283. முன்னோரைக் காட்டி பிரச்சாரத்தை முடக்குதல்
உள்நோக்கத்துடன் மூஸா நபியிடம் ஃபிர்அவ்ன் கேட்ட கேள்விக்கு சமயோசிதமாகவும், உண்மைக்கு முரணில்லாமலும் மூஸா நபி அளித்த பதில் இவ்வசனத்தில் (20:51,52) எடுத்துச் சொல்லப்பட்டுள்ளது.
நாங்கள் தவறான கொள்கையில் இருப்பதாகக் கூறுகிறாயே, அப்படியானால் இதே கொள்கையில் இருந்த முன்னோர்களின் நிலை என்ன? என்று ஃபிர்அவ்ன் கேட்கிறான்.
இந்தக் கேள்வி உள்நோக்கத்துடன் கேட்கப்பட்டதாகும். உங்கள் முன்னோர்களும் இதே கொள்கையில் இருந்ததால் அவர்கள் நரகவாசிகள் தான் என்ற பதிலை மூஸா நபியிடம் வரவழைப்பதற்காக இக்கேள்வியை ஃபிர்அவ்ன் கேட்கிறான்.
இந்தப் பதிலை வைத்து ஒட்டுமொத்த சமுதாயத்தையும் சத்தியத்திற்கு எதிராகத் திருப்புவது தான் இந்தக் கேள்விக்குள் அடங்கியுள்ள சதித்திட்டம்.
பாரம்பர்யப் பெருமையில் ஊறித் திளைத்தவர்கள் தங்கள் முன்னோர்கள் கெட்டவர்கள் என்று சொல்லப்படுவதை ஏற்க மாட்டார்கள். பாரம்பர்யப் பெருமையைச் சிதைக்கிறார் என்று தூண்டிவிட்டால் மக்களுக்கு வெறியூட்டி சத்தியத்தை முடக்கி விடலாம் என்பதற்காகவே இது போன்ற கேள்விகள் கேட்கப்படுகின்றன.
ஆனால் மூஸா நபியவர்கள் ஃபிர்அவ்னின் சதியில் சிக்காமலும், உண்மையை மறைக்காமலும் சமயோசிதமாக இது குறித்த அறிவு எனது இறைவனிடம் தான் உள்ளது எனக் கூறி அவனை வாயடைக்கச் செய்தார்கள்.
சத்தியத்தை எடுத்துச் சொல்லும்போது "சத்தியத்தை ஏற்காத எங்களது முன்னோர்கள் நரகவாசிகளா?'' என்று எல்லாக் காலத்திலும் சத்தியத்திற்கு எதிரானவர்கள் கேள்வி எழுப்புவார்கள்.
இதுபோன்ற கேள்விகளை நாம் எதிர்கொள்ளும்போது எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு இவ்வசனம் வழிகாட்டியாக உள்ளது.