361. நாளின் துவக்கம் எது?
இவ்வசனத்தில் (2:239) கூறப்படும் நடுத்தொழுகை என்பது அஸர் தொழுகைதான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்கள்.
இதைக் கொண்டு நாளின் துவக்கம் பகல்தான் என்று சிலர் புதிதாக வாதிடத் துவங்கியுள்ளனர்.
இரவில் இருந்துதான் நாள் ஆரம்பமாகிறது என்றால் மக்ரிப் முதல் தொழுகையாக ஆகிறது. இதன்படி ஸுப்ஹுத் தொழுகைதான் நடுத்தொழுகையாக ஆகும்.
ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவ்வாறு கூறாமல் அஸர் தொழுகையை நடுத்தொழுகை என்று கூறியுள்ளனர். நாளின் ஆரம்பம் காலை என்றால் தான் அஸர் தொழுகை, நடுத்தொழுகையாக வர முடியும். எனவே ஸுப்ஹில் இருந்து தான் நாள் ஆரம்பமாகிறது என்பதற்கு நடுத்தொழுகைக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அளித்த விளக்கம் ஆதாரமாக அமைந்துள்ளது என்று இவர்கள் வாதிடுகின்றனர்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலம் முதல் இன்று வரை முஸ்லிம் சமுதாயத்தில் மக்ரிப் தான் நாளின் துவக்கம் என்பது கருத்து வேறுபாடின்றி ஏற்றுக் கொள்ளப்பட்டு வரும் நிலையில் இவர்கள் நடுத்தொழுகைக்கு நபிகள் நாயகம் (ஸல்) அளித்த விளக்கத்தைச் சான்றாகக் காட்டி, ஸுப்ஹ் தான் நாளின் துவக்கம் என்று வாதிடுகின்றனர்.
இதுவரை கருத்து வேறுபாடின்றி ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றை மறுத்து, புதிதாக ஒரு கருத்தை நிறுவ விரும்புபவர்கள், தங்களின் வாதத்தைச் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கின்ற தெளிவான சான்றுகளைக் காட்ட வேண்டும்.
மேற்கண்ட வசனம் இவர்களின் கருத்தைத் தெளிவாக அறிவிக்கும் வகையில் இருக்கவில்லை. நடு என்று பொருள் செய்யப்படும் உஸ்தா என்ற சொல் பல அர்த்தங்களில் பயன்படுத்தப்படும் சொல்லாகும்.
நடுத்தொழுகை என்பதில் நடு என்பது வரிசைக் கிரமத்தை மட்டும் குறிக்காது. நடுத்தரம், சிறப்பு என்ற கருத்திலும் இச்சொல் பயன்படுத்தப்படும்.
2:239 வசனத்தில் நடுத்தொழுகை என்ற சொல் சிறப்பிற்குரியது என்ற பொருளிலேயே பயன்படுத்தப்பட்டு உள்ளது. இதை ஹதீஸ் கலைமேதை ஹாபிழ் இப்னு ஹஜர் அஸ்கலானீ தமது புகாரியின் விரிவுரை நூலான பத்ஹுல் பாரியில் தெளிவுபடுத்துகிறார்கள்.
ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்களின் கூற்றுக்கு குர்ஆன் வசனங்களும், ஹதீஸ்களும் சான்றாக உள்ளன. அல்உஸ்தா என்ற சொல்லின் மூலச்சொல்லிலிருந்து பிறந்த சொற்களுக்கு 'நடுவில் உள்ளது' என்ற பொருள் இருப்பது போல் 'சிறந்தது' என்ற பொருளும் உள்ளதை 68:28, 2:143 ஆகிய வசனங்களில் இருந்து அறியலாம்.
இரவில் தொழுகை கடமையாக்கப்பட்டது. இவ்வாறு கடமையாக்கப்பட்ட பிறகு வந்த முதல் தொழுகை ஸுப்ஹு தான். கடமையாக்கப்பட்ட வரிசைப்படி பார்த்தால் அஸர் நடுத் தொழுகையாகின்றது என்று சில அறிஞர்கள் கூறுகின்றனர்.
இவ்விரண்டும் எந்தச் சான்றுகளுடனும் மோதாமலும் அறிவுக்குப் பொருத்தமான வகையிலும் அமைந்துள்ளன.
ஆனால் இவர்கள் புதிதாகக் கண்டுபிடித்த மூன்றாவது கருத்து, நாளின் துவக்கம் மக்ரிப் தான் எனத் தெளிவாகக் கூறும் ஏராளமான சான்றுகளை மறுப்பதாக அமைந்துள்ளது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் மக்ரிப் தான் ஒரு நாளின் துவக்கம் என்று கருதப்பட்டு வந்ததற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன.
அப்துல்லாஹ் பின் உனைஸ் (ரலி) கூறுகிறார்கள்:
"லைலதுல் கத்ர் இரவு பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் யார் விளக்கம் கேட்பது?'' என்று நாங்கள் பேசிக் கொண்டோம். இது ரமளான் மாதம் 21 ஆம் காலையில் நடந்தது. நான் புறப்பட்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் மக்ரிப் தொழுகையில் பங்கு கொண்டேன். லைலதுல் கத்ர் பற்றிக் கேட்டு வர என்னை பனூஸலமா கூட்டத்தினர் அனுப்பியதைத் தெரிவித்தேன். இது எத்தனையாவது இரவு என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டனர். 22ஆம் இரவு என்று நான் குறிப்பிட்டேன். இதுதான் அந்த (லைலதுல் கத்ர்) இரவு என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். பின்னர் திரும்பி வந்து அடுத்த இரவும் எனக் கூறி 23ஆம் இரவைக் குறிப்பிட்டனர்.
நூல்: அபூதாவூத் 1171
இந்த ஹதீஸ் கூறுவது என்ன?
அப்துல்லாஹ் பின் உனைஸ் (ரலி) 21 ஆம் நாள் காலையில் புறப்பட்டு மக்ரிபில் நபிகள் நாயகத்தைச் சந்திக்கிறார். நாளின் ஆரம்பம் ஸுப்ஹு தான் என்றால் அவர் அடைந்த மக்ரிபை 21 ஆம் நாள் மக்ரிப் எனக் கூறி இருக்க வேண்டும். ஆனால் 22 ஆம் நாள் மக்ரிப் என்று கூறுகிறார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் அதை அங்கீகரிக்கிறார்கள். இதிலிருந்து மக்ரிப் தான் நாளின் துவக்கம் என்பதைச் சந்தேகமற அறியலாம்.
21ஆம் நாள் ஸுப்ஹுக்குப் பின் வரும் மக்ரிப், 21ஆம் நாள் மக்ரிப் என்று சொல்லப்பட்டால் ஸுப்ஹிலிருந்து நாள் ஆரம்பமாகி விட்டது என்று சொல்லலாம். 21ஆம் நாள் ஸுப்ஹுக்குப் பின் வரக்கூடிய மக்ரிப் 22ஆம் நாள் மக்ரிப் என்று இந்த ஹதீஸில் சொல்லப்பட்டுள்ளதால் மக்ரிபில் தான் தேதி மாறுகிறது என்பது உறுதியாகத் தெரிகிறது.
மற்றொரு ஹதீஸையும் பாருங்கள்!
தண்ணீரில் பேரீச்சம் பழத்தை ஊறவைத்து மறுநாள் அந்தத் தண்ணீரை அருந்துவது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழக்கம். இது பற்றி இப்னு அப்பாஸ் (ரலி) பின்வருமாறு கூறுகிறார்கள்:
திங்கட்கிழமை இரவு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்காகத் தண்ணீரில் பேரீச்சம் பழத்தை நாங்கள் ஊற வைப்போம். அதைத் திங்கள்கிழமையும், செவ்வாய்க்கிழமை அஸர் வரையும் அருந்துவார்கள். நூல்: முஸ்லிம் 4083
திங்கட்கிழமை இரவில் ஊறவைத்து திங்கள்கிழமை பகலில் அருந்துவார்கள் என்று இந்த ஹதீஸ் கூறுகிறது.
நாளின் ஆரம்பம் ஸுப்ஹ் அல்ல என்பதற்கு இது தெளிவான ஆதாரமாக அமைந்துள்ளது. நாளின் ஆரம்பம் ஸுப்ஹ் என்றால் திங்கட்கிழமை இரவுக்கு அடுத்து வரும் காலையை செவ்வாய்க் கிழமை என்று சொல்ல வேண்டும். அப்படி இந்த ஹதீஸில் சொல்லப்படவில்லை. திங்கட்கிழமை இரவுக்குப் பின்வரக் கூடிய பகல் திங்கட்கிழமை என்றே இந்த ஹதீஸில் குறிப்பிடப்படுவதால் ஸுப்ஹ் வந்தும் கிழமை மாறவில்லை என்று தெளிவாகத் தெரிகிறது.
மக்ரிபில் இருந்து தான் நாள் ஆரம்பமாகிறது என்பதைப் பின்வரும் ஹதீஸில் இருந்தும் அறியலாம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ரமளான் மாதத்தின் நடுவில் உள்ள பத்து நாட்கள் இஃதிகாப் இருப்பது வழக்கம். அவ்வழக்கப்படி ஒரு ஆண்டு இஃதிகாப் இருந்தனர். 21 ஆம் இரவு வந்தபோது, - அந்த இரவுக்குரிய காலையில் தான் இஃதிகாபிலிருந்து வெளியேறுவது அவர்களின் வழக்கம் - "என்னுடன் இஃதிகாப் இருந்தவர்கள் கடைசிப் பத்து நாட்களும் இஃதிகாப் இருக்கட்டும். அவ்விரவு எனக்குக் காட்டப்பட்டு பின்னர் மறக்கடிக்கப்பட்டு விட்டது. அன்று காலையில் சேற்றிலும், தண்ணீரிலும் ஸஜ்தாச் செய்வதாகக் (கனவு) கண்டேன். எனவே "கடைசிப் பத்து நாட்களில் அதைத் தேடுங்கள்! ஒவ்வொரு ஒற்றைப்படை நாட்களிலும் தேடுங்கள்'' என்றனர். அன்றிரவு மழை பொழிந்தது. பள்ளியின் பந்தலிலிருந்து தண்ணீர் வழிந்தது. 21ஆம் நாள் காலையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நெற்றியில் சேற்றையும், தண்ணீரையும் என் கண்கள் கண்டன. நூல் : புகாரி 2027
ஸுப்ஹில் இருந்துதான் நாள் ஆரம்பமாகிறது என்ற கருத்துப்படி 21ஆம் இரவுக்குரிய காலைப் பொழுதைப் பற்றிக் கூறுவதாக இருந்தால் அடுத்த நாளுக்குரிய காலை என்றோ, 22ஆம் நாளுக்குரிய காலை என்றோ கூறியிருக்க வேண்டும். அப்படிக் கூறாமல் 21 ஆம் நாளுக்கு உரிய காலைப் பொழுது என்று இந்த ஹதீஸில் சொல்லப்பட்டுள்ளது. 21ஆம் நாளை அடுத்து வரும் காலைப் பொழுது அதே நாளுக்கு உரியது என்று சொல்லப்படுவதால் காலைப் பொழுதில் தேதி மாறவில்லை என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.
அடுத்து இந்த ஹதீஸில் 21ஆம் இரவு வந்தபோது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்களுக்கு அறிவுரை கூறினார்கள் என்று சொல்லப்படுகிறது. அதன் முடிவில் "அன்றிரவு மழை பொழிந்தது. பள்ளியின் பந்தலிலிருந்து தண்ணீர் வழிந்தது. 21ஆம் நாள் காலையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நெற்றியில் சேற்றையும், தண்ணீரையும் என் கண்கள் கண்டன" என்று சொல்லப்படுகிறது.
அதாவது அன்றிரவில் அதாவது 21ஆம் இரவில் மழை பொழிந்தது. அம்மழையின் காரணமாக 21ஆம் காலையில் நபிகளின் நெற்றியில் சேறு படிந்தது என்று இந்த வாசகம் கூறுகிறது.
21ஆம் இரவுக்குப் பின்னர் வரக் கூடிய காலைப் பொழுது 21ஆம் நாளாகவே இருந்துள்ளது என்பதை இதிலிருந்து அறிகிறோம். அதாவது மக்ரிபில் எந்தத் தேதி இருந்ததோ அதே தேதிதான் ஸுப்ஹிலும் நீடித்துள்ளது. ஸுப்ஹ் நேரம் வந்தும் தேதி மாறவில்லை. நாளின் துவக்கம் காலைப் பொழுது அல்ல என்பதற்கு இதுவும் தெளிவான ஆதாரமாக அமைந்துள்ளது.
நாளின் துவக்கம் ஸுப்ஹு என்றால் 21 ஆம் இரவுக்கு அடுத்து வரும் ஸுப்ஹை 22வது நாள் என்று தான் கூற வேண்டும். ஆனால் நபித்தோழரோ 21 ஆம் இரவுக்கு அடுத்து வரும் ஸுப்ஹை 21வது நாள் ஸுப்ஹ் எனக் கூறுகிறார். இதிலிருந்து நாளின் துவக்கம் இரவு தான் என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.
மேலும் அன்று காலை தான் இஃதிகாபை விட்டு வெளியேறுவது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழக்கம் என்ற வாசகமும் கவனிக்கத்தக்கது. ஸுப்ஹிலிருந்து தான் நாள் துவங்குகிறது என்றால் "மறுநாள் காலையில்'' வெளியேறுவார்கள் என்றுதான் கூற வேண்டும். "அன்று காலையில்'' வெளியேறுவார்கள் எனக் கூற முடியாது. அன்று காலையில் என்று கூறியிருப்பதால் நாளின் துவக்கம் இரவுதான் என்பது சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபணமாகின்றது.
மற்றொரு ஹதீஸையும் பாருங்கள்!
ஒவ்வொரு வியாழனின் மாலை வெள்ளி இரவன்று ஆதமுடைய மக்களின் அமல்கள் அல்லாஹ்விடம் எடுத்துக்காட்டப்படும். (அப்போது) குடும்ப உறவை முறித்தவனின் அமலை அல்லாஹ் ஏற்றுக் கொள்ள மாட்டான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூற்கள்: அஹ்மத் 9883, அல்அதபுல் முஃப்ரத் 61 , ஷுஅபுல் ஈமான் 7966
இந்த ஹதீஸ் சொல்வது என்ன? வியாழன் மாலைக்குப் பின் வியாழன் இரவு என்று சொல்லப்பட்டால் இரவில் தேதி மாறவில்லை; காலையில் உள்ள தேதியே நீடிக்கிறது என்று சொல்லலாம். ஆனால் இந்த ஹதீஸில் வியாழன் மாலைக்குப் பின் வரக் கூடிய இரவு வெள்ளி இரவு என்று சொல்லப்படுகிறது. அதாவது மக்ரிப் வந்தவுடன் அடுத்த நாள் ஆரம்பித்து விட்டது என்பதற்கு இது தெளிவான சான்றாக அமைந்துள்ளது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்துக்குப் பிறகு நபித்தோழர்கள் காலத்திலும் மக்ரிபில் தான் நாள் ஆரம்பிக்கிறது என்ற கோட்பாடுதான் இருந்துள்ளது என்பதற்கும் ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. நான், அபூபக்ர் (ரலி) அவர்களிடம் சென்றபோது "நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை எத்தனை துணிகளில் கஃபன் செய்திருந்தீர்கள்?'' என்று அவர் கேட்டார். "வெண்மையான மூன்று பருத்தித் துணிகளில் கஃபன் செய்தோம். அவற்றில் சட்டையோ, தலைப்பாகையோ இல்லை என்றேன்'. அபூபக்ர் (ரலி) அவர்கள் என்னிடம் "நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்தக் கிழமையில் மரணமடைந்தார்கள்? எனக் கேட்டார்கள். நான் திங்கள் கிழமை என்றேன். "இன்று என்ன கிழமை? என்று அவர்கள் கேட்டதும் நான் திங்கள் கிழமை என்றேன். அதற்கவர்கள் "இன்றிரவுக்குள் (எனது மரணம்) நிகழும் என நான் எண்ணுகிறேன்.' என்று கூறிவிட்டு, தாம் நோயுற்றிருந்தபோது அணிந்திருந்த ஆடையைப் பார்த்தார்கள். அதில் குங்குமப்பூவின் கறை படிந்திருந்தது. "இதைக் கழுவி இத்துடன் இன்னும் இரு துணிகளையும் சேர்த்து அவற்றில் என்னைக் கஃபனிடுங்கள் எனக் கூறினார்கள். நான், இது பழையதாயிற்றே என்றேன். அதற்கவர்கள் "இறந்தவரை விட உயிருடனிருப்பவரே புத்தாடை அணிய அதிகத் தகுதி படைத்தவர். மேலும் அது (இறந்த) உடலிலிருந்து வழியும் சீழுக்குத் தான் போகும் என்றார்கள். பிறகு அன்று மாலை வரை மரணிக்கவில்லை. செவ்வாய் இரவில் தான் மரணித்தார்கள். காலை விடிவதற்கு முன் அடக்கம் செய்யப்பட்டார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி 1384
அபூபக்ர் (ரலி) அவர்கள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறந்த கிழமையாகிய திங்கட்கிழமை இறக்க ஆசைப்பட்டார்கள். இன்று இரவு வருவதற்கு முன் மரணித்தால் திங்கள் கிழமை மரணித்தவராக ஆகலாம் என்று கருதினார்கள். ஆனால் அந்தப் பகலில் மரணிக்காமல் இரவு வந்த பின் தான் மரணித்தார்கள். அந்த இரவுக்குப் பெயரிடும்போது ஆயிஷா (ரலி) அவர்கள் திங்கள் இரவு எனக் கூறவில்லை. மாறாக செவ்வாய் இரவு என்று குறிப்பிடுகிறார்கள்.
அதாவது திங்கள் கிழமை பகலுக்குப் பின் வரக் கூடிய இரவைப் பற்றி திங்கள் கிழமை இரவு என்று சொல்லப்பட்டால் இரவில் கிழமை மாறவில்லை என்று கூறலாம். காலையில் தான் தேதி மாறுகிறது என்று சொல்லலாம். ஆனால் திங்கள் கிழமைக்கு பகலுக்குப் பின் வரக்கூடிய இரவை செவ்வாய் இரவு என்று இந்த ஹதீஸில் சொல்லப்படுகிறது. அதாவது திங்கள் கிழமை என்பது மக்ரிபுக்கு முன் முடிந்து விட்டது. மக்ரிப் ஆனதும் செவ்வாய்க் கிழமை ஆரம்பித்து விட்டது என்று இந்த ஹதீஸ் தெள்ளத் தெளிவாக கூறுகிறது. மற்றொரு செய்தியைப் பாருங்கள்!
அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்கள் வெள்ளிக் கிழமை இரவிற்குரிய வியாழன் மாலை ஆகும்போது எழுந்து "சொல்லில் மிக உண்மையான சொல் அல்லாஹ்வின் சொல்லாகும்....'' என்று கூறுவார்.
அறிவிப்பவர்: பிலாத் பின் இஸ்மா நூல்: தாரமீ 209
வியாழன் மாலைக்குப் பின் வருவது வெள்ளிக்கிழமை இரவு என்று இந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. அதாவது மக்ரிப் நேரம் வந்ததும் தான் தேதி மாறுகிறது. இது தான் நபித்தோழர்கள் காலத்து நடைமுறை என்று இதிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.
ஆயிஷா (ரலி) கூறுவதைப் பாருங்கள்!
நீ வெள்ளிக்கிழமை இரவை அடைந்து விட்டால் ஜும்ஆத் தொழாமல் (பயணமாக) வெளியே செல்லாதே!
நூல்: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா 5114
காலையில் தான் நாள் ஆரம்பமாகிறது என்ற கருத்துப் படி வெள்ளிக்கிழமை இரவுக்குப் பின் வரக் கூடிய காலை நேரம் சனிக்கிழமையாக ஆகும். ஆனால் வெள்ளிக்கிழமை இரவுக்குப் பின் வரக் கூடிய பகலும் வெள்ளிக்கிழமையாக இருப்பதால் தான் ஜும்மா தொழாமல் பயணம் போகாதே என்று ஆயிஷா (ரலி) கூறுகிறார்கள்.
ஸுப்ஹ் நேரத்தில் நாள் ஆரம்பமாகவில்லை என்பதற்கு இந்தச் செய்தியும் ஆதாரமாக அமைந்துள்ளது.
இதுபோல் இன்றும் ஏராளமான சான்றுகள் மக்ரிப்தான் நாளின் துவக்கம் என்பதற்குச் சான்றாக உள்ளன.
பல அர்த்தம் கொண்ட நடுத்தொழுகை என்ற சொல்லை வைத்து, நாளின் துவக்கத்தை முடிவு செய்வதை விட கிழமையும், தேதியும் குறித்துப் பேசும் மேற்கண்ட ஹதீஸ்களின் அடிப்படையில் முடிவு செய்வதே சரியானதாகும்.