109. வாரிசுரிமையில் ஆண், பெண் வேறுபாடு
வாரிசுரிமைச் சட்டத்தில் ஆண்களுக்குக் கிடைப்பதில் பாதி, பெண்களுக்குக் கிடைக்கும் என்று இவ்வசனங்கள் (4:11, 4:176) கூறுகின்றன.
சொத்துரிமையில் ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே பாகுபாடு காட்டுவது நியாயமில்லை என்று சிலர் விமர்சனம் செய்கின்றனர். தக்க காரணங்களுடன் தான் இஸ்லாம் சொத்துரிமையில் வேற்றுமை காட்டுகிறது என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
1, இஸ்லாமிய சமூக, குடும்ப அமைப்பில் பெண்களை விட ஆண்கள் மீதுதான் அதிகச் சுமை சுமத்தப்பட்டுள்ளது. மற்ற சமூகங்களிலும் கூட பெரும்பாலும் இதே நிலைதான்.
2, பெற்றோர்கள் தள்ளாத வயதில் ஆண் மக்களால்தான் பராமரிக்கப்படுகின்றனர். பெண்கள் தமது கணவனின் பெற்றோர்களைத்தான் பராமரிக்க முடியும். பெற்றோர் பொருள் திரட்ட முடியாத நிலையை அடையும்போது அவர்களைக் கவனிப்பதும் ஆண் பிள்ளைகள் தான். எனவே அவர்களுக்கு இரு மடங்கு அளிப்பது நியாயமே!
3, ஒரு பெண் தனது புகுந்த வீட்டில் வாழ முடியாத நிலை ஏற்பட்டால் தனது சகோதரனின் தயவில் வாழும் நிலை ஏற்படும். "எனக்குக் கிடைத்த அளவு சொத்து உனக்கும் தானே கிடைத்தது; எனவே உன்னை நான் ஏன் பராமரிக்க வேண்டும்'' என்று சகோதரன் நினைக்காமல் அன்புடன் அவளை அரவணைக்க இந்த வேற்றுமை அவசியமாகிறது.
4, ஆண்களுக்குக் கிடைக்கும் அளவு பெண்களுக்கும் வழங்கப்பட்டால் அதைப் புகுந்த வீட்டில் தந்திரமாகவும், மிரட்டியும், ஏமாற்றியும் பறித்துக் கொள்வர். அனைத்தையும் புகுந்த வீட்டில் பறிகொடுத்து விட்டு, பிறந்த வீட்டுக்கு வந்தால் அவளுக்கு மரியாதை இருக்காது.
5, ஆணுக்குக் கிடைப்பதில் பாதி அளவு அவளுக்குக் கிடைத்தாலும் அதிகமாகப் பெற்ற சகோதரன் வழியாக வேறு விதத்தில் அவளுக்கே திரும்பக் கிடைக்கின்றது.
6, ஒவ்வொருவரும் தமது சொத்துக்கள் தமது குடும்பத்துக்குள்ளேயே சுற்றி வர வேண்டும் என ஆசைப்படுவர். பெண்களுக்குச் சம அளவில் சொத்துக் கிடைக்கும்போது அது இன்னொரு குடும்பத்துக்குப் போய்ச் சேர்ந்து விடும்.
7, தந்தையின் சொத்துக்களைப் பெருக்குவதில் பெண்களை விட ஆண்களே பெரிதும் பங்காற்றி வருகின்றனர். தந்தை விட்டுச் சென்ற சொத்துக்களில் அவர் சம்பாதித்ததை விட அவரது ஆண் பிள்ளைகளின் உழைப்பால் அதிகம் பெருகியிருக்கும். பெண் பிள்ளைகள் பெரும்பாலும் சொத்தை வளர்ப்பதில் பங்கெடுக்க மாட்டார்கள். இதுவும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.
8, இவை தவிர பெண்களுக்காக தந்தை நகைகளையும், ஆபரணங்களையும் செய்து போடுகிறார். இவை அலங்காரப் பொருட்களாக மட்டுமின்றி பெரிய சொத்தாகவும் உள்ளது. இது போன்ற பொருட்களை ஆண் மக்களுக்காக தந்தை வழங்குவதில்லை. இதுவும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.
9, ஆண்களுக்கும், பெண்களுக்கும் சமமான சொத்துரிமை வழங்கினால், பெற்றோரை முதிய வயதில் நாம் மட்டும் ஏன் கவனிக்க வேண்டும் என்ற சிந்தனை ஆண் மக்களுக்குத் தோன்றும். புகுந்த வீட்டில் வாழும் பெண்களால் பெற்றோரைக் கவனிக்க முடியாமல் போகும்.
இதனால் முதியோர் இல்லம் தான் பெருகும். பெற்றோர் நாதியற்று விடப்படுவார்கள். இவற்றைக் கவனத்தில் கொண்டே இஸ்லாம் இதில் வேற்றுமை காட்டியுள்ளது.