457. பைபிளில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பற்றி முன்னறிவிப்பு
தமக்குப் பின் வரவிருக்கின்ற ஓர் இறைத்தூதரைப் பற்றி ஈஸா நபி அவர்கள் முன்னறிவிப்பு செய்ததாகவும் அவரது பெயர் 'அஹ்மத்' என்றும் 61:6 வசனத்தில் கூறப்பட்டுள்ளது. 7:157 வசனத்திலும் இது பற்றி கூறப்படுகிறது.
பரவலாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பெயர் 'முஹம்மத்' என்று அறியப்பட்டிருந்தாலும், அவர்களுக்கு 'அஹ்மத்' என்ற மற்றொரு பெயரும் இருந்தது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே என் பெயர் 'அஹ்மத்' என்று கூறி இருக்கிறார்கள்.
நூல்: புகாரி 3532, 4896
கிறித்தவ திருச்சபைகள் பைபிளில் பலவித மாற்றங்களைச் செய்த பின்னரும், எஞ்சியிருக்கும் பைபிளில் இயேசு சொன்ன முன்னறிவிப்பும், முஹம்மது நபியைப்பற்றி மேலும் பல முன்னறிவிப்புகளும் காணக்கிடைக்கின்றன.
இயேசுவின் காலத்தில் வாழ்ந்த யூதர்கள் தம் வேதத்தில் முன்னறிவிக்கப்பட்டவாறு மூன்று நபர்களின் வருகையை எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். பின்வரும் பைபிள் வசனத்திலிருந்து இதை அறியலாம்.
எருசலேமிருந்து யூதர்கள் ஆசாரியாரையும், லேவியரையும் யோவானிடத்தில் அனுப்பி நீர் யார் என்று கேட்டபோது அவன் மறுதலியாமல் அறிக்கையிட்டது மட்டுமின்றி நான் கிறிஸ்து அல்ல என்றும் அறிக்கையிட்டான். அப்பொழுது அவர்கள் பின்னர் யார் எலியாவா? என்று கேட்டார்கள். அதற்கு நான் அவன் அல்ல என்றான். நீர் தீர்க்கதரிசியானவரா? என்று கேட்டார்கள், அதற்கும் அல்ல என்றான்.
யோவான் 1:19,22
யோவான் (யஹ்யா நபி) இயேசுவின் காலத்தில் வாழ்ந்தவர். இயேசுவுக்கே ஞானஸ்நானம் வழங்கியவர். அவர் மக்களைச் சீர்திருத்தும் பணியில் ஈடுபட்டபோது யூதர்கள் அவரிடம் நீர் கிருஸ்துவா? அல்லது எலியாவா? தீர்க்கதரிசியானவரா? என்று கேட்டதிலிருந்து நமக்குத் தெரிவது என்ன?
உலகைத் திருத்த மூன்று நபர்கள் வர வேண்டியுள்ளது என்பதை அன்றைய யூதர்கள் விளங்கி இருந்தனர். இதுவரை அம்மூவரில் ஒருவரும் வரவில்லை எனவும், இனிமேல் தான் அம்மூவரும் வருவார்கள் எனவும் நம்பிக்கை கொண்டிருந்தார்கள். இதனால் தான் யோவானிடம் நீர் கிறிஸ்துவா? எலியாவா? தீர்க்கதரிசியானவரா? என்று கேட்டனர்.
இது போன்ற கேள்வியை இயேசுவும் சந்தித்தார். அப்போது அவர் சொன்ன பதில் என்ன?
இயேசு அவர்களுக்குப் பிரதியுத்திரமாக எலியா முந்திவந்து எல்லாவற்றையும் சீர்படுத்துவது மெய் தான். ஆனாலும் எலியா வந்தாயிற்று என்று உங்களுக்குச் சொல்கிறேன். அவனை அறியாமல் தங்கள் இஷ்டப்படி அவனுக்குச் செய்தார்கள். இவ்விதமாய் மனுஷகுமாரனும் அவர்களால் பாடுபடுவார். அவர் யோவான் ஸ்நானகனைக் குறித்து தங்களுக்குச் சொன்னார் என்று சீஷர்கள் அப்போது அறிந்து கொண்டார்கள்.
மாத்தேயு 17:11-13
இயேசு, தம்மைக் கிறிஸ்து எனக் கூறியபோது, நீர் கிறிஸ்து என்றால் உமக்கு முன்னர் எலியா வர வேண்டுமே என்று யூதர்கள் ஐயத்தை எழுப்புகிறார்கள். எலியா வந்து நிலைமையைச் சீர்படுத்துவார் என்பது உண்மை தான். எலியா எனக்கு முன்னர் வந்து விட்டார். அவர் தான் யோவான். யோவான் தான் எலியா என்பதை மக்கள் அறியாமல் அவரைத் தொல்லைப்படுத்தினார்கள். எலியாவுக்குப் பின் நான் வந்துள்ளதால் நான் தான் கிறிஸ்து என்று இயேசு மேற்கண்ட வசனத்தில் கூறுகிறார்.
இந்த விபரங்களை மேற்கண்ட வசனங்களைச் சிந்திக்கின்ற யாருமே அறிந்து கொள்ளலாம். யோவான் தன்னை எலியா அல்ல என ஏன் கூற வேண்டும் என்ற கேள்வி எழலாம். யோவானை அந்த மக்கள் சித்திரவரை செய்ததால் மறுத்திருக்கலாம்.
இப்போது விஷயத்துக்கு வருவோம்.
எலியாவின் வருகையை யூதர்கள் எதிர்பார்த்தனர். அவர் வந்து விட்டார். அவர் தான் யோவான்.
அவரைத் தொடர்ந்து கிறிஸ்து வர வேண்டும் என்று யூதர்கள் எதிர்பார்த்தனர். அவரும் வந்து விட்டார். அவர் தாம் இயேசு கிறிஸ்து.
தீர்க்கதரிசியானவர் வர வேண்டுமே? அவர் யார்? யோவான் காலம் முதல் இன்று வரை தீர்க்கதரியாக வந்தவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாம். இயேசுவிற்குப் பிறகு வந்த தீர்க்கதிரிசியானவரை - நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை கிறிஸ்தவர்கள் ஏற்க மறுத்தால் அவர்கள் பைபிளின் போதனையை மறுக்கிறார்கள் என்பது பொருள்.
இந்த நம்பிக்கையினடிப்படையில் தான் ஜெருசலேமிருந்து யூதர்கள் வலசை புறப்பட்டு மதீனாவில் குடியேறினர். தீர்க்கதரிசியானவரின் வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்தனர். அவ்வாறு இல்லாவிட்டால் மதீனாவுக்கு யூதர்கள் வரவேண்டிய அவசியமே இல்லை.
இதுபோல் பழைய ஏற்பாட்டிலும் நபிகள் நாயகம் குறித்த முன்னறிவிப்புகள் பல உள்ளன. உதாரணத்துக்கு ஒன்றை மட்டும் இங்கே எடுத்துக் காட்டுகிறோம்.
இஸ்ரவேல் அனைவரையும் மோசே அழைத்து அவர்கள் கடைப்பிடிக்க வேண்டியவைகளையும் அவர்கள் தவிர்க்க வேண்டியவைகளையும் விரிவாகக் கூறுகின்றார். வரவிருக்கும் தீர்க்கதரிசியைப் பற்றியும் அதனிடையே கூறுகிறார்.
உன் தேவனாகிய கர்த்தர் என்னைப் போல் ஒரு தீர்க்கதரிசியை உனக்காக உன் நடுவே உன் சகோதரரிலிருந்து எழும்பப் பண்ணுவார். அவருக்குச் செவி கொடுப்பீர்களாக. (என்றார்).
உபகாமம் 18:15
கர்த்தர் மோசேயிடம் இதே விஷயத்தைப் பின்வருமாறு கூறுகிறார்.
அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி, அவர்கள் சொன்னது சரியே. உன்னைப் போல் ஒரு தீர்க்கதரிசியை நான் அவர்களுக்காக அவர்கள் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணி என் வார்த்தைகளை அவர் வாயில் அருளுவேன். நான் அவருக்குக் கற்பிப்பதை அவர்களுக்குச் சொல்வார்.
உபாகமம் 18:17,18
எதிர்காலத்தில் மோசேயைப் போல் ஒருவர் வர இருப்பது பற்றி இவ்வசனங்கள் பேசுகின்றன. மோசேவுக்குப்பின் அந்தச் சமுதாயத்திற்கு வழிகாட்டியாகவும், தலைவராகவும் திகழ்ந்த யோசுவாவையே இந்த முன்னறிவிப்பு அடையாளம் காட்டுகிறது என்று யூதர்கள் நம்புகின்றனர். இல்லை இது இயேசுவையே குறிக்கிறது என்று கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர்.
இந்த முன்னறிவிப்பில் பயன்படுத்தப்பட்டுள்ள வார்த்தைகள் ஒவ்வொன்றையும் உரிய கவனத்துடன் சிந்தித்தால் இது யோசுவாவையும் குறிக்காது, இயேசுவையும் குறிக்காது என்பதை அறிந்து கொள்ளலாம்.
இது யாரைக் குறித்த முன்னறிவிப்பு என்பதை அறிந்து கொள்வதற்கு முன் இது யோசுவாவைக் குறிக்காது என்பதையும், இயேசுவையும் குறிக்காது என்பதையும் முதலில் அறிந்து கொள்வோம்.
தனக்குப் பின் ஒருவர் வரவிருப்பது குறித்து மோசே இஸ்ரவேலர்களிடம் கூறினார். இஸ்ரவேலர்களில் ஒன்றிரண்டு நபர்களை அழைத்து இதைக் கூறவில்லை. மாறாக இஸ்ரவேலர் அனைவரையும் அழைத்து அவர் இவ்வாறு கூறியதாக உபாகமம் கூறுகிறது.
வரவிருப்பவர், இஸ்ரவேலர்களில் ஒருவராக இருந்தால் மோசே எப்படிக் கூறியிருக்க வேண்டும்? உங்களுக்காக உங்களிலிருந்து என்று தான் கூறியிருக்க வேண்டும். அவ்வாறு கூறாமல் உனக்காக என் சகோதரரிலிருந்து என்று மோசே கூறியதாக உபாகமம் கூறுகிறது.
உங்களிலிருந்து அவர் தோன்றுவார் என்று மோசே கூறாமல் உங்கள் சகோதரரிலிருந்து தோன்றுவார் என்று கூறியிருப்பதால் அந்தத் தீர்க்கதரிசி இஸ்ரவேல் இனத்தில் தோன்ற மாட்டார் என்பது தெளிவாகத் தெரிகிறது.
மோசேயிடம் கர்த்தர் கூறிய வார்த்தையைக் கவனியுங்கள்! அந்த வார்த்தையும் இதே கருத்திலேயே அமைந்திருக்கிறது. அவர்களுக்காக அதாவது இஸ்ரவேலர்களுக்காக அவர்களிலிருந்து - அதாவது இஸ்ரவேல் இனத்திலிருந்து அவர் தோன்றுவார் எனக் கூறப்படவில்லை. மாறாக அவர்களின் அதாவது இஸ்ரவேலரின் - சகோதரரிலிருந்து - அதாவது இஸ்ரவேலரின் சகோதர இனத்திலிருந்து தான் அந்தத் தீர்க்கதரிசி தோன்றுவார் என்று கூறப்பட்டுள்ளது.
வரவிருப்பவர் இஸ்ரவேல் இனத்தில் தோன்ற மாட்டார் என்பதும், அவர் இஸ்ரவேலின் சகோதர இனத்தாராகிய இஸ்மவேல் இனத்தில் தான் அவர் தோன்றுவார் என்பதும் இரண்டாவது கருத்துக்கு இடமின்றி இதில் இருந்து தெரிகிறது.
யோசுவா இஸ்ரவேல் இனத்தைச் சேர்ந்தவர் என்பதால் இது அவரைக் குறிக்காது என்பதில் சந்தேகம் இல்லை.
இனத்தால் இயேசுவும் இஸ்ரவேலர் என்பதால் இது அவரைக் குறித்த முன்னறிவிப்பாகவும் இருக்க முடியாது.
எனவே இஸ்ரவேல் இனத்தைச் சேராத ஒருவரைப் பற்றிக் கூறும் வரிகள் இஸ்ரவேல் இனத்தைச் சேர்ந்த இவ்விருவரையும் நிச்சயம் குறிக்க முடியாது.
இந்த முன்னறிவிப்பில் என்னைப் போல் ஒரு தீர்க்கதரிசி என்று மோசேவும், உன்னைப் போல் ஒரு தீர்க்கதரிசி என்று மோசேயை நோக்கி கர்த்தரும் கூறுகின்றனர். வரவுள்ள தீர்க்கதரிசி மோசேயைப் போன்றவராக இருக்க வேண்டும் என்பது இதிலிருந்து தெரிகின்றது.
மோசேயைப் போன்றவர் என்ற ஒப்புநோக்குதல் தீர்க்கதரிசி என்பதை மட்டும் அடிப்படையாகக் கொண்டு கூறப்படவில்லை. மாறாக, எல்லா வகையிலும் மோசேயைப் போன்றவராக அந்தத் தீர்க்கதரிசி இருப்பார் என்பதையே இந்த ஒப்பீடு கூறுகிறது.
மோசேவுக்குப் பின்னர் இயேசு வரை சாலமோன், எசக்கியேல், தானியேல் மற்றும் பல தீர்க்கதரிசிகள் வந்துள்ளனர். தீர்க்கதரிசி என்ற வகையில் இந்த உவமை கூறப்பட்டுள்ளது என்றால் இவர்கள் அனைவருக்குமே இந்த முன்னறிவிப்பு பொருந்தும். இயேசுவைத்தான் குறிக்கும் என்று கூற முடியாது.
மேலும் மோசேவுக்குப் பின் ஒரு தீர்க்கதரிசி அல்ல. பல தீர்க்கதரிசிகள் வந்துள்ளனர். இதைப் பற்றி முன்னறிவிப்புச் செய்வதென்றால் உன்னைப் போல் பல தீர்க்கதிரிசிகள் என்று தான் கூறவேண்டும். அவ்வாறு கூறாமல் ஒரு தீர்க்கதரிசி என்று கூறப்படுகிறது. எனவே உன்னைப் போல் ஒரு தீர்க்கதரிசி என்பது எல்லா வகையிலும் மோசேயைப் போன்று திகழும் குறிப்பிட்ட ஒரேயொரு தீர்க்கதரிசியையே முன்னறிவிப்புச் செய்கிறது என்பதில் ஐயமில்லை.
இயேசு எல்லா வகையிலும் மோசேயைப் போன்றவராக இருந்தாரா? நிச்சயமாக இல்லை.
இயேசு அதிசயமான முறையில் பிறந்தார். மோசேயும், முஹம்மது நபியும் மற்றவர்களைப் போல் பிறந்தனர்.
இயேசு பிரம்மச்சாரியாக இருந்தார் என்பது கிறித்தவர்களின் நம்பிக்கை. மோசேயும், முஹம்மது நபியும் இல்லறம் நடத்தியவர்கள்.
இயேசு தம் வாழ்நாளில் மக்களால் அங்கீகரிக்கப்படவில்லை. மோசேயும், முஹம்மது நபியும் தம் வாழ்நாளில் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டனர்.
இயேசு ஆட்சி புரியவில்லை. மோசேயும், முஹம்மது நபியும் ஆட்சி புரிந்தனர்.
இயேசு மரணித்து உயிர்த்து எழுந்தார் என்பது கிறித்தவர்களின் நம்பிக்கை. மோசேயும், முஹம்மது நபியும் மரணித்த பின் உயிர்த்தெழவில்லை.
இயேசுவுக்கு குற்றவியல் சட்டங்கள் அருளப்படவில்லை. மோசேவுக்கும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும் குற்றவியல் சட்டங்கள் அருளப்பட்டன.
எனவே மோசேயைப் போன்றவர் என்ற முன்னறிவிப்பு முஹம்மது நபியைத்தான் குறிக்கும்.