311. மக்கா வெற்றி பற்றி முன்னறிவிப்பு
இவ்வசனம் (28:85) மக்காவில் இருந்து விரட்டப்பட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீண்டும் மக்காவுக்கு வருவார்கள் என்று முன்னறிவிப்பு செய்கிறது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து உயிரைக் காப்பாற்றிக் கொள்ளுகின்ற நிலைக்குத் தள்ளப்பட்டு வெளியேறினார்கள்.
இப்படி வெளியேற்றப்படும் ஒருவர் "வெளியேற்றிய ஊருக்கு வந்து அதை ஆள்வார்; அவருக்குச் சாதகமான நிலை ஏற்படும்'' என யாரும் கற்பனை கூட செய்ய முடியாது.
ஆனால் இவ்வசனம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து மதீனாவிற்குப் புறப்பட்டதைப் பற்றிப் பேசும்போது, "எந்த இடத்தை விட்டு உம்மை விரட்டினார்களோ அந்த இடத்திற்கு உம்மைக் கொண்டு வந்து சேர்ப்பேன்" என்று அல்லாஹ் முன்னறிவிப்பு செய்கிறான். இந்த முன்னறிவிப்பை உலகறிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் சொன்னார்கள்.
தம்மை விரட்டியடித்த ஊரைச் சில வருடங்களிலேயே வெற்றி கொண்டு தம் வசப்படுத்தினார்கள். இதை முன்னறிவிப்பாகச் சொல்லியிருப்பது திருக்குர்ஆன் இறைவேதம் தான் என்பதற்குச் சான்றாகும்.