293. இஸ்லாம் கூறும் சார்பியல் கோட்பாடு

 

இவ்வசனத்தில் (70:4) ஒருநாள், ஐம்பதாயிரம் வருடங்கள் அளவுடையது எனக் கூறப்படுகிறது.

 

ஒருநாள், ஐம்பதாயிரம் வருடங்களுக்கு (1,82,50,000 நாட்களுக்கு) நிகரானது என்று கூறப்படுவதைச் சென்ற நூற்றாண்டுக்கு முன் வாழ்ந்தவர்களால் புரிந்து கொண்டிருக்க முடியாது.

 

நாட்கள் என்பது ஒருவரின் பயண வேகத்தைப் பொருத்து மாறுபடும் என்பதை ஐன்ஸ்டீன் கண்டுபிடித்துக் கூறுவதற்கு முன், நாட்கள் என்பது மாறவே மாறாது என்பதுதான் உலக மக்களின் நம்பிக்கையாக இருந்தது.

 

உதாரணமாக இந்தப் பூமியிலிருந்து 25 வயதுடைய ஒருவன் ஒளி வேகத்தில் மேல்நோக்கிப் பயணம் செய்து கொண்டே இருக்கிறான். (ஒளியின் வேகம் வினாடிக்கு சுமார் 3,00,000 - மூன்று லட்சம் - கி.மீ). பூமியில் ஐம்பது ஆண்டுகள் கடந்த பிறகு அவன் திரும்பி வந்தால், அவனுடைய வயதுடையவர்கள் பலர் இறந்திருப்பார்கள். எஞ்சியிருப்பவர்கள் 75 வயதுடையவர்களாக இருப்பார்கள்.

 

ஆனால் ஒளி வேகத்தில் பயணம் செய்து கொண்டே இருந்தவன் 25 வயது வாலிபனாகவே திரும்பி வருவான். இது இன்றைய நவீன உலகில் வாழும் மேதைகளில் பலருக்கே புரிந்து கொள்ளச் சிரமமாக இருந்தாலும் உண்மை இதுதான்.

 

ரிலேட்டிவிட்டி எனும் சார்பியல் கோட்பாட்டை 1905ஆம் ஆண்டுதான் ஐன்ஸ்டீன் கண்டுபிடித்தார். எழுதப்படிக்கத் தெரியாத முஹம்மது நபி 14 நூற்றாண்டுகளுக்கு முன்பு இதைக் கூறி இருக்கிறார்கள் என்றால் அன்றைக்கு இருந்த அறிவைக் கொண்டு இதைக் கூறியிருக்க முடியாது.

 

இந்த உண்மை அன்று எந்த மனிதனுக்கும் தெரிந்திருக்க முடியாது. அல்லாஹ் ஒருவனுக்கு மட்டும்தான் தெரிந்திருந்தது. எனவே அல்லாஹ்வின் புறத்திலிருந்து தான் முஹம்மது நபி இந்தச் செய்தியைப் பெற்றார்கள் என்பது இதன் மூலம் உறுதியாகின்றது.

 

22:47, 32:5 ஆகிய வசனங்களில் இறைவனின் ஒரு நாள் உங்கள் நாட்களில் ஆயிரம் வருடங்கள் அளவுடையது எனக் கூறப்படுகிறது. ஆனால் 70:4 வசனத்தில் ஐம்பதாயிரம் வருடங்களுக்குச் சமமானது எனக் கூறுவது ஏன்? இரண்டும் முரண்படுகிறதே என்று சிலருக்குச் சந்தேகம் ஏற்படலாம்.

 

ஆயிரமும், ஐம்பதாயிரமும் ஒன்றுக்கொன்று முரண்பட்டது என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் இரண்டும் வேறு வேறு செய்திகளைக் கூறும் வசனங்கள் என்பதை விளங்கிக் கொண்டால் இதில் எந்த முரண்பாடும் இல்லை என்பதை அறிந்து கொள்ளலாம்.

 

இவ்விரு வசனங்களில் பயன்படுத்தப்பட்டுள்ள சொற்களைக் கவனிப்பவர்கள் இரண்டும் தனித்தனியான இரண்டு விஷயங்கள் என்பதை விளங்கிக் கொள்வர்.

 

பூமிக்கு வருகின்ற வானவர்கள், வானுலகத்துக்கு மேலேறிச் செல்லும் வேகம் பற்றி 70:4 வசனம் கூறுகிறது. ஒளியால் படைக்கப்பட்ட வானவர்கள் பூமியிலிருந்து இறைவனிடம் மேலேறிச் செல்லும் வேகம் ஐம்பதாயிரம் வருடங்களுக்கு நிகரான ஒரு நாளின் வேகம் எனக் கூறப்படுகிறது.

 

அதாவது ஒருநாளில் அவர்கள் சென்றடைந்த தூரத்தை நீங்கள் அடைவது என்றால் ஐம்பதாயிரம் ஆண்டுகள் தேவைப்படும். (அதாவது 1,82,50,000 நாட்கள்).

 

அவர்கள் ஒரு விநாடியில் சென்றடையும் தூரத்தை நாம் அடைவது என்றால் 211 நாட்கள் தேவைப்படும். அவ்வளவு வேகமாக அவர்களின் பயணம் அமைந்திருக்கும்.

 

வானவர்களின் பயண வேகத்தை 70:4 வசனம் கூறுகிறது.

 

இறைவன் பிறப்பிக்கும் கட்டளை பூமியை அடைந்து மீண்டும் திரும்பிச் செல்வதற்கான வேகத்தை 32:5 வசனம் கூறுகிறது. இறைவன் ஒவ்வொரு விநாடியும் கோடிக்கணக்கான கட்டளைகளைப் பிறப்பிக்கின்றான்.

 

உலகில் நடக்கும் எந்தக் காரியமானாலும் அவனது கட்டளைப்படியே நடக்கின்றன.

 

இவ்வாறு பிறப்பிக்கப்படும் கட்டளைகள் பூமியை அடைந்து மீண்டும் இறைவனைச் சென்றடையும் வேகம் பற்றி இவ்வசனம் கூறுகிறது.

 

22:47 வசனமும் கட்டளைகளின் வேகத்தையே குறிப்பிடுகிறது. இறைவன் இருக்கிறான் என்றால் அவனை ஏற்காத எங்கள் மீது வேதனையை இறக்கட்டுமே என்று நபிமார்களின் எதிரிகள் கேட்டனர். இதற்கான கட்டளையை நான் பிறப்பித்து விட்டால் அது ஆயிரம் ஆண்டுக்கு நிகரான ஒரு நாளின் வேகத்தில் விரைவாக வந்து சேர்ந்து விடும் என்று 22:47 வசனம் கூறுகிறது.

 

இறைவனின் ஒரு கட்டளை ஒரு நாளில் சென்றடையும் தூரத்தை மனிதன் அடைய 1000 ஆண்டுகள் (3,65,000 நாட்கள்) தேவைப்படும்.

 

இறைவனின் கட்டளை ஒரு விநாடியில் செல்லும் தூரத்தை நாம் அடைய நான்கு நாட்களுக்கு மேல் தேவைப்படும்.

 

ஒளியின் வேகம் தான் மனிதன் கண்டுபிடித்த வேகங்களிலேயே அதிவேகமுடையது. எனவே தான் ஒளியால் படைக்கப்பட்ட வானவர்களின் வேகம், கட்டளைகளின் வேகத்தை விட 50 மடங்கு அதிகமாகவுள்ளது.

 

ஆயிரம் ஆண்டுகள் என்பதும், ஐம்பதாயிரம் ஆண்டுகள் என்பதும் வெவ்வேறு விஷயங்களுக்கான கணக்கு என்பதைப் புரிந்து கொண்டால் எந்தக் குழப்பமும் இல்லை.

 

 








free counters
மொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் | © 2019 tamilquran.in. Designed by Ahadh Media.
You 're visitors No. 270379