65. மனைவிக்கு எதிராகச் சத்தியம் செய்தல்
மனைவியின் மீதுள்ள கோபத்தின் காரணமாக அல்லாஹ்வின் பெயரைப் பயன்படுத்தி "'அல்லாஹ்வின் மேல் ஆணையாக இனி உன்னைத் தீண்ட மாட்டேன்'' என்று கூறும் வழக்கம் அன்றைய அரபுகளிடம் இருந்தது. இவ்வசனம் (2:226) அந்த வழக்கத்தைக் கண்டிப்பதுடன் அதற்கான பரிகாரத்தையும் கூறுகிறது.
இவ்வாறு சத்தியம் செய்தவர் இதற்காக மனைவியைப் பிரியத் தேவையில்லை. நான்குமாத அவகாசத்துக்குள் சத்தியத்தை முறித்து விட்டு மனைவியுடன் சேர்ந்து கொள்ளலாம்.
காலமெல்லாம் மனைவியுடன் சேர மாட்டேன் என்று ஒருவர் சத்தியம் செய்தாலும் அவருக்குரிய கெடு நான்கு மாதங்கள் தாம்.
நான்கு மாதம் வரை மனைவியுடன் சேராமல் நான்கு மாதம் கழித்துத்தான் சேர வேண்டும் என்று இவ்வசனத்திற்கு (2:226) அர்த்தம் இல்லை. நான்கு மாதம் முடிவதற்குள் சேர வேண்டும் என்பதே இதன் பொருள்.
சத்தியம் செய்து விட்டு மறுநாள் கூட அதை முறிக்கலாம். நான்கு மாதம் கடந்த பின்னும் சத்தியத்தை முறித்து மனைவியுடன் இணக்கமாகாவிட்டால் விவாகரத்துச் செய்து விட வேண்டும் என்று அடுத்த வசனம் கூறுகிறது.
சிலர், மனைவியுடன் வெறுப்புக் கொண்டு அவளுடன் வாழ்க்கை நடத்தாமலும், அவளை விவாகரத்துச் செய்யாமலும் கொடுமைப்படுத்துவர். நான்கு மாதம் கடந்த பின்னும் மனைவியின் மீது வெறுப்புக் கொண்டு பிரிந்திருந்தால், நான்கு மாதத்துக்குள் மனைவியுடன் உறவைப் புதுப்பிக்காவிட்டால், அதையே விவாகரத்தாக அறிவிக்கும் கடமை ஜமாஅத்துகளுக்கு உண்டு. அந்த அதிகாரம் இவ்வசனத்தின் மூலம் சமுதாயத் தலைவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.