288. வானம் பாதுகாக்கப்பட்ட முகடு

 

வானத்தை "பாதுகாக்கப்பட்ட முகடு" என்று இவ்வசனங்கள் (2:22, 21:32, 40:64, 52:5) கூறுகின்றன.

 

கூரை, முகடு என்று கூறுவதாக இருந்தால் மேலிருந்து வரும் ஆபத்துகளையும், கடும் வெப்பத்தையும் தடுத்து நிறுத்த வேண்டும்.

 

"நமக்கு மேல் ஒன்றுமே இல்லாதது போல் தோன்றும் வானம் எப்படிக் கூரையாக முடியும்?" என்று சிலர் எண்ணலாம்.

 

நவீன ஆய்வுகளை அடிப்படையாக வைத்துப் பார்த்தால் திருக்குர்ஆன் கூறுவது போல் வானம், பூமிக்குக் கூரையாக அமைந்துள்ள அதிசயத்தை அறிந்து கொள்ளலாம்.

 

(வானம் என்பது இரு அர்த்தங்களில் திருக்குர்ஆனில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அது குறித்து விரிவாக அறிய 507 வது குறிப்பைப் பார்க்கவும்)

 

சந்திரனில் பகல் நேர வெப்பம் 127 டிகிரி சென்டிகிரேடாக உள்ளது. சந்திரனுக்கு அருகிலுள்ள பூமியிலும் ஏறத்தாழ இதே அளவு வெப்பம் தான் இருக்க வேண்டும். ஆனால் சராசரியாக 40 டிகிரி அளவுக்குத்தான் பூமியில் வெப்பம் உள்ளது. இதற்குக் காரணம், நமக்கு மேலே உள்ள காற்றுக்கூரை தான்.

 

தரையிலிருந்து 16 கி.மீ. உயரம் வரை காற்றின் முதல் அடுக்கு உள்ளது. இது சூரியனிலிருந்து வரும் வெப்பத்தில் மூன்றில் இரண்டு பங்கைக் குறைத்து, சூரியனின் வெப்பம் முழுமையாக பூமியைத் தாக்காமல் காக்கின்றது.

 

இந்த அடுக்கில் நைட்ரஜன், ஆக்ஸிஜன், கார்பன் டை ஆக்ஸைடு அதிகம் உள்ளதால் இது கூரை போல் செயல்படுகிறது.

 

பூமியிலிருந்து 16. கி.மீ. முதல் 50 கி.மீ. வரை அடர்த்தி குறைவான, விமானம் பறப்பதற்கு ஏற்ற காற்று உள்ளது.

 

இந்த இரண்டாம் அடுக்கில் பூமியிலிருந்து 20 முதல் 35 கி.மீ. வரை ஓசோன் படலம் உள்ளது. சூரியனிலிருந்து ஏழு வண்ணங்களில் கதிர்கள் வெளிப்படுகின்றன. அதில் புறஊதாக் கதிர்கள் மிகவும் சக்தி வாய்ந்த உயிர்க் கொல்லியாகும். உயிரினங்களிலுள்ள அணுக்களை இக்கதிர் அழித்து விடும்.

 

தண்ணீரிலுள்ள கிருமிகளை அழிப்பதற்கு இந்தப் புறஊதாக் கதிர்களைப் பயன்படுத்தும் தொழில் நுட்பம் உள்ளது. இந்தக் கதிர்கள், தண்ணீரிலுள்ள அனைத்துக் கிருமிகளையும் முற்றிலுமாக அழிக்கும் அளவுக்குச் சக்தி வாய்ந்ததாக இருக்கின்றது.

 

இத்தகைய சக்தி வாய்ந்த புறஊதாக் கதிர்கள், உயிரினங்கள் மீது பட்டு உயிரினங்கள் அழிந்து விடாத வகையில் ஓசோன் படலத்தால் தடுக்கப்படுகின்றது.

 

இந்த வகையிலும் வானம் கூரையாக அமைந்துள்ளது.

 

பூமியிலிருந்து 50 கி.மீ. முதல் 80 கி.மீ. வரை நடுஅடுக்கு உள்ளது. விண்ணிலிருந்து அவ்வப்போது விண்கற்களும், வால்நட்சத்திரங்களும் மணிக்கு 43,000 முதல் 57,000 கி.மீ. வேகத்தில் பூமியை நோக்கி வருகின்றன.

 

இதில் சில கற்கள் 96,000 ச.மீ. பரப்பளவு கொண்டதாகும். இவ்வளவு பெரிய விண்கற்கள் சுமார் 50,000 கி.மீ. வேகத்தில் வந்து பூமியைத் தாக்கினால் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்குப் பெரும் சேதம் பூமியில் ஏற்படும். ஆனால் அப்படி நடக்காமல் சீறி வரும் விண்கற்களை இந்த நடுஅடுக்கு எரித்து, சாம்பலாக்கி விடுகின்றது.

 

தப்பித் தவறி சிதறுண்டு விழும் விண்கற்களின் வேகமும் மட்டுப்படுத்தப்படுகிறது.

 

இந்த வகையிலும் வானம் கூரையாகச் செயல்படுகின்றது.

 

பூமியிலிருந்து 80 கி.மீ. முதல் 1600 கி.மீ. வரை வெப்ப அடுக்கு உள்ளது. ஹீலியம், ஹைட்ரஜன் போன்ற வாயுக்கள் இங்கே அதிகம் உள்ளதால் இந்த அடுக்கு வெப்பப்படுத்தப்பட்டுக் கொண்டே இருக்கிறது. பூமியிலிருந்து அனுப்பப்படும் ஒலி, ஒளி அலைகள் இங்கே தடுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்படுகின்றன.

 

இந்த வகையில் பூமியை விட்டு ஒலி, ஒளி அலைகள் வெளியேறாமல் தடுக்கும் கூரையாகவும் இது அமைந்துள்ளது.

 

வானத்தில் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு வகையான தடுப்புகளை ஏற்படுத்தி விட்டுத்தான் வானத்தைக் கூரை என்று இறைவன் கூறுகிறான்.

 

திருக்குர்ஆன் இறைவனின் கூற்று என்பதற்கு இவ்வசனங்களும் சான்றாக உள்ளன.

 

 








free counters
மொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் | © 2019 tamilquran.in. Designed by Ahadh Media.
You 're visitors No. 270320