424. இத்தா காலத்தில் வீட்டை விட்டு வெளியேற்றக் கூடாது
மனைவியைப் பிடிக்காதபோது விவாகரத்துச் செய்வதற்கு ஆண்களுக்கு மூன்று வாய்ப்புகள் தரப்பட்டுள்ளன.
ஒரு முறை மனைவியை விவாகரத்துச் செய்தவுடன் அடியோடு திருமண உறவு முடிந்து விடாது. முதல் தடவை விவாகரத்துச் செய்த பின் மனைவிக்கு மூன்று மாதவிடாய் ஏற்படுவதற்குள் மனைவியுடன் சேர்ந்து கொள்ளலாம். மனைவி கர்ப்பிணியாக இருந்தால் அவள் பிரசவிப்பதற்குள் சேர்ந்து கொள்ளலாம் என்று 65:4 வசனம் கூறுகிறது.
இந்தக் காலக்கெடுவுக்குள் மனைவியுடன் கணவன் சேரவில்லையானால் அவர்களுக்கிடையே திருமண உறவு நீங்கிவிடும். ஆயினும் இருவரும் மீண்டும் சேர்ந்து வாழவிரும்பினால் மீண்டும் அவர்கள் திருமணம் செய்து கொள்ளலாம். இதற்கு எந்தத் தடையும் இல்லை.
முதல் தலாக் கூறி இருவரும் சேர்ந்து கொண்ட பிறகு அவர்களுக்கிடையே மீண்டும் சேர்ந்து வாழ முடியாத நிலை ஏற்பட்டால் மார்க்கம் கூறியுள்ள எல்லா வழிமுறைகளையும் கையாண்ட பின் இறுதியாக மீண்டும் விவாகரத்துச் செய்யலாம்.
முன்பு கூறியது போல குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் சேர்ந்து கொள்ள விரும்பினால் சேர்ந்து கொள்ளலாம். அந்தக் காலக்கெடு கடந்த பின் இருவரும் சேர்ந்து வாழ விரும்பினால் மீண்டும் திருமணம் செய்து சேர்ந்து கொள்ளலாம்.
இவ்வாறு மூன்றாம் முறை சேர்ந்து வாழும்போது மீண்டும் அவர்களுக்கிடையே நல்லிணக்கம் ஏற்படாது போனால் மூன்றாம் தடவையாக விவாகரத்துச் செய்யலாம். இதுதான் இறுதி வாய்ப்பாகும்.
மூன்றாவது தடவை விவாகரத்துச் செய்து விட்டால் மனைவியுடன் சேர்ந்து வாழ்வதற்கான வாசல் அடைக்கப்பட்டு விடுகிறது.
ஆயினும் விவாகரத்துச் செய்யப்பட்டவள் இன்னொருவனை மணந்து அவனும் அவளை விவாகரத்துச் செய்துவிட்டால் இந்த நேரத்தில் மட்டும் முதல் கணவன் மறுபடியும் அவளது சம்மதத்துடன் அவளைத் திருமணம் செய்து கொள்ளலாம்.
விவாகரத்து செய்தவுடன் மூன்று மாத காலம் மனைவி மறுமணம் செய்யாமல் காத்திருக்கும் காலம் இத்தா எனப்படும்.
இப்படி தலாக் சொன்னபின் மனைவி, கணவனின் வீட்டில் தான் இருப்பாள். அவளைக் கணவன் வெளியேற்றக் கூடாது. மனைவியும் வெளியேறக் கூடாது.
திருமண பந்தம் இன்னும் முழுமையாக நீங்காததால் மனைவிக்கு கணவன் வீட்டில் இருக்க முழு உரிமை உண்டு. இதனால் தான் உங்கள் வீடுகளில் இருந்து அவர்களை வெளியேற்றாதீர்கள் என்று சொல்லாமல் உங்கள் மனைவியரை அவர்களின் வீடுகளில் இருந்து வெளியேற்றாதீர்கள் என்று அல்லாஹ் சொல்கிறான். திருமண பந்தம் முழுமையாக நீங்காததால் அவளுக்கும் அந்த வீட்டில் உரிமை உண்டு என்பதற்காகவே அவர்களின் வீடுகள் என்று அல்லாஹ் சொல்கிறான்.
வீட்டை விட்டு வெளியேற்றக் கூடாது என்பதில் அவளது வாழ்க்கைச் செலவுக்கும் கணவன் பொறுப்பாளி என்பதும் அடக்கமாகும்.
விவாகரத்து செய்த பின்னும் ஏன் கணவன் வீட்டில் இத்தா காலம் வரை மனைவி தங்க வேண்டும் என்பதற்கான காரணத்தையும் அல்லாஹ் இவ்வசனத்தில் சொல்கிறான். இதன் பின்னர் ஏதேனும் ஒரு (நல்ல) காரியத்தை அல்லாஹ் உண்டாக்குவான் என்பது தான் அந்தக் காரணம்.
விவாகரத்துச் செய்த உடன் மனைவி தனது தாய்வீட்டுக்குப் போய்விட்டால் அந்தப் பிரிவு நிரந்தரமாகி விடக்கூடிய வாய்ப்பு அதிகம் உள்ளது. கணவன் வீட்டிலேயே அவள் இருந்தால் இருவருக்கும் இடையே உறவு ஏற்பட்டு முதல் விவாகரத்து முடிவுக்கு வந்து விடுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.
இருவருக்கும் இடையே இணைப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பளிக்கும் முகமாகவே வீட்டை விட்டு வெளியேற்றாதீர்கள் என்று ஆண்களுக்கும், வெளியேறாதீர்கள் என்று பெண்களுக்கும் அல்லாஹ் கட்டளை பிறப்பிக்கிறான்.
மனைவி விபச்சாரம் செய்த காரணத்துக்காக விவாகரத்து நடந்தால் மட்டும் விவாகரத்து நடந்தவுடன் அவர்களை வெளியேற்றலாம் என்பதும் இதில் சொல்லப்பட்டுள்ளது.
இத்தாவின் காலம் முடிந்தவுடன் மனைவியுடன் சேர்ந்து கொண்டால் பிரச்சினை இல்லை. சேராவிட்டால் அழகிய முறையில் பிரிந்துவிட வேண்டும் என்று அடுத்த வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான். அவர்கள் நிரந்தரமாகப் பிரிந்து விடுவதால் இதற்கு மேல் அவர்கள் கணவன் வீட்டில் இருக்க முடியாது.
இந்த வசனத்தையும் இதைத் தொடர்ந்து வரும் ஐந்து வசனங்களையும் சிலர் தவறாகப் புரிந்து கொண்டு விவாகரத்து செய்யப்பட்ட பெண்களுக்கு மூன்று மாதம் செலவுக்குக் கொடுப்பது தவிர வேறு எதுவும் கொடுக்கத் தேவையில்லை என்று சட்டம் எழுதி வைத்துள்ளனர்.
இது இன்னமும் மனைவியாக இருக்கிறாள் என்பதற்காகக் கொடுக்க வேண்டிய செலவினமாகும். பல ஆண்டுகள் குடும்பம் நடத்திவிட்டு விவாகரத்து செய்வதால் பெண்ணுக்கு ஏற்படும் பாதிப்புக்கான இழப்பீடாக அது ஆகாது என்பதைக் கவனத்தில் கொள்ளத் தவறி விட்டனர்.
இத்தா குறித்த மேலதிக விபரங்களை அறிந்திட 69, 360, 404 ஆகிய குறிப்புகளைப் பார்க்கவும்.