14. ஆதம் மன்னிப்புக் கேட்டது எப்படி?
இறைவன் புறத்திலிருந்து சில வார்த்தைகளை ஆதம் (அலை) கற்றுக் கொண்டார் என்று 2:37 வசனத்தில் கூறப்படுகிறது. அந்த வார்த்தைகள் யாவை என்பது இவ்வசனத்தில் கூறப்படாவிட்டாலும் 7:23 வசனத்தில் கூறப்பட்டுள்ளது.
எங்கள் இறைவா எங்களுக்கே நாங்கள் அநீதியிழைத்து விட்டோம். நீ எங்களை மன்னித்து அருள் புரியாவிட்டால் நாங்கள் நட்டமடைந்தோராவோம் என்பது தான் அந்த வார்த்தைகள் என்று 7:23 வசனம் தெளிவுபடுத்துகிறது.
இதைக் கூறி இருவரும் மன்னிப்புக் கேட்டனர்; அல்லாஹ் அவர்களை மன்னித்தான் என்பதையும், தமது தவறை உணர்ந்து வருந்திக் கேட்கும்போது இறைவன் மன்னிப்பான் என்பதையும் 7:23 வசனத்திலிருந்து அறியலாம்.
தவறு செய்த ஆதம் (அலை) முஹம்மது நபியின் பொருட்டால் மன்னிப்புக் கேட்டதாக ஒரு கட்டுக் கதையைச் சிலர் கூறி வருகின்றனர். அந்தக் கட்டுக்கதை இது தான்:
ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்டவுடன் சொர்க்கத்தைப் பார்த்தார்களாம். அதன் நுழைவாயிலில் "லாயிலாஹ இல்லல்லாஹூ'' என்பதுடன் "முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்'' என்றும் எழுதப்பட்டிருந்ததாம். "இறைவா உன் பெயருடன் முஹம்மது என்ற பெயரைச் சேர்த்து எழுதியுள்ளாயே அவர் யார்?'' என்று ஆதம் (அலை) கேட்டார்களாம். அதற்கு இறைவன் "அவர் உமது வழித்தோன்றலாக வரவிருப்பவர். அவர் இல்லாவிட்டால் உன்னையே படைத்திருக்க மாட்டேன்'' என்று கூறினானாம். இதன் பின்னர் ஆதம் (அலை) இறைவனின் கட்டளையை மீறியதால் வெளியேற்றப்பட்டபோது சொர்க்கத்தில் முஹம்மது நபியைப் பற்றி எழுதப்பட்டிருந்தது அவர்களுக்கு நினைவுக்கு வந்ததாம். "இறைவா! அந்த முஹம்மதின் பொருட்டால் என்னை மன்னிப்பாயாக'' என்று அவர்கள் பிரார்த்தனை செய்ததால் உடனே அவர்களை அல்லாஹ் மன்னித்தானாம்.
இச்செய்தி திர்மிதீ, ஹாகிம் மற்றும் சில நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்செய்தி அப்துர்ரஹ்மான் பின் ஸைத் பின் அஸ்லம் என்பவர் வழியாகவே அறிவிக்கப்படுகிறது. இவர் இட்டுக்கட்டிக் கூறுவதில் பிரசித்தி பெற்றவர். எனவே இச்செய்தி இட்டுக்கட்டப்பட்டது என அறிஞர்கள் கூறியுள்ளனர்.
ஆதம் (அலை) அவர்கள் எந்தச் சொற்களைப் பயன்படுத்திப் பாவமன்னிப்புக் கேட்டர்கள் என்று திருக்குர்ஆன் (7:23) தெளிவாகக் கூறுகிறது. அதற்கு முரணாகவும் இச்செய்தி அமைந்துள்ளது. இட்டுக்கட்டப்பட்ட செய்தி என்பதற்கு இது மற்றொரு காரணம்.
எனவே இந்தக் கதையை நம்புவது குர்ஆனுக்கு எதிரானதாகும்.
மேலும் ஒருவர் பொருட்டால் அல்லாஹ்விடம் பிரார்த்திப்பது பொருளற்றது என்பதை அறிந்து கொள்ள 141வது குறிப்பையும் பார்க்கவும்.