151. ஈஸா நபி உயர்த்தப்பட்டதை உறுதி செய்யும் மறுமை விசாரணை

 

இவ்வசனங்கள் (5:116-118) மறுமையில் ஈஸா நபியை விசாரிப்பது பற்றியும், அதற்கு அவர் அளிக்கும் பதில் பற்றியும் கூறுகின்றன.

 

இவ்வசனத்தில் "என்னை நீ கைப்பற்றியபோது'' என்று மொழி பெயர்க்கப்பட்ட இடத்தில் 'தவஃப்பைத்தனீ' என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

 

இச்சொல்லுக்கு "என்னை மரணிக்கச் செய்தபோது' என்று பொருள் கொள்வதா? "என்னைக் கைப்பற்றியபோது' என்று பொருள் கொள்வதா? என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது.

 

"என்னை மரணிக்கச் செய்தபோது' என்று சிலர் பொருள் கொண்டு ஈஸா நபி மரணித்து விட்டார்கள் என்பதற்கு இவ்வசனத்தைச் சான்றாகக் காட்டுகின்றனர். என்னை மரணிக்கச் செய்த பின் அவர்களின் நடவடிக்கைக்கு நீயே பொறுப்பு என்று ஈஸா நபியே கூறியுள்ளது அவர்கள் மரணித்து விட்டார்கள் என்பதற்கான சான்று என்று இவர்கள் வாதிடுகின்றனர்.

 

தவஃப்பா என்ற சொல் திருக்குர்ஆனில் 25 இடங்களில் இடம் பெற்றுள்ளது. அவற்றில் 23 இடங்களில் மரணிக்கச் செய்தல் என்ற பொருளிலேயே பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே, இந்த வசனத்திலும் அவ்வாறே பொருள் கொள்ள வேண்டும் என்பது இவர்களின் வாதம்.

 

இவர்களின் இந்த வாதம் அறிவுடையோரால் நிராகரிக்கப்பட வேண்டிய வாதமாகும். இவர்களின் வாதத்திலேயே இவர்களின் வாதத்துக்கு மறுப்பும் அமைந்திருக்கிறது.

 

இவர்களின் வாதப்படி 23 இடங்களில் மரணிக்கச் செய்தல் என்று பொருள் கொள்ளப்பட்டிருந்தும் இரண்டு இடங்களில் கைப்பற்றுதல் என பொருள் கொள்ளப்பட்டுள்ளது. இவர்களின் வாதம் சரி என்று வைத்துக் கொண்டால் 23 இடங்களில் செய்த பொருளையே மீதி இரண்டு இடங்களுக்கும் செய்திருக்க வேண்டும்.

 

எந்தந்த இடங்களில் எந்தப் பொருள் சரியானது என்பதுதான் கவனிக்கப்பட வேண்டுமே தவிர, பெரும்பான்மை அடிப்படையில் எல்லா இடங்களுக்கும் ஒரே அர்த்தம் செய்வது ஏற்கத்தக்கது அல்ல என்பதற்கு இவர்களின் வாதமே சான்றாக உள்ளது.

 

தவஃப்பா என்ற சொல்லுக்கு முழுமையாக எடுத்துக் கொள்ளுதல் என்பதே நேரடிப் பொருளாகும். மரணிக்கச் செய்தல் என்பது அதன் நேரடிப் பொருள் அல்ல.

 

மரணத்தின் மூலம் மனிதன் முழுமையாக எடுத்துக் கொள்ளப்படுவதால் மரணிக்கச் செய்வதை இச்சொல் மூலம் குறிப்பிடுவது வழக்கத்துக்கு வந்தது.

 

திருக்குர்ஆனில் 2:234, 2:240, 3:55, 3:193, 4:97, 6:61, 7:37, 7:126, 8:50, 10:46, 10:104, 12:101, 13:40, 16:28, 16:32, 16:70, 22:05, 32:11, 40:67, 40:77, 47:27 ஆகிய இடங்களில் மரணிக்கச் செய்தல் என்ற பொருளில் இச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

 

அவன் தான் உங்களை இரவில் கைப்பற்றுகிறான் (திருக்குர்ஆன் 6:60)

 

இவ்வசனத்தில் அதே சொல் இடம் பெற்றாலும் மரணிக்கச் செய்தல் என்று இங்கே பொருள் இல்லை. தூக்கத்தில் ஒருவரைக் கைப்பற்றுதல் என்பதே இதன் பொருளாகும்.

 

அவர்களை மவ்த் (மரணம்) கைப்பற்றும் வரை வீட்டில் தடுத்து வையுங்கள் (திருக்குர்ஆன் 4:15)

 

இவ்வசனத்தில் இடம் பெற்றுள்ள தவஃப்பா என்ற சொல்லுக்கு மரணிக்கச் செய்யும் வரை என்று பொருளிருந்தால் மரணம் மரணிக்கச் செய்யும் வரை என்று இதற்குப் பொருள் வரும். மரணிக்கச் செய்யும் வரை என்பதில் பொருள் முழுமையடைந்து விடுவதால் மரணம் மரணிக்கச் செய்யும் வரை என்று கூறத்தேவை இல்லை.

 

கைப்பற்றுதல் என்று பொருள் கொண்டால் மரணம் அவர்களைக் கைப்பற்றிக் கொள்ளும் வரை என்ற பொருள் கிடைக்கும். எனவே மரணம் கைப்பற்றும் வரை என்பது தான் இந்த இடத்தில் அர்த்தமாகும்.

 

உயிர்களை மரணிக்கும்போதும் மரணிக்காதவைகளை அவற்றின் உறக்கத்தின்போதும் அல்லாஹ் கைப்பற்றுகிறான் (திருக்குர்ஆன் 39:42)

 

இவ்வசனத்திலும் தவஃப்பா என்ற சொல் இடம் பெற்றுள்ளது. தூக்கத்தின்போது உயிர்களை மரணிக்கச் செய்கிறான் என்று பொருள் கொண்டால் தூங்குவோர் செத்து விட்டார்கள் என்ற பொருந்தாத கருத்து கிடைக்கும்.

 

தூக்கத்தின்போது உயிர்களைக் கைப்பற்றுகிறான் – தன் கட்டுப்பாட்டில் – வைத்திருக்கிறான் என்று இந்த இடத்தில் பொருள் கொள்கிறோம். மரணிக்கச் செய்தல் என்று பொருள் கொள்வதில்லை.

 

இவை தவிர மறுமையில் முழுமையாகக் கூலி தரப்படும் என்பதைக் கூறும் 2:281, 3:161, 3:185, 16:111 ஆகிய வசனங்களிலும் இதே சொல்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. முழுமையாகக் கூலி தரப்படும் என்றுதான் இதற்குப் பொருள் கொள்ள வேண்டும். மறுமையில் சாகடிக்கப்படுவார்கள் என்று பொருள் கொள்ள முடியாது.

 

மரணிக்கச் செய்தல், கைப்பற்றுதல், முழுமையாக வழங்குதல் ஆகிய அர்த்தங்கள் இச்சொல்லுக்கு உண்டு. எந்தெந்த இடத்துக்கு எந்த அர்த்தம் பொருத்தமானதோ அதை அந்த இடத்தில் செய்ய வேண்டும்.

 

இதை இன்னும் தெளிவாக அறிந்து கொள்ள ஸலாத் என்ற சொல்லை நாம் கவனிக்கலாம்.

 

ஸலாத் எனும் சொல்லுக்கு நேரடிப் பொருள் பிரார்த்தனை என்பதாகும். தொழுகையைக் குறிக்கும் 'ஸலாத்' என்ற சொல்லும் அதிலிருந்து பிறந்த சொற்களும் திருக்குர்ஆனில் 109 இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் 102 இடங்களில் தொழுகையைக் குறிப்பதற்கும் 7 இடங்களில் அகராதியில் உள்ள அர்த்தத்துக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இப்படி ஏராளமான சொற்களைக் காணலாம்.

 

இப்போது 5:117 வசனத்தில் இடம் பெற்ற 'தவஃப்பா' என்ற சொல்லுக்கு எவ்வாறு பொருள் கொள்வது என்பதைப் பார்ப்போம்.

 

"என்னை மரணிக்கச் செய்தபோது'' என்று இந்த இடத்தில் நாம் பொருள் கொண்டால் "ஈஸா நபி கியாமத் நாளின் அடையாளமாக உள்ளார்'' என்ற 43:61 வசனத்துடனும், "ஈஸா நபி மரணிப்பதற்கு முன் வேதமுடையோர் அவரை நம்பிக்கை கொள்ளாமல் இருக்க மாட்டார்கள்'' என்ற 4:159 வசனத்துடனும் மோதுகின்றது. கைப்பற்றுதல் என்று பொருள் கொண்டால் அவ்விரு வசனங்களுடன் ஒத்துப் போகின்றது.

 

ஈஸா நபியை அல்லாஹ் விசாரிக்கும்போது ஈஸா நபி அளிக்கும் பதிலும் இந்த இடத்தில் தவஃப்பா என்ற சொல்லுக்கு கைப்பற்றுதல் என்று பொருள் செய்ய வேண்டும் என்பதற்குச் சான்றாக அமைந்துள்ளது.

 

"நான் உயிருடன் இருந்த வரை அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன்; என்னை நீ கைப்பற்றியபோது நீயே அவர்களுக்குப் பொறுப்பாளன்'' என்று ஈஸா நபி பதில் கூறமாட்டார்கள்.

 

"நான் அவர்களுடன் இருந்தபோது பார்த்துக் கொண்டிருந்தேன்; என்னை நீ கைப்பற்றியபோது நீயே அவர்களுக்குப் பொறுப்பாளன்'' என்று தான் கூறுவார்கள்.

 

'நான் உயிருடன் இருந்தபோது' என்பதற்கும், 'நான் அவர்களுடன் இருந்தபோது' என்பதற்கும் உள்ள வேறுபாட்டை நாம் சிந்திக்க வேண்டும்.

 

'நான் உயிருடன் இருந்தபோது' என்று கூறி விட்டு 'ஃபலம்மா தவஃப்பைதனீ' என்று அவர்கள் கூறினால், 'என்னை மரணிக்கச் செய்தபோது' என்றுதான் அந்த இடத்தில் பொருள் கொள்ள முடியும். அல்லாஹ் அந்த வார்த்தைகளைத் தவிர்த்து விட்டு 'நான் அவர்களுடன் இருந்தபோது' என்ற முற்றிலும் வித்தியாசமான வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளான்.

 

'நான் அவர்களுடன் இருந்தபோது அவர்களைக் கண்காணித்துக் கொண்டிருந்தேன்' என்ற வாக்கியத்தில் இரண்டு செய்திகள் அடங்கியுள்ளன. ஈஸா நபியவர்கள் உயிருடன் இருந்து மக்களைக் கண்காணிப்பார்கள் என்பது ஒரு செய்தி. ஈஸா நபியவர்கள் உயிருடன் இருந்தாலும் மக்களைக் கண்காணிக்க முடியாத நிலையில் இருப்பார்கள் என்பது மற்றொரு செய்தி.

 

இந்த இரண்டு நிலைகள் இருப்பதால் தான், "நான் அவர்களுடன் இருந்தபோது அவர்களைக் கண்காணித்தேன்; உயர்த்தப்பட்டு, அவர்களுடன் இல்லாமல் வேறு இடத்தில் இருந்தபோது என்னால் எப்படிக் கண்காணிக்க முடியும்?" என்று அவர்கள் கூறுகிறார்கள்.

 

"நான் அவர்களுடன் இருந்தபோது அவர்களைக் கண்காணித்தேன்; ஃபலம்மா தவஃப்பைத்தனீ' (நீ என்னைக் கைப்பற்றியபோது) அதாவது அவர்களுடன் இல்லாமல் வேறு இடத்திற்கு என்னை எடுத்துக் கொண்டபோது நீயே கண்காணிப்பவனாக இருந்தாய்" என்று பொருள் கொள்ளும்போது முந்தைய வாக்கியத்துடன் பொருந்திப் போகிறது.

 

அந்த மக்களுடன் ஈஸா (அலை) இவ்வுலகில் வாழ்ந்தபோது அம்மக்களைக் கண்காணித்தார்கள். அம்மக்களை விட்டும் உயர்த்தப்பட்ட பின் கண்காணிக்க மாட்டார்கள் என்ற கருத்து, முன்னர் நாம் சுட்டிக் காட்டிய வசனங்களுடன் அழகாகப் பொருந்திப் போகின்றன.

 

ஈஸா நபி மரணித்து விட்டார்களா? அல்லது உயர்த்தப்பட்டு இறுதிக்காலத்தில் இறங்கி வந்து மரணிப்பார்களா என்பது பற்றி அறிய 93, 101,133, 134, 278, 342, 456 ஆகிய குறிப்புகளையும் காண்க!

 

 








free counters
மொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் | © 2019 tamilquran.in. Designed by Ahadh Media.
You 're visitors No. 270394