104. இறைவன் அறிவித்துக் கொடுத்த மறைவானவை
இவ்வசனங்களில் (3:179, 72:26-27) மறைவான விஷயங்களை தனது தூதர்களுக்கு அல்லாஹ் அறிவித்துக் கொடுப்பான் என்று சொல்லப்படுகிறது. இவ்வசனங்களைச் சரியான முறையில் விளங்காத சிலர் இறைத்தூதர்களுக்கு மறைவான எல்லா விஷயங்களும் தெரியும் என்பதற்கு இவ்வசனங்கள் ஆதாரங்களாக உள்ளதாக வாதிடுகின்றனர்.
மறைவானவை அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரியும். வானவர்களுக்கோ, நபிமார்கள் உள்ளிட்ட மனிதர்களுக்கோ, ஜின்களுக்கோ மறைவானவை தெரியாது என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை.
அல்லாஹ்வுக்கு மட்டுமே மறைவான ஞானம் உண்டு என்றும், நபிமார்கள், வானவர்கள் உட்பட எவருக்கும் மறைவான ஞானம் இல்லை என்றும் திருக்குர்ஆன் 6:59, 10:20, 27:65, 31:34, 34:3, 2:,30,31,32, 16:77, 34:14, 5:109, 2:36, 7:20, 7:22, 7:27, 20:115, 20:120,121, 11:31, 11:42, 11:46,47, 9:114, 11:69,70, 15:53, 15:54, 37:104, 51:26, 5:116, 5:117, 11:77, 11:81, 15:62, 27:20, 27:22, 12:11-15, 12:66, 38:22-24, 7:150, 20:67, 20:86, 28:15, 3:44, 4:164, 6:50, 6:58, 7:187, 7:188, 11:49, 12:102, 33:63, 42:17, 79:42,43 ஆகிய வசனங்கள் கூறுகின்றன.
இவ்விரு வசனங்களில் மட்டும் (3:179, 72:26-27) "மறைவானவற்றைத் தனது தூதர்களுக்கு இறைவன் அறிவித்துக் கொடுப்பான்'' எனக் கூறப்படுகிறது.
இவ்விரு வசனங்களும் கூறுவது என்ன?
3:179 வசனத்தில் மறைவானவற்றைத் தனது தூதருக்கு இறைவன் அறிவித்துக் கொடுப்பதாகக் கூறுவது பொதுவானதல்ல.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் நயவஞ்சகர்கள் முஸ்லிம்களைப் போலவே வேடமிட்டு முஸ்லிம்களுடன் இரண்டறக் கலந்திருந்தனர்.
இத்தகைய நயவஞ்சகர்களைப் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அறிவித்துக் கொடுப்பதையே இவ்வசனம் (3:179) குறிப்பிடுகிறது. இவ்வசனத்தின் துவக்கத்தில் "முஸ்லிம்களையும், நயவஞ்சகர்களையும் இரண்டறக் கலந்திருக்குமாறு இறைவன் விட்டு வைக்க மாட்டான்'' எனக் கூறிய பிறகே தூதர்களுக்கு மறைவானதை அறிவிப்பதாக அல்லாஹ் கூறுகிறான்.
அது போல் 72:26,27 வசனங்களில் அனைத்து மறைவான விஷயங்களையும் இறைத்தூதர்களுக்கு அறிவித்துக் கொடுப்பான் என்று கூறப்படவில்லை. மாறாக நம்பிக்கை கொள்ள வேண்டிய மறுமை, சொர்க்கம், நரகம் போன்ற மறைவானவைகளைப் பற்றி இறைத்தூதர்களுக்கு அறிவிப்பதையே இவ்வசனங்கள் கூறுகின்றன. இதைப் புரிந்து கொள்வற்கு இவ்வசனங்களிலேயே போதுமான சான்றுகள் உள்ளன.
தமக்கு அறிவிக்கப்படுகின்ற செய்திகளைத் தூதர்கள் மக்களுக்கு அறிவிக்கிறார்களா? என்று கண்காணிப்பதற்காக, கண்காணிக்கும் வானவர்களைத் தொடர்ந்து அனுப்புவதாக இவ்வசனங்களில் அல்லாஹ் கூறுகிறான்.
நம்பிக்கை கொள்ள வேண்டிய மறைவான விஷயங்களை இறைத்தூதருக்கு அறிவித்துக் கொடுத்து அதை அவர் மக்களுக்கு அறிவிப்பார் என்பது தான் இவ்வசனத்தின் கருத்தாகும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இறைவன் அறிவித்துக் கொடுத்த மறைவான விஷயங்கள் அனைத்தும் அவர்களால் மக்களுக்குச் சொல்லப்பட்டு விட்டன. மக்களுக்குச் சொல்லப்படுவதற்காகவே அதை அறிவித்ததாக அல்லாஹ் குறிப்பிடுவதால் அவர்களுக்கு அறிவிக்கப்பட்ட மறைவானவற்றில் ஒன்றைக் கூட மக்களுக்கு அறிவிக்காமல் அவர்கள் விட்டதில்லை.
எனவே மறுமை, சொர்க்கம், நரகம், மண்ணறை வாழ்வு போன்ற முஸ்லிம்கள் நம்பிக்கை கொள்ள வேண்டிய மறைவான செய்திகளை மக்களுக்குச் சொல்வதற்காகத் தூதர்களுக்கு இறைவன் அறிவித்துக் கொடுப்பானே தவிர, இறைவனுக்குத் தெரியும் அனைத்து மறைவான செய்திகளையும் தூதர்களுக்கு அறிவித்துக் கொடுக்க மாட்டான்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இறைவன் அறிவித்துக் கொடுத்த மறைவான விஷயங்களை அவர்கள் கூட்டாமல் குறைக்காமல் அப்படியே நமக்கும் சொல்லிச் சென்று விட்டதால் அவர்களுக்குத் தெரிந்த மறைவான செய்திகள் அனைத்தும் நமக்கும் தெரிந்ததாகி விடுகின்றன.
இந்தக் கருத்துக்கள் இவ்வசனங்களுக்கு உள்ளேயே அடங்கியிருந்தும், இல்லாத கருத்தைச் சிலர் வலிந்து திணிக்கிறார்கள். இவர்களின் வாதத்திற்கு இந்த வசனங்களில் எந்தச் சான்றுமில்லை.
இவற்றைத் தவிர வேறு மறைவான விஷயங்கள் எதுவும் யாருக்கும் இறைவனால் அறிவிக்கப்படுவதில்லை.
தர்கா வழிபாட்டை நியாயப்படுத்துவோரின் இதர வாதங்கள் எப்படி தவறானவை என்பதை அறிந்து கொள்ள 17, 41, 49, 79, 83, 100, 121, 122, 140, 141, 193, 213, 215, 245, 269, 298, 327, 397, 427, 471 ஆகிய குறிப்புகளையும் காண்க!