346. கியாமத் நாளில் மூர்ச்சையாவதிலிருந்து விதிவிலக்கு
இவ்வசனத்தில் (39:68) உலகத்தை அழிப்பதற்கான முதல் ஸூர் ஊதப்பட்டதும் வானங்களிலும், பூமியிலும் உள்ள அனைவரும் மூர்ச்சையாவார்கள் என்று கூறிய இறைவன், அல்லாஹ் நாடியவர்களைத் தவிர என்று விதிவிலக்கையும் குறிப்பிடுகிறான்.
வானத்தில் உள்ளவர்களில் சிலரும், பூமியில் உள்ளவர்களில் சிலரும் முதல் ஸூரின்போது மூர்ச்சையாக மாட்டார்கள் என்பது இதிலிருந்து தெரிகிறது.
அவன் யாருக்கு விதிவிலக்கு அளிக்க நாடியிருக்கிறான் என்பதைத் திருக்குர்ஆனும், நபிமொழியும் விளக்குகின்றன.
முதல் ஸூர் ஊதப்பட்டு, வானங்கள் வேறு வானமாக மாற்றப்படும்போது மலக்குகள் அதன் ஓரத்தில் இருப்பார்கள் என்றும், அந்நாளில் இறைவனின் அர்ஷை எட்டு வானவர்கள் சுமப்பார்கள் என்றும் 69:17 வசனம் கூறுகிறது.
வானத்திலுள்ள மற்றவர்கள் மூர்ச்சையானாலும் அர்ஷைச் சுமக்கும் வானவர்களும், இதர வானவர்களும் மூர்ச்சையாக மாட்டார்கள் என்று இவ்வசனம் தெளிவாகச் சொல்கிறது. அல்லாஹ் நாடியவர்களைத் தவிர என்பதற்கு இதை விளக்கமாக எடுத்துக் கொள்ளலாம்.
அது போல், "மனிதர்களை எழுப்புவதற்கான ஸூர் ஊதப்பட்டதும், நான் தான் முதலில் எழுவேன். ஆனால் எனக்கு முன்பே மூஸா நபி அர்ஷைப் பிடித்துக் கொண்டு நிற்பார்கள். இவ்வுலகில் இறைவனைப் பார்க்க ஆசைப்பட்டு அவர்கள் ஏற்கனவே மூர்ச்சையாகி விட்டதால் இப்போது மூர்ச்சையாகாமல் இருந்தாரா? அல்லது மூர்ச்சையாகி எனக்கு முன் எழுந்தாரா? என்று எனக்குத் தெரியாது'' என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (பார்க்க: புகாரி 2411, 2412, 3408, 6517, 6518, 7472)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய இந்த இரண்டில் முதலாவது காரணமாக இருந்தால் மூர்ச்சையாவதிலிருந்து பூமியில் விதிவிலக்குப் பெற்றவர்கள் என்பது மூஸாவைக் குறிக்கும்.