419. வான் மழையின் இரகசியம்
இவ்வசனத்தில் (24:43) 'வானில் மழை நீர் எவ்வாறு சேமிக்கப்பட்டு, பூமியில் பொழியப்படுகின்றது' என்ற அறிவியல் உண்மை விளக்கப்படுகிறது.
பூமியில் உள்ள நீரை சூரியன் நீராவியாக மாற்றி மேலே இழுத்துச் சென்று அந்தரத்தில் மேகமாக நிறுத்தியிருப்பதை இன்று அனைவரும் அறிந்து வைத்திருக்கிறோம்.
இம்மேகங்களின் பிரமாண்டத்தைப் பற்றிப் பெரும்பாலான மக்கள் இன்று கூட அறிந்திருக்கவில்லை.
மேலே இழுத்துச் செல்லப்படும் நீராவியானது, ஒன்றோடொன்றாக இழுத்து இணைக்கப்பட்டு ஆலங்கட்டி (பனிக்கட்டி) தொகுப்புகளாக மாற்றப்படுகிறது.
இந்தப் பனிக்கட்டிகள், ஒன்றுக்கு மேல் ஒன்றாக அடுக்கப்பட்டு, 1000 அடி முதல் 30,000 அடிகள் வரை உயர்கின்றன. 30,000 அடி என்பது 9 கிலோ மீட்டரை விட அதிகமாகும். இது உலகின் பெரிய மலையான இமய மலையின் உயரத்தை விட அதிகம்.
இவ்வளவு பெரிய மலையின் அளவுக்கு இந்தப் பனிக்கட்டிகள், செங்குத்தாக அடுக்கப்பட்டு, மின்காந்தத் தூண்டுதல் ஏற்பட்டவுடன், பனிக்கட்டிகள் உருகி தண்ணீரைக் கொட்டுகின்றன.
இது மழையின் இரகசியமாகும். மழை எவ்வாறு உருவாகின்றது என்பது பற்றி இன்றைய விஞ்ஞானிகளின் கூற்றைத்தான் மேலே தந்திருக்கிறோம்.
இதில் கூறப்பட்டுள்ள செய்திகளான, மேகங்களை இழுத்தல், அவற்றை அடுக்கடுக்காக அமைத்தல், மலை உயரத்திற்குப் பனிக்கட்டிகள் செங்குத்தாக நிறுத்தப்படுதல், மின்னல் மூலம் மின்காந்தத் தூண்டுதல் ஏற்படுத்துதல் போன்ற அத்தனை விஷயங்களையும் ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக இந்த வசனம் (24:43) அப்படியே கூறுவதைப் பார்த்து பிரமித்துப் போகிறோம்.
குர்ஆன் இறைவனின் வார்த்தை என்பதற்கு இதை விட வேறு சான்று தேவை இல்லை.