145. யாராலும் கொல்ல முடியாத தலைவர்
இவ்வசனத்தில் 5:67 நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை யாரும் கொல்ல முடியாது என்ற கருத்து சொல்லப்பட்டுள்ளது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அன்றைய சமுதாயத்தில் இருந்த அனைத்துத் தீமைகளையும் தைரியமாக எதிர்த்ததால் ஏராளமான எதிரிகளைச் சம்பாதித்து வைத்திருந்தனர். அவர்களை எப்படியாவது கொன்று விட வேண்டும் என்று பல வகையிலும் முயற்சிகள் நடந்தன.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கோட்டை, கொத்தளங்களில் ஒளிந்து கொண்டிருக்கவில்லை. குடிசையில் தான் வசித்தார்கள். வாயிற்காப்போன் யாரும் இருக்கவில்லை. வீதியில் சாதாரணமாக நடமாடினார்கள். உயிரைக் காக்க எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை.
எந்தக் கொள்கையிலும் சமரசம் செய்து கொள்ளவில்லை. போர்க்களங்களிலும் பங்கெடுத்து, கொல்லப்படுவதற்கான வாய்ப்பை தாமாகவே எதிரிகளுக்கு வழங்கி இருந்தார்கள். ஆனாலும் அவர்களை யாரும் கொல்ல முடியவில்லை.
தினமும் ஐந்து நேரத் தொழுகை நடத்துவதற்காக பள்ளிவாசலுக்கு வந்து மக்களோடு மக்களாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கலந்து கொள்வார்கள்.
அன்றைய நிலையில் மிக எளிதாக ஒருவரைக் கொல்வது என்றால் அதில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முதலிடத்தில் இருந்தார்கள். அப்படியிருந்தும் "உம்மை இறைவன் காப்பான்'' என்று இவ்வசனத்தில் சொல்லப்படும் முன்னறிவிப்பு நிறைவேறியது.
இப்படி அறைகூவல் விட்டதை முறியடிப்பதற்காகவாவது எதிரிகள் அவரைக் கொன்றிருந்தால் இது பொய்யான மார்க்கம் என்று நிரூபித்திருப்பார்கள். ஆனாலும் இயலவில்லை.
இது இறைவனது வார்த்தையாகவும், உத்தரவாதமாகவும் இல்லாதிருந்தால் முஹம்மது நபியவர்கள் என்றோ கொல்லப்பட்டிருப்பார்கள். அவர்கள் கொல்லப்படாமல் இயற்கையாக மரணித்தது திருக்குர்ஆன் இறைவேதம் என்பதற்கான நிரூபணங்களில் ஒன்றாக அமைந்துள்ளது.
என்னை எவரும் கொல்ல முடியாது என்று அறிவித்து விட்டு, சர்வ சாதாரணமாக இன்றைய உலகில் எவரும் நடமாட முடியாது. அதுவும் தீய சக்திகளை எதிர்த்துப் போரிடுபவர் இப்படி அறிவித்தால் அடுத்த நாளே அவரது கதை முடிக்கப்பட்டு விடும்.
அன்றைய நிலையில் முஹம்மது நபியைப் போல் சர்வசாதாரணமாகவும், எவ்விதப் பாதுகாப்பு ஏற்பாடுமின்றியும், மக்களோடு மக்களாகப் பழகும் ஒருவரை எளிதாகக் கொல்ல முடியும். ஆனாலும் தன்னைக் கொல்ல முடியாது என்று அறிவித்து, தாம் கூறுவது இறைவாக்கு என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நிரூபித்தார்கள்.