும்போது அவளை விட்டுக் கொடுக்குமாறு அல்லாஹ் எப்படி கூறுவான் என்பதைக் கூட அவர்கள் சிந்திக்கவில்லை.