203. படைபலம் குறைவாக இருந்தால் போர் கடமையா?
எண்ணிக்கையும், படைபலமும் குறைவாக இருந்தாலும் போரிடுவது கடமை என்று இவ்வசனம் (9:41) கூறுகிறது.
8:66 வசனம் எதிரிகளின் பலத்தில் பாதியளவு இருந்தால் தான் போர் கடமை எனவும், அதை விடக் குறைவாக இருந்தால் போர் கடமையில்லை எனவும் கூறுகிறது. இவ்விரண்டும் முரண் என எண்ணக் கூடாது.
ஏனெனில் திருக்குர்ஆன் 8:66 வசனத்தில் "இப்போது அல்லாஹ் உங்களுக்கு எளிதாக்கி விட்டான்'' என்ற சொற்றொடரைக் கூறி விட்டு, எதிரியின் பலத்தில் பாதி இருக்க வேண்டும் என்று கூறுகிறான். எனவே ஆரம்பத்தில் இருந்த நிலை இதன் மூலம் மாற்றப்பட்டு விட்டது என்பதை அறியலாம்.
நாட்டை ஆட்சி செய்பவர்கள் குடிமக்களைக் காக்கக் கடமைப்பட்டுள்ளார்கள். படைதிரட்டி வருபவர்களை எதிர்த்துக் களமிறங்கினால் தான் மக்களை எதிரிகளிடமிருந்து பாதுகாக்க முடியும். ஆனால் சில நேரங்களில் எதிரிகளின் பலம் மிக அதிகமாக இருக்கும்போது எதிர்த்துக் களமிறங்கினால் மக்களைப் பாதுகாப்பதற்குப் பதிலாக அவர்களுக்குப் பேரழிவு ஏற்பட்டுவிடும்.
இது போன்ற சந்தர்ப்பங்களில் விட்டுக் கொடுத்து, எதிரிகளுக்குப் பணிந்து, போரைத் தவிர்ப்பதுதான் மக்களை அழிவிலிருந்து காக்கும். இந்த வழியைத் தான் அல்லாஹ் இவ்வசனங்களில் தெளிவுபடுத்தி ஆட்சியாளர்களுக்கு அறிவுரை கூறுகிறான்.
எதிரியின் பலத்தில் சரிபாதி பலம் இருந்தால் மட்டும் தான் போர் செய்வது கடமையாகும். அப்படி இல்லாவிட்டால் போரைத் தவிர்த்து மக்களைக் காக்க வேண்டும் என்பதுதான் அந்த அறிவுரை.
போர், பயங்கரவாதம், ஜிஹாத் ஆகியவை குறித்து மேலும் அறிந்திட 53, 54, 55, 76, 89, 197, 198, 199, 359 ஆகிய குறிப்புகளைப் பார்க்கவும்.