75. அழகிய கடன் என்றால் என்ன?
இவ்வசனங்களில் (2:245, 5:12, 57:11, 57:18, 64:17, 73:20) அல்லாஹ்வுக்கு அழகிய கடன் கொடுக்குமாறு கூறப்படுகிறது. இஸ்லாம் அல்லாத மதங்களில் கடவுளுக்குக் கொடுப்பது என்றால் வழிபாட்டுத் தலங்களில் உள்ள உண்டியலில் காணிக்கை செலுத்துதல், அல்லது பூசாரிகளின் கையில் கொடுத்தல் என்ற கருத்தில் சொல்லப்படுகிறது.
ஆனால் இஸ்லாத்தில் அல்லாஹ்வுக்குக் கொடுத்தல் என்பது ஏழைகளுக்குக் கொடுத்தல் என்ற பொருளில் பயன்படுத்தப்படுகிறது. பொருளாதாரம் சம்பந்தமாக அல்லாஹ்வுடன் தொடர்புபடுத்திக் கூறும் கட்டளைகள் அனைத்துக்கும் தேவையுடைய மனிதர்களுக்கு வழங்குவது என்பதே பொருளாகும்.
அல்லாஹ்வுக்காக ஆயிரம் ரூபாய் செலவு செய்வதாக ஒருவர் நேர்ச்சை செய்தால் அவர் அதை ஏழைகளுக்குத்தான் அளிக்க வேண்டும். அழகிய கடன் என்பதும் இது தான்.
இச்சொற்பிரயோகத்தின் மூலம் இறைவன் இரண்டு செய்திகளைக் கூறுகிறான். "நீங்கள் ஏழைகளுக்காக உதவினால் அதற்கான பிரதிபலனை நான் உங்களுக்குத் தருவேன்; பல மடங்காகப் பெருக்கித் தருவேன்; இதை எனக்குக் கொடுக்கப்பட்ட கடனாக நான் எடுத்துக் கொள்வேன்'' என்பது முதலாவது செய்தி.
ஏழைகளுக்கு உதவி விட்டு அவர்களிடம் சிலர் நன்றிக் கடன் எதிர்பார்ப்பர்; செய்த உதவிகளைச் சொல்லிக் காட்டுவர்; உதவி பெற்றவனை மட்டமாகக் கருதுவர். நாம் செய்த தர்மம் அல்லாஹ்வுக்கு நாம் கொடுத்த கடன் என்று நினைக்கும் போது, தர்மம் பெற்றவரிடம் பிரதிபலனையும், நன்றியையும் எதிர்பார்க்க மாட்டோம். இது இவ்வசனத்தில் கிடைக்கும் இரண்டாவது செய்தியாகும்.