210. தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்ட மூவர்
இவ்வசனத்தில் (9:118) மூன்று நபர்களை அல்லாஹ் மன்னித்ததாகச் சொல்கிறான்.
மிகவும் நெருக்கடியான, சிரமமான கட்டத்தில் நடைபெற்ற போர்களில் தபூக் போரும் ஒன்று. இப்போரில் அனைவரும் பங்கெடுக்க வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டிருந்தனர். ஆயினும் மூன்று நபித்தோழர்கள் போருக்குப் புறப்படவில்லை. பிறகு சென்று போரில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் சேர்ந்து கொள்ளலாம் என்று நினைத்து பயணத்தைத் தாமதப்படுத்தினார்கள். நாளை போகலாம் அடுத்த நாள் போகலாம் என்று காலம் கடத்தி கடைசியில் அம்மூவரும் அப்போரில் பங்கெடுக்கவில்லை.
இதனால் அம்மூவருடனும் எந்தவித உறவும் வைக்கலாகாது என்று முஸ்லிம்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டனர்.
அம்மூவரும் தமது செயலுக்காக மிகவும் வருந்தினார்கள். எனவே அவர்களை இறைவன் மன்னித்தான். அதைத்தான் இவ்வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்.
இந்த சம்பவத்தை விரிவாக அறிய புகாரி 4418, 4676, 4677, 6690 ஆகிய ஹதீஸ்களைப் பார்க்கவும்.