2. பொருள் செய்ய முடியாத எழுத்துக்கள்

 

திருக்குர்ஆனில் சில அத்தியாயங்களின் துவக்கத்தில் தனித்தனி எழுத்துக்கள் இடம் பெற்றுள்ளன. தனித்தனி எழுத்துக்களுக்கு எந்த மொழியிலும் பொருள் செய்ய முடியாது என்பதை நாம் அறிவோம்.

 

உதாரணமாக SUN (சன்) எனக் கூறினால் இதற்குப் பொருள் கூற முடியும். S.U.N (எஸ், யு, என்) எனத் தனித்தனியாகக் கூறினால் மூன்று எழுத்துக்களைக் கூறியுள்ளோம் என்பதைத் தவிர இதற்கு எந்த அர்த்தமும் இருக்காது.

 

இது போலவே அரபு மொழியில் 'அலம' என்று கூறினால் இதற்குப் பொருள் கூற முடியும். அலிஃப், லாம், மீம் என அச்சொல்லின் எழுத்துக்களைத் தனித்தனியாகக் கூறினால் அரபு மொழியில் உள்ள மூன்று எழுத்துக்களைக் கூறினோம் என்பதைத் தவிர வேறு எந்த அர்த்தமும் இதற்கு இருக்காது.

 

திருக்குர்ஆனில் 29 அத்தியாயங்கள் இதுபோல் சில எழுத்துக்களைக் கொண்டு துவங்குகின்றன. 2, 3, 7, 10, 11, 12, 13, 14, 15, 19, 20, 26, 27, 28, 29, 30, 31, 32, 36, 38, 40, 41, 42, 43, 44, 45, 46, 50, 68 ஆகியவை அந்த அத்தியாயங்களாகும்

 

பொருள் கூற முடியாத எழுத்துக்களைக் கொண்டு இந்த 29 அத்தியாயங்களும் ஏன் துவங்க வேண்டும் என்ற சந்தேகம் பலருக்கும் ஏற்படலாம்.

 

அன்றைய அரபுப் பண்டிதர்களிடம் ஒரு வழக்கம் இருந்தது. உயர்தரமான இலக்கியங்களைப் படைக்கும்போது துவக்கத்தில் ஓரிரு எழுத்துக்களைப் பயன்படுத்தி வந்தனர்.

 

எனவே அனைத்து அரபு இலக்கியங்களையும் மிஞ்சி நிற்கின்ற திருக்குர்ஆன் - தன்னைப் போல் எவராலும் உருவாக்க முடியாது என்று அறைகூவல் விடும் திருக்குர்ஆன் - அதே வழிமுறையைக் கையாண்டு அறை கூவல் விடுத்தது.

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சிறு விஷயத்திற்குக் கூட விளக்கம் கேட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தோழர்கள் இது குறித்து எந்தக் கேள்வியையும் எழுப்பியதில்லை. இது பற்றி கேள்வி எழுப்பியதாக ஒரு சான்றும் இல்லை. அன்றைக்கு இது சாதாரணமான நடைமுறையாக இருந்ததை இதிலிருந்து அறியலாம்.

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் எதிரிகள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும், அவர்கள் கொண்டு வந்த மார்க்கத்துக்கும் களங்கம் ஏற்படுத்த எத்தனையோ கடுமையான முயற்சிகளை மேற்கொண்டனர்.

 

திருக்குர்ஆனில் கையாளப்பட்ட இது போன்ற சொற்பிரயோகம் அன்றைக்கு சாதாரணமாகவும், அன்றைய மக்களால் ஏற்கப்பட்டதாகவும் இல்லாதிருந்தால் இதைக் கடுமையாக விமர்சனம் செய்திருப்பார்கள். "முஹம்மதைப் பார்த்தீர்களா? அர்த்தமே இல்லாமல் உளறி விட்டு இறைவேதம் என்கிறார்'' எனக் கூறியிருப்பார்கள்.

 

ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு எதிராகப் பல்வேறு விமர்சனங்கள் செய்த எதிரிகள் இது குறித்து எந்த விமர்சனமும் செய்யவில்லை. ஒரே ஒருவர் விமர்சித்ததாகக் கூட எந்தச் சான்றும் இல்லை.

 

அவர்கள் விமர்சனம் செய்யாமல் இருந்ததிலிருந்தும் இதுபோன்ற சொல்வழக்கு அன்றைய மக்களிடம் இருந்துள்ளதை அறியலாம்.

 

எனவேதான் மேலே குறிப்பிட்ட அத்தியாயங்களின் துவக்கத்தில் இடம்பெறும் எழுத்துக்களைத் தமிழிலும் அப்படியே குறிப்பிட்டுள்ளோம்.

 

அன்றைக்கு இது அரபுகளிடம் சர்வ சாதாரணமாக இருந்த ஒரு வழக்கம் என்று இதைப் புரிந்து கொள்வதே போதுமானதாகும்.

 

 








free counters
மொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் | © 2019 tamilquran.in. Designed by Ahadh Media.
You 're visitors No. 43737