123. முரண்பாடில்லாத திருக்குர்ஆன்
இவ்வசனங்களில் (4:82, 41:42) திருக்குர்ஆனில் முரண்பாடும், தவறும் இல்லை என்று கூறப்படுகிறது.
மனிதன் எவ்வளவு பெரிய அறிவாளியாக இருந்தாலும் தான் கூறியதை, தானே மறந்து முரண்பாடாகக் கூறி விடுவான். அல்லது தவறாகப் புரிந்து கொண்டு முதலில் ஒன்றைக் கூறி விட்டு பிறகு சரியாகப் புரிந்து கொண்டு வேறொன்றைக் கூறுவான்.
அவன் சந்திக்கின்ற பிரச்சினைகள், துன்பங்கள் போன்றவற்றால் ஏற்படும் மனஇறுக்கம் காரணமாகவும் நேற்று கூறியதையே இன்று மறந்து முரண்பட்டுப் பேசி விடுவான்.
ஆனால் கடவுளுக்கு மறதியோ, அறியாமையோ, மனஇறுக்கமோ ஏற்படாது என்பதால் கடவுளின் வார்த்தையில் முரண் இருக்காது.
அதுவும் திருக்குர்ஆன் ஒரே நேரத்தில் மொத்தமாக அருளப்படவில்லை. மாறாக 23 ஆண்டுகளில் சிறிது சிறிதாக அருளப்பட்டதாகும்.
இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சுயமாகக் கூறியிருந்தால் 23 ஆண்டுகளில் எத்தனையோ விஷயங்களில் முரண்பட்டுப் பேசியிருப்பார்கள். ஆனால் இதில் எந்த முரண்பாடும் இல்லை என்பதே திருக்குர்ஆன் இறைவேதம் என்பதற்கு முக்கியமான சான்றாகவுள்ளது.
மேலும் விபரத்துக்கு முன்னுரையில் இது இறைவேதம் என்ற தலைப்பைப் பார்க்கவும்.