76. ஆட்சி இல்லாமல் போர் இல்லை
திருக்குர்ஆனின் 2:247, 248 ஆகிய வசனங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முன் சென்ற ஒரு நபியின் வரலாற்றுச் செய்தியைக் கூறுகின்றன.
அந்த நபியின் சமுதாயத்தவர் எதிரிகளின் சொல்லொணாத துன்பத்திற்கு உள்ளாக்கப்பட்டு ஊரை விட்டும் விரட்டப்பட்டிருந்தனர். ஊரை விட்டு விரட்டப்பட்டிருந்தாலும் அந்த நபியின் தலைமையில் அவர்கள் எதிரிகளை எதிர்த்துப் போரிடவில்லை.
எதிரிகளை எதிர்த்துப் போரிடுவதற்கு தங்களுக்கு ஒரு மன்னரை நியமிக்குமாறு அந்த நபியிடம் அவரது சமுதாயத்தவர் வேண்டினார்கள். இந்த வேண்டுகோளுக்குப் பிறகு இறைவன் தாலூத் என்பவரை மன்னராக நியமித்து அவர்கள் மீது போர் செய்வதைக் கடமையாக்கினான் என்பது இவ்வசனங்கள் கூறும் வரலாறு.
இவ்வரலாற்றில் மிக முக்கியமான இரண்டு சட்டங்கள் பெறப்படுகின்றன.
1. படை திரட்டி யுத்தம் செய்வதென்றால் அதற்கு ஒரு ஆட்சியும், மன்னரும் இருப்பது அவசியம் என்பது இதில் பெறப்படும் முதலாவது சட்டம்.
ஏனெனில் அந்தச் சமுதாயம் மிகப் பெரும் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டிருந்தும், போர் செய்வதற்கான எல்லா நியாயங்களும் அவர்களிடம் இருந்தும் அவர்கள் போர் செய்யவில்லை.
அவர்களுக்குத் தலைமை தாங்கிய நபியும் போர் செய்யவில்லை. மாறாக ஒரு மன்னரை நியமிக்குமாறு அவர்கள் கோரிக்கை வைத்த பிறகு இறைவன் மன்னரை நியமித்தான். அதன் பிறகுதான் அவர்கள் போரிட்டுள்ளார்கள்.
போர் செய்வதற்கு ஆட்சியோ, மன்னரோ அவசியம் இல்லை என்றால் அவர்களின் கோரிக்கையை ஏற்று மன்னராக ஒருவரை இறைவன் நியமித்திருக்க மாட்டான்.
2. இறைத்தூதர்கள் உலகில் ஆட்சியைப் பிடிப்பதற்காக அனுப்பப்பட்டவர்களல்லர். மாறாக தமது சமுதாயத்தை ஓரிறைக் கொள்கைக்கும், ஒழுக்கத்திற்கும் அழைப்பதற்காகவே அனுப்பப்பட்டனர் என்பது இந்நிகழ்ச்சியிலிருந்து பெறப்படும் இரண்டாவது சட்டமாகும்.
ஏனெனில் இந்த நிகழ்ச்சியில் ஒரு இறைத்தூதர் உலகில் இருக்கும் போதே இறைத்தூதர் அல்லாத இன்னொருவரை இறைவன் மன்னராக நியமிக்கிறான். அந்த இறைத்தூதரும் அம்மன்னரின் கீழ் போரிடும் நிலையையும் ஏற்படுத்துகிறான். நபியையே மன்னராக இறைவன் நியமிக்கவில்லை.
ஜிஹாத் என்ற பெயரில் சில முஸ்லிம் பெயர்தாங்கிகள் வன்முறையில் இறங்குகின்றனர். போர் செய்வது குறித்த வசனங்களை தமது செயல்களுக்குச் சான்றாகவும் காட்டுகின்றனர். இவர்களின் செயல்கள் சரியானவை அல்ல என்பதை இந்த வரலாற்றில் இருந்து அறிந்து கொள்ளலாம்.
சிறிய இயக்கத்தை அமைத்துக் கொண்டு "அல்லாஹ்வின் பாதையில் போர் செய்வோம்'' என்று மக்களை மூளைச் சலவை செய்து ஆயுதம் தாங்கி வன்முறையில் ஈடுபடுவோர் ஜிஹாத் செய்பவர்கள் அல்லர். இவர்கள் பயங்கரவாதிகளே.
ஒரு இறைத்தூதர் தலைமையில் உருவான சமுதாயமாக இருந்தாலும் ஆட்சி அமைக்காமல் போர் செய்யக் கூடாது என்று இவ்வசனம் தெளிவாகச் சொல்வதே இவர்களின் வாதம் தவறு என்பதற்குத் தக்க சான்றாகும்.
போர், பயங்கரவாதம், ஜிஹாத் ஆகியவை குறித்து மேலும் அறிந்திட 53, 54, 55, 89, 197, 198, 199, 203, 359 ஆகிய குறிப்புகளைப் பார்க்கவும்.