133. ஈஸா நபி சிலுவையில் அறையப்பட்டாரா?
இவ்விரு வசனங்களும் (4:157, 158) ஈஸா நபியவர்களை அல்லாஹ் தன்னளவில் உயர்த்திக் கொண்டான் என்று கூறுகின்றன.
ஈஸா நபி சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டார்கள் என்று கூறப்படுவதை இவ்வசனங்கள் நிராகரிக்கின்றன. ஆள்மாறாட்டம் காரணமாக வேறொருவரைத்தான் யூதர்கள் கொன்றனர் என்றும் இவ்வசனங்கள் கூறுகின்றன.
இவ்வசனத்தில் இடம் பெற்றுள்ள "உயர்த்திக் கொண்டான்'' என்ற சொல் அந்தஸ்து உயர்வைத்தான் குறிக்கும் என்று சிலர் வாதிடுகின்றனர். இது தவறாகும்.
"அவரை உயர்த்திக் கொண்டான்'' என்று மட்டும் கூறப்பட்டால் அந்தஸ்து உயர்வு என்று பொருள் கொள்ள சிறிதளவாவது இடம் இருக்கும். ஆனால் தன்னளவில் என்பதையும் சேர்த்துக் கூறுவதால் அவ்வாறு பொருள் கொள்ள வழியில்லை.
'ரஃபஅ'என்ற சொல்லுக்கு "அந்தஸ்து உயர்வு'' என்று பொருள் கொள்வதாக இருந்தால் அந்தஸ்து, பதவி, புகழ், தகுதி என்பன போன்ற சொற்கள் அச்சொல்லுடன் சேர்க்கப்பட வேண்டும்.
"உயர்ந்த தகுதிக்கு அவரை உயர்த்தினான்'' என்று இத்ரீஸ் நபி பற்றி அல்லாஹ் கூறுகிறான் (திருக்குர்ஆன் 19:57)
ஆனால் ஈஸா நபியைப் பற்றி இவ்வசனத்தில் கூறும்போது அவரையே உயர்த்திக் கொண்டதாகக் கூறுகிறான். இதற்கு நேரடிப் பொருள் தான் கொள்ள வேண்டும்.
தொழுகையில் கைகளை நாம் உயர்த்திக் கட்டுகிறோம். இதைக் குறிப்பிடுவதற்கும் 'ரஃபஅ' என்ற சொல்லே பயன்படுத்தப்பட்டுள்ளது. கைகளின் அந்தஸ்தை உயர்த்துவது என்பது இதன் பொருளல்ல. கைகளையே உயர்த்துதல் என்பது தான் பொருள்.
அடுத்த (4:157) வசனமும், ஈஸா நபி மரணிக்கவில்லை என்பதற்கான வேறு பல சான்றுகளும் இந்தக் கருத்தை உறுதிப்படுத்துகின்றன.
ஈஸா நபி உடலுடன் உயர்த்தப்பட்டார்கள் என்பது தான் இவ்வசனத்தின் சரியான பொருள்.
ஈஸா நபி மரணித்து விட்டார்களா? அல்லது உயர்த்தப்பட்டு இறுதிக் காலத்தில் இறங்கி வந்து மரணிப்பார்களா என்பது பற்றி அறிய 93, 101, 134, 151, 278, 342, 456 ஆகிய குறிப்புகளையும் காண்க!