72. அச்சமற்ற நிலையில் தொழுவது எப்படி?
இவ்வசனத்தில் (2:239) எதிரிகள் பற்றியோ, வேறு எதைப் பற்றியுமோ அச்சம் இருந்தால், நடந்து கொண்டோ, வாகனத்தில் பயணம் செய்து கொண்டோ தொழலாம் எனக் கூறப்படுகிறது. இதை எளிதாக விளங்கிக் கொள்ளலாம்.
அச்சம் தீர்ந்து விடுமானால் அல்லாஹ் உங்களுக்குக் கற்றுத் தந்தவாறு அல்லாஹ்வை நினைவு கூருங்கள் என்று கூறப்பட்டுள்ளது.
அச்சமில்லாத சாதாரண நிலையில் எவ்வாறு தொழுவது என்பதை அல்லாஹ் உங்களுக்குக் கற்றுத் தந்தான் என இவ்வசனம் கூறுகிறது. ஆனால் சாதாரண நிலையில் எவ்வாறு தொழுவது என்று கூறும் வசனம் குர்ஆனில் இல்லை. இதில் குழப்பம் ஏற்படத் தேவை இல்லை. ஏனெனில் திருக்குர்ஆன் மட்டுமின்றி அதற்கான விளக்கமும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு வழங்கப்பட்டது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சாதாரண நிலையில் தொழும் முறையைக் கற்றுத் தந்துள்ளனர். அவர்கள் கற்றுத் தந்ததைத்தான் அல்லாஹ், தான் கற்றுத் தந்ததாகக் கூறுகிறான்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விளக்கமும் இறைவன் புறத்திலிருந்து பெறப்பட்டவை என்பதற்கும், குர்ஆனைப் போலவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விளக்கமும் அவசியம் என்பதற்கும் இது சான்றாகவுள்ளது.
இது பற்றி மேலும் அறிய 18, 36, 39, 50, 55, 56, 57, 60, 67, 105, 125, 127, 128, 132, 164, 184, 244, 255, 256, 258, 286, 318, 350, 352, 358, 430 ஆகிய குறிப்புகளையும் காண்க!