376. பிறர் வீடுகளில் சாப்பிடுதல்

 

இவ்வசனம் (24:61) உரிமையுடன் யாருடைய இல்லங்களில் ஒருவர் சாப்பிடலாம் என்பதைக் கூறுகிறது.

 

இவ்வசனத்துக்கு விளக்கம் கொடுக்கும் பல விரிவுரையாளர்கள் போரில் பங்கெடுக்காமல் இருப்பது குற்றமில்லை என்று இதற்குப் பொருள் கூறுகின்றனர். இதற்குச் சான்றாக அவர்கள் 48:17 வசனத்தை எடுத்துக் காட்டுகின்றனர்.

 

48:17 வசனம் போர்க்களம் பற்றிக் கூறுவது உண்மையானாலும் 24:61 வசனம் போர்க்களம் பற்றிப் பேசவில்லை. இரண்டு வசனங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதை மேலோட்டமாகப் பார்த்தாலே புரிந்து கொள்ளலாம்.

 

"உண்பது குற்றமில்லை'' என்று தெளிவாகக் கூறப்பட்டிருக்கும்போது போருக்குச் செல்லாமல் இருப்பது குற்றமில்லை என்று இவர்கள் கருத்துக் கூறியிருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.

 

இவ்வசனம் பிறர் வீட்டில் உண்பது பற்றிய ஒழுங்குகளைத்தான் பேசுகிறது. ஒரு மனிதன் மற்றொரு குடும்பத்தாரோடு கலந்து உண்ணலாமா? என்ற கேள்விக்குத்தான் இவ்வசனம் விடையளிக்கிறது.

 

ஒரு மனிதன் தனது பெற்றோர் வீட்டில் அவர்களுடன் உண்ணலாம். அது போல் சகோதரர்கள், சகோதரிகள், தந்தையின் உடன் பிறந்தவர்கள், தாயின் உடன் பிறந்தவர்கள் போன்ற உறவினர்கள் வீட்டில் ஆண்கள் பெண்கள் அனைவரும் சேர்ந்தும், தனியாகவும் உண்ணலாம்.

 

அதுபோல் நெருங்கிய நண்பர்களாக இருந்தால் இரண்டு குடும்பத்தாரும் சேர்ந்து உணவு உட்கொள்வது குற்றமில்லை.

 

அது போலவே நெருங்கிய உறவினராகவோ, உற்ற நண்பராகவோ இல்லாத குருடரையும், ஊனமுற்றோரையும், நோயுற்றவர்களையும் நம்முடன் உணவில் சேர்த்துக் கொள்ளலாம் என்பதுதான் இவ்வசனம் கூறும் தெளிவான கருத்தாகும்.

 

அன்னிய ஆண்களும், பெண்களும் தனித்திருப்பதை இஸ்லாம் தடை செய்துள்ளது. ஆயினும் நெருங்கிய உறவினர்கள் கூட்டாகச் சேர்ந்து உண்ணலாம்; அது குற்றமாகாது என்று இவ்வசனங்கள் கூறுகின்றன.

 

ஆயினும் இஸ்லாம் தடை செய்துள்ள வகையில் ஆடை அணிகலன்கள் அணிந்து வருவதையும், ஆணும், பெண்ணும் ஒட்டி உரசுவது போன்றவைகளையும் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

 

இதுதான் இவ்வசனத்திலிருந்து நேரடியாகப் பெறப்படும் கருத்தாகும். இவ்வசனம் கூறாத கருத்தை விரிவுரை என்ற பெயரில் யார் கூறினாலும் அதை நாம் கண்டு கொள்ளத் தேவையில்லை.

 

இவ்வாறு சேர்ந்து உண்ணும்போது ஆண்களும் பெண்களும் ஒருவரை மற்றவர் பார்க்கும் நிலை ஏற்படலாம். இது குறித்து அறிந்து கொள்ள 472 வது குறிப்பைக் காண்க!

 

 








free counters
மொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் | © 2019 tamilquran.in. Designed by Ahadh Media.
You 're visitors No. 270399