411. குற்றம் செய்யாதவருக்குச் சிறைவாசம் ஏன்?
இவ்வசனத்தில் (12:35) யூஸுஃப் நபி குற்றமற்றவர் எனத் தெரிந்த பின்னரும் அவரைச் சிறையில் அடைக்க வேண்டும் என்று அவர்களுக்குத் தோன்றியது எனக் கூறப்பட்டுள்ளது.
குற்றமற்றவர் என்று தெரிந்த பின் எதற்காகச் சிறையில் அடைக்க வேண்டும் என்ற சந்தேகம் ஏற்படலாம்.
யூஸுஃப் நபியிடம் அவரது எஜமானி தவறாக நடக்க முயன்றார் என்ற செய்தி ஒரு புறமும், யூஸுஃப் தனது எஜமானியிடம் தவறாக நடக்க முயன்றார் என்ற வதந்தி இன்னொரு புறமும் மக்களிடம் பரவியிருந்தது.
இந்த நிலையில் யூஸுஃபைச் சிறையில் அடைக்காமல் விட்டுவிட்டால் அவரது எஜமானிதான் குற்றவாளி என்பது அம்பலமாகி விடும். இதனால் அரச குடும்பத்து கவுரவம் பாதிக்கப்படும் என்று அஞ்சினார்கள்.
எனவே தான் யூஸுஃப் நபியைச் சிறையில் அடைக்க வேண்டும் என்று முடிவு செய்தனர்.