49. இறைவனுக்கு இடைத்தரகர் இல்லை

 

இவ்வசனங்கள் (2:186, 4:108, 7:56, 11:61, 20:46, 34:50, 40:60, 50:16, 56:85, 57:4, 58:7) இறைவனுக்கு இடைத்தரகர் இல்லை என்ற இஸ்லாத்தின் தெளிவான கடவுள் கொள்கையை எடுத்துச் சொல்கின்றன.

 

பொதுவாகக் கடவுளை மனிதனால் எளிதில் அணுக முடியாது என்று மக்கள் கருதுகின்றனர். இஸ்லாத்தைத் தவிர எல்லா மதங்களிலும் இவ்வாறு தான் போதிக்கப்படுகிறது.

 

கடவுளை மனிதன் எளிதில் அணுக முடியாது எனும்போது கடவுளுக்கும், மனிதனுக்கும் இடையே இடைத் தரகர்கள் நுழைகின்றனர். கடவுளின் பெயரால் மக்களை ஏமாற்றிச் சுரண்டுகின்றனர்.

 

ஆன்மிகத்தின் பெயரால் நடக்கும் மோசடிகளுக்கும், பெண்கள் மானம் இழப்பதற்கும் இந்த நம்பிக்கைதான் முழு முதற்காரணமாக அமைகின்றது.

 

ஆனால் இஸ்லாம் இந்த நம்பிக்கையைத் தகர்க்கிறது. கடவுள் மனிதனுக்கு மிகவும் அருகில் இருக்கிறான் என்றும், எளிதில் யாரும் தன்னை அணுக முடியும் என்றும் இறைவன் கூறுவதாக இஸ்லாம் பிரகடனம் செய்கிறது. ஆன்மிகத்தின் பெயரால் நடக்கும் அனைத்துச் சுரண்டலும் இதனால் ஒழிக்கப்படுகிறது.

 

ஒவ்வொருவரும் தத்தமது தேவைகளை இறைவனிடம் நேரடியாகத்தான் கேட்க வேண்டுமே தவிர இன்னொருவர் வழியாகக் கோரிக்கை அனுப்பக் கூடாது. அந்த இன்னொருவரும் கடவுளுக்கு அடிமைதான் என்பது இஸ்லாமியக் கோட்பாடு.

 

(தர்கா வழிபாட்டை நியாயப்படுத்துவோரின் இதர வாதங்கள் எப்படி தவறானவை என்பதை அறிந்து கொள்ள 17, 41, 79, 83, 100, 104, 121, 122, 140, 141, 193, 213, 215, 245, 269, 298, 327, 397, 427, 471 ஆகிய குறிப்புகளையும் காண்க!)

 

 








free counters
மொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் | © 2019 tamilquran.in. Designed by Ahadh Media.
You 're visitors No. 219836