255. குர்ஆனை விளங்குவது எப்படி?
மனிதர்கள் சிந்திப்பதற்காகவும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்குவதற்காகவும் குர்ஆனை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மீது அருளியதாக அல்லாஹ் இவ்வசனத்தில் (16:44) கூறுகின்றான்.
அதாவது குர்ஆனை விளங்கிட இரு வழிகள் உள்ளன என்று இவ்வசனம் கூறுகிறது.
குர்ஆன் வசனங்களை நாம் சிந்தித்து விளங்குவது முதல் வழி.
நமது சிந்தனைக்கு விளங்காத பட்சத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விளக்கத்தின் துணையுடன் விளங்குவது இரண்டாவது வழி.
இதுதான் குர்ஆனை விளங்குவதற்கு அல்லாஹ் கற்றுத் தரும் சரியான முறையாகும்.
குர்ஆனில் இரு விதமான வசனங்கள் உள்ளன. சில வசனங்கள் வாசித்த உடன் விளங்கிவிடும். வாசித்தவுடன் விளங்காவிட்டாலும் கொஞ்சம் சிந்தனையைச் செலுத்தி வாசித்தால் விளங்கி விடும். இது ஒரு வகை.
இன்னும் சில வசனங்கள் வாசித்தவுடன் பொருள் விளங்கிவிடும் என்றாலும் அதன் கருத்து முழுமையாக விளங்காது; சிந்தனை வட்டத்துக்குள் அது வராது. அது போன்ற வசனங்களின் கருத்து என்ன என்பதை அவனது தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்குவார்கள். அவர்களின் விளக்கத்தின் துணையுடன் அவ்வசனங்களை விளங்கினால்தான் அதன் கருத்து முழுமையாக விளங்கும்.
உதாரணமாக தொழுங்கள், நோன்பிருங்கள், ஸகாத் கொடுங்கள், ஹஜ் செய்யுங்கள் என்று சொல்லப்படும்போது அதன் பொருள் அனைவருக்கும் விளங்கிவிடும். ஆனால் இவற்றை எப்படி, எந்த நேரத்தில், எந்த அளவில் செய்வது என்பதை நாம் அறிந்து கொள்ள நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விளக்கம் அவசியமாகும்.
மேற்கண்ட வசனத்துக்குள் அடங்கியுள்ள கருத்து இது தான். "நீர் விளக்குவதற்காகவும், அவர்கள் சிந்திப்பதற்காகவும் இந்தப் போதனையை உமக்கு அருளினோம்'' என்பதற்கு இதைத் தவிர வேறு பொருள் இருக்க முடியாது.
குர்ஆனை வாசித்தவுடன், அல்லது சிந்தித்தவுடன் முழுமையாக விளங்கி விடும் என்றால் அதை மட்டும் அல்லாஹ் இங்கே கூறியிருப்பான். "நீர் விளக்குவதற்காக'' என்று அல்லாஹ் கூறியிருக்க மாட்டான்.
திருக்குர்ஆனை ஆதாரமாகக் கொண்டு முஸ்லிம்கள் செயல்படுவது எவ்வாறு அவசியமோ அதுபோல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விளக்கத்தையும் ஆதாரமாகக் கொண்டு செயல்பட வேண்டும் என்பதற்கு இவ்வசனம் ஆதாரமாக அமைந்துள்ளது.
திருக்குர்ஆனுடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விளக்கமும் அவசியம் என்பதை மேலும் விரிவாக அறிய 18, 36, 39, 50, 55, 56, 57, 60, 67, 72, 105, 125, 127, 128, 132, 164, 184, 244, 255, 256, 258, 286, 318, 350, 352, 358, 430 ஆகிய குறிப்புகளையும் காண்க!