168. குருடரும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் புறக்கணிப்பும்
இந்த அத்தியாயத்தில் (80:1-12) முக்கியமான ஒரு வரலாற்று நிகழ்ச்சி அமைந்திருக்கிறது. உம்மு மக்தூம் என்பவரின் மகன் அப்துல்லாஹ். இவர் கண் தெரியாதவர். அன்றைய சமுதாயத்தில் இழிவாகக் கருதப்பட்டவர். ஆரம்ப கால முஸ்லிம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உயர் குலத்தாரோடு பேசிக் கொண்டிருக்கும் சபைக்கு இவர் வந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஸலாம் கூறுகிறார்.
"உயர் குலத்தவர்களோடு பேசும்போது, இந்தச் சாதாரண மனிதர் வந்து இடையூறு செய்கிறாரே'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குக் கோபம் வந்து முகத்தைச் சுளித்து விடுகிறார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கோபம் அடைந்ததோ, முகத்தைச் சுளித்ததோ கண் தெரியாத அந்த மனிதருக்கு நிச்சயமாகத் தெரிந்திருக்காது.
ஆனால், உடனடியாக இறைவன் புறத்திலிருந்து எச்சரிக்கை வருகிறது.
உம்மை ஆர்வத்தோடு தேடி வருகிற இவரை உயர் குலத்தவர்களுக்காக விரட்டியடிக்கிறீரா? என்று அல்லாஹ் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கண்டிக்கிறான். இதைக் கண்டித்த பிறகு தான் அந்தக் குருடருக்கே இந்தச் செய்தி தெரிகிறது.
இது ஒரு உண்மையை நமக்குச் சொல்கிறது.
குர்ஆனை முஹம்மது நபி, தாமே சொந்தமாக உருவாக்கியிருந்தால் இவ்வளவு கடுமையாக விமர்சனம் செய்கின்ற ஒரு வாசகத்தைத் தமக்கு எதிராக அவர்கள் உருவாக்கியிருக்க முடியாது.
காலாகாலத்திற்கும் இந்த வேதத்தைப் படிப்பவர்கள் தம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்று நினைத்து இது போன்று உருவாக்காமல் இருந்திருப்பார்கள்.
இது இறைவன் புறத்திலிருந்து வந்தது என்பதால்தான் அந்தக் குருடர் மத்தியிலும், தம்மைப் பெரிதும் மதிக்கின்ற சமுதாயத்தின் மத்தியிலும் "அல்லாஹ்வே என்னைக் கண்டித்து விட்டான்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிரகடனம் செய்கிறார்கள்.
திருக்குர்ஆன் இறைவேதம் என்பதற்குரிய அறிவுப்பூர்வமான சான்றாக இதை எடுத்துக் கொள்ளலாம்.
அது மட்டுமின்றி நபிகள் நாயகமே ஆனாலும் அவர்கள் இறைவன் விரும்பாததைச் செய்வதற்கு அதிகாரம் இல்லை என்பதும் இதிலிருந்து தெரிகிறது.
செய்பவர் யார் என்று பார்த்து அல்லாஹ் நீதி வழங்க மாட்டான்; செய்யப்படும் காரியத்தைத்தான் அவன் பார்ப்பான் என்பதையும் இதிலிருந்து அறியலாம்.
ஒரு சாதாரண மனிதராகக் கருதப்பட்ட கண் தெரியாதவருக்காக தனது தூதரையே அல்லாஹ் கண்டிக்கிறான் என்றால் இது எவ்வளவு அற்புதமான ஒரு மார்க்கம்! இது போன்ற ஒரு கடவுள் கொள்கையினால் மனித குலத்திற்கு எவ்வளவு பயன் கிடைக்கும் என்பதைச் சிந்திக்க வேண்டும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் கூட இதன் பிறகு அந்தக் குருடரிடத்தில் முன்பிருந்ததை விட அதிக மரியாதையோடு நடந்து கொண்ட வரலாற்றையும் நாம் பார்க்க முடிகிறது.