399. பாலைவனக் கப்பல்
ஒட்டகம் எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது என்று திருக்குர்ஆனின் 88:17 வசனம் மனிதர்களைச் சிந்திக்கச் சொல்கிறது.
எந்த வகையில் ஒட்டகத்தைச் சிந்திக்க வேண்டும் என்றால், அது கப்பலைப் போன்ற தன்மை கொண்டதாக அமைந்திருப்பதைப் பற்றிச் சிந்திக்குமாறு மற்றொரு வசனம் (36:41,42) கூறுகின்றது.
கடலைப் போல் பரந்து கிடக்கும் பாலைவனத்தில் எந்த உயிரினமும் பயணிக்க முடியாவிட்டாலும் ஒட்டகங்கள் சர்வ சாதாரணமாகப் பயணிப்பதைக் காண்கிறோம். அதற்கு ஏற்றவாறு ஒட்டகத்திற்குள் வேறு எந்த உயிரினத்திற்கும் இல்லாத சிறப்புத் தன்மைகள் அளிக்கப்பட்டுள்ளன.
வெப்பத்தின் காரணமாக உடலிலும், இரத்தத்திலும் உள்ள தண்ணீர் குறைந்து விட்டால் எந்த உயிரினமும் செத்துப் போய் விடும்.
உயிரினத்தின் இரத்தத்தில் தண்ணீரின் அளவு குறைந்தால் இரத்தம் உறைந்து ஓட்டமின்றி அந்த உயிரினம் செத்து விடும்.
இந்த நிலை ஏற்படாதவாறு பாலைவனக் கப்பல் எனப்படும் ஒட்டகத்தில் பல சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஒட்டகம், ஒரு நேரத்தில் 100 லிட்டர் தண்ணீரை உறிஞ்சி தன் உடலுக்குள் உள்ள சிறப்பான தண்ணீர்ப் பையில் தேக்கி வைத்துக் கொள்கிறது. அந்தப் பையிலிருந்து இரத்தத்தில் தண்ணீரின் அளவு குறையும்போது இரத்தக் குழாய்க்குப் பாய்ச்சுகிறது.
ஒட்டக இரத்தத்தின் ஒவ்வொரு அணுவும் 200 மடங்கு விரிவடைகின்றது. இதனால் எவ்வளவு நாட்கள் தண்ணீர் கிடைக்காவிட்டாலும் பையில் இருக்கும் தண்ணீர் தீரும் வரை இரத்தம் உறைந்து போகாமல் ஒட்டகத்தால் பயணிக்க முடியும்.
இரத்தத்திற்கு மட்டுமின்றி, தசைகளுக்கும் தண்ணீர்ச்சத்து தேவை.
அதைத் தண்ணீர்ப் பையிலிருந்து எடுத்துக் கொள்ளும் ஏற்பாடு ஒட்டகத்தில் இல்லை. அதனுடைய இந்தத் தண்ணீர்த் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக ஏராளமான கொழுப்புகள் அதன் திமிலில் சேமிக்கப்படுகின்றன.
கொழுப்பிலுள்ள ஹைட்ரஜனுடன் ஒட்டகம் சுவாசிக்கும் காற்றிலுள்ள ஆக்ஸிஜன் சேரும்போது, கொழுப்பு தண்ணீராகி தசைகளுக்குச் செல்கிறது.
மேலும் பாலைவன மணலின் வெப்பம் சாதாரண நிலப்பரப்பின் வெப்பத்தைவிடப் பன்மடங்கு அதிகமாக இருக்கும். பாலைமணலின் வெப்பம் ஒட்டகத்தைப் பாதிக்காமல் இருக்க அதன் பாதங்கள் அதிக அளவு ரப்பர் போன்ற சதையைக் கொண்டுள்ளன.
பாலைவனக் கப்பலாகப் பயன்படுத்துவதற்கேற்ற வகையில் ஒட்டகத்தில் உள்ள தனித் தகுதிகளை அறிந்த இறைவனின் வார்த்தையாகத்தான் இது இருக்க முடியும் என்பதை இவ்வசனங்கள் நிரூபிக்கின்றன.