112. விபச்சாரக் குற்றச்சாட்டுக்கு நான்கு சாட்சிகள்
12. விபச்சாரக் குற்றச்சாட்டுக்கு நான்கு சாட்சிகள் இவ்வசனங்களில் (4:15, 24:4, 24:13) பெண்களின் கற்புக்கு எதிராக நான்கு சாட்சிகள் இருந்தால் மட்டுமே குற்றம் சுமத்த வேண்டும் என்று சொல்லப்படுகிறது.
பெண்களின் கற்புக்கும், ஒழுக்கத்துக்கும் எதிரான வதந்திகளையும், பெண்களுடன் ஆண்களைத் தொடர்புபடுத்திக் கூறும் செய்திகளையும் மக்கள் ஆர்வத்துடன் செவிமடுத்து அதை நம்பவும் செய்கின்றனர்.
"இருந்தாலும் இருக்கும்'' என்று கூறி அதை ஆமோதிக்கின்றனர். இதனால் ஒரு பெண்ணுடைய எதிர்காலமே சூன்யமாகி விடுவதைப் பற்றி இவர்களுக்குக் கவலையில்லை. தங்கள் மகளைப் பற்றியோ, சகோதரிகள் பற்றியோ மற்றவர்கள் இப்படிப் பேசினால் அவர்கள் அதை ரசிப்பார்களா?
செய்தி ஊடகங்களும் பெண்களின் ஒழுக்கம் குறித்து ஆராயாமல் பரபரப்புச் செய்திகளை வெளியிட்டு வருகின்றன.
ஆனால் இஸ்லாம் மட்டும் பெண்களின் கற்பொழுக்கம் பற்றி அவதூறு பேசுவதைக் கடுமையான குற்றமாகக் கருதுகின்றது. ஒரு பெண் மீது விபச்சாரக் குற்றம் சுமத்தினால் குறைந்தபட்சம் நான்கு நேரடி சாட்சிகள் இருக்க வேண்டும் என்று இஸ்லாம் வலியுறுத்துகிறது.
நான்கு சாட்சிகள் இல்லாமல் பெண்களின் கற்புக்கு எதிராகக் குற்றம் சுமத்தினால், அவர்கள் கூறுவது உண்மையாக இருந்தால் கூட குற்றம் சுமத்தியவர்களுக்கு 80 சவுக்கடிகள் தண்டனையாக வழங்கப்பட வேண்டும் என இவ்வசனம் (24:4) கூறுகிறது.
ஒரு பெண் தவறாக நடப்பதை மூன்று ஆண்கள் பார்த்தாலும் அதை அவர்கள் பரப்புவது அவதூறாகவே கருதப்படும். அவர்களுக்கு எண்பது கசையடிகள் அடிக்கப்படும். நான்கு நபர்கள் நேரடியாகப் பார்த்தால் மட்டுமே அது ஏற்றுக்கொள்ளப்படும்.
பெண்களுக்கு எதிராக வதந்தி பரப்புவோருக்கு எதிராக உலகில் எந்த நாட்டிலும் இது போன்ற கடுமையான சட்டங்களைப் பார்க்க முடியாது. பெண்களின் மானத்தையும், மரியாதையையும் காப்பதில் இஸ்லாம் மார்க்கம் காட்டும் அக்கறையை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.