378. நபிகள் நாயகம் (ஸல்) பல திருமணம் செய்தது ஏன்?

 

இவ்வசனத்தில் (33:50) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மட்டும் எவ்வித எண்ணிக்கைக் கட்டுப்பாடின்றி திருமணங்கள் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மட்டும் அளிக்கப்பட்ட சிறப்பு அனுமதி எனவும் கூறப்பட்டுள்ளது.

 

திருக்குர்ஆன் இறைவேதம் எனவும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைத்தூதர் எனவும் ஏற்றுக் கொள்ள எண்ணற்ற சான்றுகள் குர்ஆனில் இருந்தாலும் இந்த ஒரு விஷயம் மட்டும் முஸ்லிமல்லாத மக்களுக்கு உறுத்தலாகவே அமைந்துள்ளது.

 

அதிகமான பெண்களுடன் வாழ்வதற்காக முஹம்மது நபி தமக்கு வசதியான இந்தச் சட்டத்தை உருவாக்கிக் கொண்டார் என்று சிலர் விமர்சனமும் செய்கின்றனர்.

 

தனக்கு வசதியான சட்டங்களை தனக்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உருவாக்கிக் கொண்டார்கள் என்ற வாதம் முற்றிலும் தவறாகும். ஏனெனில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சிறப்பாக இன்னும் பல சட்டங்கள் உள்ளன. அவை யாவும் அவர்களுக்கு மட்டும் அதிகச் சிரமத்தைச் சுமத்துபவையாக உள்ளன.

 

* ஸகாத் எனும் அரசுக் கருவூலத்திலிருந்து தேவையுள்ளவர்கள் உதவி பெறலாம் என்று சட்டம் கொண்டு வந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாமும், தமது குடும்பத்தினரும் அரசுக்கருவூலத்தில் இருந்து எதையும் பெறுவது கூடாது என்ற விதியை ஏற்படுத்தினார்கள்.

 

* தனது மரணத்துக்குப் பின் தோன்றக் கூடிய தனது வழித்தோன்றல்கள் அனைவரையும் ஸகாத் நிதியில் உதவி பெறக்கூடாது என்ற சட்டம் கட்டுப்படுத்தும் என்று சட்டம் கொண்டு வந்தார்கள்.

 

* தமக்குச் சொந்தமான உடமைகள் அனைத்துக்கும் தமது வாரிசுகள் உரிமை கொண்டாடக் கூடாது என்று அறிவித்து அரசாங்கத்தில் சேர்த்து விட வேண்டும் என்று தனக்குப் பாதகமாக சிறப்புச் சட்டம் போட்டார்கள்.

 

* தாமும் தமது பரம்பரையினரும் யாரிடமும் எக்காலத்திலும் தர்மம் பெறக் கூடாது என்பதும் அவர்கள் தமக்காகப் போட்டுக் கொண்ட சிறப்புச் சட்டங்களில் ஒன்றாகும்.

 

* மற்றவர்கள் ஐந்து நேரம் தொழ வேண்டுமென்றால் தமக்கு மட்டும் நள்ளிரவில் தொழும் ஆறாவது தொழுகையை மேலதிகமாகக் கடமையாக்கிக் கொண்டார்கள்.

 

* இரவு பகல் 24 மணி நேரமும் மற்றவர்கள் நோன்பு நோற்கக் கூடாது என்று தடுத்து விட்டு அந்தச் சிரமத்தைத் தமக்கு மட்டும் சுமத்திக் கொண்டார்கள்.

 

இப்படி பல விஷயங்களில் அவர்கள் தமக்கு மட்டும் சிறப்புக் சட்டமாக அறிவித்தவை சலுகைகளாக இருக்கவில்லை. அவர்களுக்குச் சிரமமானவைகளாகவே இருந்தன.

 

மேலும் தம்மை இறைவன் கண்டித்ததாக அவர்கள் அறிவித்த பல வசனங்கள் அவர்களின் கவுரவத்தைப் பாதிக்கும் வகையில் இருந்தன. அவை அனைத்தையும் மக்கள் மத்தியில் வைத்தார்கள்.

 

முன்னுரையில் இது இறைவேதம் என்ற தலைப்பில் எதிர்பார்ப்புகள் இல்லை என்ற உட்தலைப்பில் இதை விளக்கியுள்ளோம். 168 வது குறிப்பிலும் இது விளக்கப்பட்டுள்ளது.

 

இப்படி வாழ்ந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதிகமான பெண்களை அனுபவிக்க தமக்கு வசதியான சட்டங்களைப் போட்டுக் கொண்டார்கள் என்று சொல்ல எந்த நியாயமும் இல்லை.

 

இறைவன் அவர்களைக் கண்டித்தால் அதையும் மக்களிடம் சொல்கிறார்கள். கூடுதல் சுமையை இறைவன் சுமத்தினால் அதையும் ஏற்றுக் கொண்டு மக்களிடம் சொல்கிறார்கள். அது போல் மனைவியர் விஷயத்தில் கட்டுப்பாடு இல்லை என்ற சட்டமும் இறைவன் புறத்திலிருந்து வந்ததால் அதையும் மக்கள் மத்தியில் சொல்லி விடுகிறார்கள்.

 

திருமணம் செய்யாமல் அந்தப் புறத்தில் அந்தக் கால மன்னர்கள் சல்லாபத்தில் ஈடுபட்டது போல் அவர்கள் நடக்கவில்லை,

 

இந்த விஷயங்களைக் கவனத்தில் வைத்துக் கொண்டு, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பல திருமணம் செய்து கொள்ள அனுமதிக்கப்பட்டது ஏன் என்பதைப் பார்ப்போம்.

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காமத்தின் காரணமாக பல திருமணங்களைச் செய்யவில்லை என்று நிச்சயமாக நம்மால் சொல்ல முடியும். ஏனெனில், அவர்கள் பிறந்தது முதல் தம்மை இறைத்தூதர் என்று அறிவிக்கும் வரை சொந்த ஊரிலேயே வாழ்ந்தார்கள்.

 

எந்தவொரு மனிதனும், தன்னுடைய நாற்பது வயது வரை அப்பழுக்கில்லாமல் வாழ்வது சாத்தியமற்றதாகும். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது நாற்பதாவது வயதில் தம்மை இறைத்தூதர் என்று மக்களிடம் சொன்னபோது, அதை நிரூபிப்பதற்கான முக்கியச் சான்றாக, தம்முடைய முந்தைய வாழ்க்கையைத்தான் முன்வைத்தார்கள்.

 

"உங்களுடன் பல ஆண்டுகள் நான் வாழ்ந்திருக்கிறேன். என்னிடம் தரங்கெட்ட எந்தச் செயலையாவது நீங்கள் கண்டதுண்டா? 40 ஆண்டுகள் கட்டுப்பாடான, தூய்மையான வாழ்க்கை வாழ்ந்த நான் பொய் சொல்வேனா?' என்ற அடிப்படையில் தான் தமது நம்பகத் தன்மையை மக்களிடம் நிரூபித்தார்கள்.

 

10:16 வசனத்திலும் 212 வது குறிப்பிலும் இது பற்றி விபரமாக அறியலாம்.

 

தம்மை ஆரம்பம் முதல் கண்டு வந்த அந்த மக்கள் மத்தியில் அந்த அளவு ஒழுக்கமான வாழ்வை நபிகள் நாயகம் (ஸல்) வாழ்ந்ததால் தான் இப்படி அவர்களால் அறைகூவல் விட முடிந்தது.

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கொள்கையை ஏற்காதவர்கள் கூட, புது மார்க்கம் என்பதற்காக எதிர்த்தார்களே தவிர, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நடத்தையில் ஐயம் எழுப்பி யாரும் எதிர்க்கவில்லை.

 

பாலியல் குற்றங்களைச் செய்யத் தூண்டும் இளம் பருவத்தில் அப்பழுக்கற்ற வாழ்க்கை வாழ்ந்தவருக்கு, 60 வயதில் திடீரென்று பெண் மோகம் ஏற்பட்டிருக்குமா என்று சிந்தித்தாலே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல திருமணங்கள் செய்ததற்குக் காமம் காரணமல்ல என்பதை விளங்கலாம்.

 

மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது 25வது வயதில் தம்மை விட வயதில் மூத்தவரான கதீஜா (ரலி) அவர்களைத் திருமணம் செய்தார்கள். தமது 50 வயது வரை அந்த ஒரு மனைவியுடன் மட்டுமே வாழ்ந்தார்கள்.

 

இல்லற சுகம் அதிகம் தேவைப்படுகின்ற 25 முதல் 50 வயது வரையிலான காலகட்டத்தில் தம்மை விட அதிக வயதுடையவருடன் மட்டும் வாழ்ந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெண்மோகம் கொண்டவராக எப்படி இருக்க முடியும்?

 

கதீஜா (ரலி) அவர்கள் மரணித்த பிறகு, தமது 50வது வயதில் தம்மை விட ஐந்து வயது அதிகமான, 55 வயதான ஸவ்தாவை மணந்தார்கள்.

 

பெண்மோகம் தான் இத்திருமணத்திற்குக் காரணம் என்றால் 55 வயதுடைய ஒரு பெண்ணை யாரும் திருமணம் செய்ய மாட்டார்கள்.

 

இதன் பின்னர் சிறுமியான ஆயிஷா (ரலி) அவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திருமணம் செய்தார்கள். இத்திருமணத்திற்கும் பெண் மோகத்தைக் காரணமாகக் கூற முடியாது. ஏனெனில் பெண் மோகத்தில் திருமணம் செய்பவர் உடனே அனுபவிக்கும் வகையில்தான் பெண்களைத் தேர்வு செய்வார். உடலுறவுக்குத் தகுதி பெறாத சிறுமியை யாரும் மணந்து கொள்ள மாட்டார்கள்.

 

சிறுமியை ஏன் திருமணம் செய்ய வேண்டும் என்ற கேள்வியும் பரவலாக எழுப்பப்படுகிறது. எனவே இது பற்றியும் விபரமாக அறிந்து கொள்வது நல்லது.

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைத்தூதராக நியமிக்கப்பட்ட உடன் இஸ்லாத்தின் அனைத்துச் சட்டங்களும் ஒரே நேரத்தில் அருளப்படவில்லை. சிறிது சிறிதாக 23 ஆண்டுகளில் ஒவ்வொரு சட்டமாகவே அவர்களுக்கு அருளப்பட்டது.

 

எனவே இறைவனிடம் இருந்து எது குறித்து சட்டம் அருளப்படவில்லையோ அந்த விஷயங்களில் அந்தச் சமுதாயத்தில் நிலவிய பழக்க வழக்கங்களின்படியே அவர்கள் நடந்து கொண்டனர். அன்றைய மக்கள் மதுபானம் அருந்துவோராக இருந்தனர். அது குறித்து இறைவனின் தடை உத்தரவு வரும் வரை இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்களும் தங்களின் பழைய வழக்கத்தையே தொடர்ந்தனர். இறைவன் தடை செய்யாததால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் அதைத் தடை செய்யவில்லை.

 

அது போல் தான் சிறுவயதுப் பெண்ணைத் திருமணம் செய்வது அன்றைய அரபுகள் மத்தியில் சாதாரணமாக நடந்து வந்தது. சிறுமிகளைத் திருமணம் செய்யக் கூடாது என்ற தடை விதிக்கப்படுவதற்கு முன் அந்த சமுதாய வழக்கப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் சிறு வயதுடைய ஆயிஷா (ரலி) அவர்களைத் திருமணம் செய்தார்கள்.

 

பின்னர் திருமணத்திற்கான ஒழுங்குகள் இறைவன் புறத்தில் இருந்து அருளப்பட்டன. விபரமில்லாத சிறுமிகளைத் திருமணம் செய்வதை இஸ்லாம் முற்றாகத் தடை செய்தது.

 

இதைப் பின்வரும் சான்றுகளிலிருந்து அறியலாம்.

 

நம்பிக்கை கொண்டோரே! பெண்களை வலுக்கட்டாயமாக அடைவது உங்களுக்கு அனுமதி இல்லை என்று 4:19 வசனம் கூறுகிறது.

 

அப்பெண்கள் உங்களிடம் கடுமையான உடன்படிக்கையை எடுத்துள்ளார்கள் என்று 4:21 வசனம் கூறுகிறது.

 

கன்னிப் பெண்ணாயினும், விதவையாயினும் சம்மதம் பெற வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியபோது, "கன்னிப் பெண் (சம்மதம் தெரிவிக்க) வெட்கப்படுவாளே?''என்று கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "அவளது மௌனமே அவளது சம்மதமாகும்'' என்று கூறினார்கள்.

 

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),

 

நூல்: புகாரி 6971, 6964, 5137

 

என் தந்தை எனது சம்மதம் பெறாமல் மணமுடித்து வைத்தார். அதனை விரும்பாத நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து இதைக் கூறியபோது, அத்திருமணத்தை ரத்து செய்தார்கள்.

 

அறிவிப்பவர்: கன்ஸா பின்த் கிதாம் (ரலி)

 

நூல்: புகாரி 5139, 6945, 6969

 

பெண்களுக்குக் கடமைகள் இருப்பது போல அவர்களுக்கு உரிமைகளும் சிறந்த முறையில் உள்ளன.

 

திருக்குர்ஆன் 2:228

 

திருமணம் வாழ்க்கை ஒப்பந்தம் எனவும், பெண்களுக்கு கடமைகளும், உரிமைகளும் உள்ளன என்றும், அவர்களின் சம்மதம் பெற வேண்டும் என்றும் மேற்கண்ட சான்றுகளில் இருந்து அறிந்து கொள்ளலாம். ஒப்பந்தம் என்றால் அந்த ஒப்பந்தத்தின் பொருளை இருவரும் அறிய வேண்டும். சம்மதம் என்றால் எதற்குச் சம்மதிக்கிறோம் என்று இருவருக்கும் தெரிய வேண்டும். கடமைகளும் உரிமைகளும் உள்ளன என்றால் அவற்றைத் தெரிந்து கொள்ளும் அளவுக்கு முதிர்ச்சி அடைய வேண்டும்.

 

சிறுவனுக்கோ, சிறுமிக்கோ திருமணம் செய்யக் கூடாது என்ற சட்டம் இதன் மூலம் நடைமுறைக்கு வந்தது.

 

இந்தச் சட்டம் இறைவன் புறத்திலிருந்து வருவதற்கு முன்னர் அந்தச் சமுதாயத்தில் பரவலாக பால்ய வயது திருமணம் நடந்து வந்தது. அந்த வழக்கப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் திருமணம் செய்தார்கள்.

 

இத்திருமணம் நடந்த பிறகும் ஆயிஷா (ரலி) அவர்கள் தமது தந்தை வீட்டில்தான் இருந்தார்கள்.

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவைத் துறந்து, மதீனா சென்ற பிறகுதான் ஆயிஷா (ரலி) பருவமடைகிறார்கள். அதன் பிறகுதான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆயிஷாவுடன் இல்லறம் நடத்தினார்கள்.

 

காமத்திற்காகத் திருமணம் செய்பவர் உடனடியாக அதை நிறைவேற்றிக் கொள்ளத்தக்க பெண்ணைத் தான் திருமணம் செய்வார்.

 

அபூபக்ர் (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உயிர் நண்பராக இருந்ததால் தமக்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும் ஒரு உறவை ஏற்படுத்த வேண்டும் என்று ஆசைப்பட்டு, அபூபக்ர் (ரலி) அவர்கள் வற்புறுத்தியதன் பேரில் அவரது மகளாகிய ஆயிஷா (ரலி) அவர்களை அன்றைய சமுதாயத்தில் இது வழக்கத்தில் இருந்ததால் அவர்கள் மணந்தார்கள்.

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது 56ஆம் வயதில் ஹஃப்ஸா (ரலி) அவர்களைத் திருமணம் செய்தார்கள். இவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மற்றொரு உயிர் நண்பரான உமர் (ரலி) அவர்களின் புதல்வியாவார்.

 

ஹஃப்ஸா (ரலி) அவர்களது கணவர் உஹதுப் போரில் வீர மரணமடைந்ததால் விதவையானார்கள்.

 

தமது விதவை மகளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மணந்து கொண்டால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் தமது உறவு பலப்படும் என்று விரும்பிய உமர் (ரலி) அவர்கள் வற்புறுத்தியது தான் இத்திருமணத்திற்குக் காரணம்.

 

நபிகள் நாயகம் (ஸல்) தமது 56ஆம் வயதில் ஸைனப் பின்த் ஹுஸைமாவை மணந்தார்கள். இவர் அதற்கு முன்பு ஒன்றன் பின் ஒன்றாக மூன்று கணவர்களுக்கு வாழ்க்கைப்பட்டு, மூவரும் அடுத்தடுத்து மரணித்ததால் விதவையாக இருந்தார். ஏறக்குறைய நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வயதை ஒத்தவராக ஸைனப் பின்த் ஹுஸைமா (ரலி) இருந்தார்கள். மூன்று கணவருடன் வாழ்ந்த, சுமார் 56 வயதுடைய ஒரு பெண்ணை, யாரேனும் பெண்மோகத்திற்காகத் திருமணம் செய்வார்களா?

 

அடிமையாக இருந்த ஸைத் என்பாரை, அன்றைய அரபுகளின் வழக்கப்படி நபிகள் நாயகம் (ஸல்) வளர்ப்பு மகனாகத் தத்தெடுத்துக் கொண்டார்கள். (தத்தெடுத்தல் பின்னர் தடுக்கப்பட்டு விட்டது.)

 

உயர்ந்த குலம் என்று கருதப்பட்ட தமது குலத்தைச் சேர்ந்தவரும், தமது மாமி மகளும், தமது பொறுப்பில் வளர்ந்தவருமான ஸைனப் பின்த் ஜஹ்ஷ் அவர்களை, முன்னாள் அடிமையான ஸைதுக்கு மணமுடித்து வைத்தார்கள். இதன் மூலம் அன்றைய அரபுகளிடம் இருந்த குலப்பெருமைக்கு சமாதி கட்டினார்கள்.

 

ஆனால் இவ்விருவருக்கும் ஒத்துப்போகவில்லை. இருவரும் இணைந்து வாழ்வதற்கு நபிகள் நாயகம் (ஸல்) எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. மனைவியை விவாகரத்துச் செய்வதில் ஸைத் உறுதியாக இருந்தார். ஸைனப் (ரலி) 35வது வயதில் விவாகரத்துச் செய்யப்பட்டு, திக்கற்றவராக இருந்தார். எனவே அவரை நபிகள் நாயகம் (ஸல்) திருமணம் செய்தார்கள்.

 

இதற்கும் பெண்மோகத்தைக் காரணமாகக் கூற முடியாது. ஏனெனில் ஸைனப் மீது அவர்கள் ஆசைப்பட்டிருந்தால் 18 முதல் 30 வயது வரை பெண்களின் அழகு பிரகாசிக்கும் காலகட்டத்தில் ஸைனபை மணந்திருப்பார்கள்.

 

தமது பொறுப்பிலிருந்த உறவுக்காரப் பெண்ணுக்குத் தாம் செய்து வைத்த திருமண வாழ்வு மகிழ்ச்சிகரமாக அமையவில்லையே என்ற அனுதாபமே இத்திருமணத்திற்குக் காரணமாக இருக்க முடியும்.

 

அடுத்ததாக, உம்மு ஸலமா (ரலி) அவர்களை மணந்து கொண்டார்கள். இவரது கணவர் அபூஸலமா (ரலி) மரணித்த பின் ஏழாவதாக இவரைத் திருமணம் செய்து கொண்டார்கள். உம்மு ஸலமாவை நபிகள் நாயகம் (ஸல்) திருமணம் செய்வதாகக் கூறியபோது, "நான் வயது முதிர்ந்தவளாக இருக்கிறேன்; என் வயதுடையவர்கள் திருமணம் செய்து கொள்வதில்லை. குழந்தை பெறும் வயதையும் நான் கடந்து விட்டேன்'' என்று அவர்கள் பதிலளித்தார்கள். இத்தகைய நிலையில் உள்ள ஒரு பெண்ணை, பெண்மோகத்திற்காக யாரேனும் மணப்பார்களா?

 

நபிகள் நாயகம் (ஸல்) தமது 59ஆம் வயதில் ஜுவைரிய்யா அவர்களை மணந்து கொள்கிறார்கள்.

 

பனூ முஸ்தலக் என்ற எதிரிகள் மீது நபிகள் நாயகம் (ஸல்) போர் தொடுத்தார்கள். போரில் கைதிகளாகப் பிடிபட்டவர்களில் ஜுவைரிய்யாவும் இருந்தார். இவர் அக்கூட்டத்தின் தலைவருடைய மகளாவார். அன்றைய வழக்கப்படி போரில் கைது செய்யப்பட்டவர்கள் போராளிகளுக்குப் பிரித்துக் கொடுக்கப்படுவார்கள். ஜுவைரிய்யா (ரலி), ஸாபித் பின் கைஸ் என்ற நபித்தோழருக்கு வழங்கப்பட்டார். அவரைப் பெற்றுக் கொண்ட ஸாபித் பின் கைஸ் (ரலி), "ஏழு வெள்ளிக் காசுகள் தந்து விட்டு நீ விடுதலையாகிக் கொள்'' என்று ஜுவைரிய்யாவிடம் தெரிவித்தார். ஜுவைரிய்யா, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, "நான் சமுதாயத்தில் முக்கியப் பிரமுகரின் மகளாக இருக்கிறேன். எனவே எனக்காக ஏழு வெள்ளிக்காசுகள் கொடுத்து விடுதலைக்கு உதவுங்கள்'' என்று கேட்டார். அவ்வாறே அவரை விடுவித்து நபிகள் நாயகம் (ஸல்) மணந்து கொண்டார்கள்.

 

இத்திருமணமும் பெண் மோகத்திற்காக நடந்திருக்க முடியாது. ஏனெனில் ஜுவைரிய்யா அவர்கள் பெண்மோகம் கொண்டவர்களை ஈர்க்கும் வசீகரத்துடன் இருந்து, நபிகள் நாயகமும் அதில் ஆசைப்பட்டிருந்தால் அவரை ஸாபித்துக்குக் கொடுக்காமல் தாமே எடுத்துக் கொண்டிருப்பார்கள்.

 

மேலும் அன்றைய சமூகத்தில் இளம் பெண்கள் அதிக விலைக்கும் வயதானவர்கள் குறைந்த விலைக்கும் விற்கப்பட்டனர். ஜுவைரிய்யாவைப் பெற்றுக் கொண்ட ஸாபித் வெறும் ஏழு வெள்ளிக் காசுகளே கேட்கிறார். இவ்வாறு அற்ப விலையைப் பெற்றுக் கொண்டு அவர் விடுதலை செய்ய முன்வந்ததே ஜுவைரிய்யா அவர்கள் முதிய வயதுடையவராக இருப்பார் என்பதைச் சொல்கிறது.

 

அடுத்ததாக, தமது 60வது வயதில் உம்மு ஹபீபா அவர்களைத் திருமணம் செய்தார்கள். இவரது தந்தை முஸ்லிம்களின் எதிரிகளான மக்காவாசிகளுக்குத் தலைவராகத் திகழ்ந்த அபூ சுஃப்யானாவார். உம்மு ஹபீபா இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதால் தந்தையின் கொடுமைக்கு ஆளானார்கள். எனவே தமது கணவர் அப்துல்லாஹ்வுடன் அபீசீனியாவுக்கு நாடு துறந்து சென்றார்கள்.

 

அதன்பின் இவரது கணவர் அப்துல்லாஹ் இஸ்லாத்தை விட்டு கிறித்தவ மதத்திற்கு மாறி விட்டார். இன்னொரு நாட்டில் நிர்கதியாக விடப்பட்டு, பெற்ற தந்தையை எதிர்த்து நிற்கும் தியாகப் பெண்மணிக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்தில் அவரைத் தாமே திருமணம் செய்து கொள்வதாக நஜ்ஜாஷி என்ற அபீசீனிய மன்னருக்கு நபிகள் நாயகம் (ஸல்) தகவல் அனுப்பினார்கள்.

 

உம்மு ஹபீபாவை நஜ்ஜாஷி, மதீனாவுக்கு அனுப்பி வைத்த பின் அவரை நபிகள் நாயகம் (ஸல்) திருமணம் செய்து கொண்டார்கள். இதற்கும் பெண் மோகம் காரணமாக இருக்க முடியாது. ஏனெனில் 15 ஆண்டுகளுக்கு முன்பே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பிரிந்து உம்மு ஹபீபா, தம் கணவருடன் அபீசீனியாவிற்குச் சென்று அங்கேயே தங்கி விட்டார்கள். அவர்களது தோற்றமோ, அழகோ எப்படியிருக்கும் என்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குத் தெரியாது. நிர்கதியாக நிற்கும் ஒரு தியாகப் பெண்மணி என்பது மட்டும் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குத் தெரியும். அதற்காகத்தான் அவரைத் திருமணமும் செய்தார்கள்.

 

தமது 60வது வயதில் ஸஃபிய்யா அவர்களை மணந்தார்கள். இவர் கைபர் பகுதியைச் சேர்ந்தவராவார். கைபர் மீது நபிகள் நாயகம் (ஸல்) போர் தொடுத்து வெற்றியடைந்தபோது யூதத் தலைவர்களில் முக்கியமானவர்கள் கொல்லப்பட்டனர். அவர்களில் ஸஃபிய்யாவின் கணவர் கினானாவும் ஒருவர். கைது செய்யப்பட்ட ஸஃபிய்யாவை அன்றைய வழக்கப்படி திஹ்யா என்பவருக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழங்கினார்கள். அப்போது நபித்தோழர்கள், "இவர் இந்தச் சமுதாயத்தின் தலைவருடைய புதல்வியாக இருக்கிறார். இவரைத் தங்களைப் போன்ற ஒரு தலைவர் எடுத்துக் கொள்வதே சிறந்தது' என்று கூறினார்கள். இதை ஏற்றுக் கொண்டு அவரை விடுதலை செய்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள். ஜுவைரிய்யா (ரலி) அவர்களைத் திருமணம் செய்வதற்குச் சொன்ன காரணமே இதற்கும் பொருந்தும்.

 

இறுதியாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதே 60வது வயதில் மைமூனா (ரலி) அவர்களைத் திருமணம் செய்தார்கள். இவரது வயது குறித்துத் தெளிவான சான்று கிடைக்கவில்லை என்றாலும் ஏற்கனவே அடுத்தடுத்து இரண்டு கணவர்களை மணந்து விதவையாக இருந்தார் என்பதற்குச் சான்று உள்ளது. எனவே இவரும் நடுத்தர வயதைக் கடந்தவர் என்பதை யூகிக்க முடியும்.

 

மைமூனா (ரலி), நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பெரிய தந்தை அப்பாஸின் மனைவிக்குச் சகோதரியாவார். பெரிய தந்தையின் வற்புறுத்தலின் பெயரிலும், மைமூனாவே வந்து கேட்டுக் கொண்டதன் பேரிலும் இவரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மணந்து கொண்டார்கள்.

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெண்மோகத்தின் காரணமாக அதிகத் திருமணங்களைச் செய்யவில்லை என்பதை மேலே நாம் கூறிய இந்த வரலாற்றுக் குறிப்புகளைப் பார்ப்பவர்கள் விளங்கிக் கொள்ளலாம்.

 

அப்படியானால் இந்தச் சிறப்பு அனுமதிக்குக் காரணம் என்ன?

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை ஏராளமான நபித்தோழர்கள் வழியாகத்தான் முஸ்லிம்கள் அறிந்து கொள்கின்றனர். ஒவ்வொரு நபித்தோழரும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நடவடிக்கைகளைப் பார்த்து அறிவிக்கின்றனர். அதே சமயம், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது வீட்டில், இல்லற வாழ்க்கை நடத்தியது, உண்டது, பருகியது, இரவு வணக்கம் செய்தது போன்ற செய்திகளை நபித்தோழர்களால் அறிந்து கொள்ள முடியாது.

 

அவர்களுடன் வீட்டில் குடும்பம் நடத்தும் மனைவியரால் மட்டும் தான் இது சாத்தியமாகும். எனவே அவர்களது மனைவியர் மூலமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கையில் நடந்த அனைத்து விஷயங்களும் உலக மக்களுக்குச் சென்றடைய வேண்டும் என்பதற்காக இறைவனின் தூதர் என்ற அடிப்படையில் இறைவன் இந்த ஏற்பாட்டைச் செய்திருக்கலாம் என்றே தோன்றுகிறது.

 

ஒரே ஒரு மனைவி மட்டும் இருந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பிறகு அவர் மட்டும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறித்த செய்திகளை அறிவித்தால் அதில் நம்பகத் தன்மை குறையும். அவர் தவறான தகவலைக் கூறிவிட்டால் அதைச் சான்றாகக் கொண்டு முஸ்லிம்கள் நடக்கும் நிலை ஏற்படும்.

 

பல மனைவியர் இருந்தால் எந்த மனைவியும் கூடுதல் குறைவாகச் சொல்வதற்குத் தயங்குவார். ஒருவர் தவறாகச் சொல்லி மற்றவர்கள் அதை மறுத்து உண்மையை விளக்குவார்கள். இதனால் நபிகள் நாயகம் கொண்டு வந்த மார்க்கத்திற்கு பாதுகாப்பு அதிகரிக்கிறது. இது போன்ற காரணங்களுக்காகத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல திருமணங்கள் செய்தார்கள் என்பதை மேற்கண்ட சான்றுகளில் இருந்து அறியலாம்.

 

 








free counters
மொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் | © 2019 tamilquran.in. Designed by Ahadh Media.
You 're visitors No. 294706