418. பெண்கள் பள்ளிக்கு வரலாமா?
பள்ளிவாசல்களைப் பற்றிப் பேசும் இவ்வசனங்களில் (24:37, 9:108) 'அதில் ஆண்கள் உள்ளனர்' என்று கூறப்பட்டுள்ளது.
இதைத் தவறாகப் புரிந்து கொண்டு, ஐவேளைத் தொழுகைக்கும், ஜுமுஆ தொழுகைக்கும் பள்ளிவாசலுக்குப் பெண்கள் வரக் கூடாது என்று சில அறிஞர்கள் கூறுகின்றனர். இது தவறாகும்.
திருக்குர்ஆனில் அனைத்துச் சட்டதிட்டங்களும், கட்டளைகளும் ஆண்களைக் குறிக்கும் வகையிலேயே, ஆண்பால் சொற்களைக் கொண்டே பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆனாலும் இது பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்திலேயே பெண்கள் கேள்வி எழுப்பி, ஆண்களுக்குச் சொன்ன அனைத்தும் பெண்களுக்கும் உரியது என்று விடையளிக்கப்பட்டு விட்டது.
பாலின அடிப்படையில் உள்ள சட்டங்களைத் தவிர ஏனைய அனைத்தும் ஆண், பெண் இருவருக்கும் பொதுவானது தான் என்று இஸ்லாம் கூறுகிறது. (இது பற்றி முழு விபரம் அறிய, 8வது குறிப்பைக் காண்க)
மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் பெண்கள் பள்ளிவாசலுக்குத் தினமும் வந்து தொழுகையில் பங்கெடுத்துள்ளனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதித்த ஒன்றை யாரும் தடை செய்ய முடியாது.
'பெண்கள் பள்ளிவாசலுக்கு வருவதைத் தடுக்காதீர்கள்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரி 900, 873, 5238)
பெண்கள் இரவு நேரத்தில் பள்ளிக்குச் செல்ல அனுமதி கேட்டால் அவர்களை அனுமதியுங்கள் என்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். (நூல்: புகாரி 865, 899)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் பெண்களும் வைகறைத் தொழுகையில் கலந்து விட்டு இல்லம் திரும்புவார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா (ரலி) கூறினார்கள். (நூல்: புகாரி 578, 372, 867, 872)
'நான் நீண்ட நேரம் தொழுகை நடத்தும் எண்ணத்தில் நிற்பேன். அப்போது குழந்தையின் அழுகுரலை நான் கேட்டு விட்டால் தொழுகையைச் சுருக்கமாக முடித்து விடுகிறேன். (தொழுகையில் கலந்து கொண்ட) அக்குழந்தையின் தாயாரின் உள்ளம் தவிக்கக் கூடாது என்பதே இதற்குக் காரணம்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரி 707, 862, 708, 709, 710, 868)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு நாள் இரவுத் தொழுகையைத் தாமதமாகத் தொழுதனர். அப்போது உமர் (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்று 'பெண்களும் சிறுவர்களும் உறங்குகின்றனர்' என்று தெரிவித்தார்கள். (நூல்: புகாரி 866, 569, 862, 864)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகையில் ஸலாம் கொடுத்தவுடன் பெண்கள் உடனே எழுந்து விடுவார்கள். ஆண்கள் சிறிது நேரம் கழித்து எழுவார்கள். (நூல்: புகாரி 837, 866)
பெண்கள் பள்ளிவாசலுக்கு வந்து வழிபடலாம். கூட்டுத் தொழுகையில் பங்கேற்கலாம் என்பதற்கு இன்னும் ஏராளமான சான்றுகள் உள்ளன.
முஸ்லிம்களின் பள்ளிவாசல்களில் முதலிடம் மக்காவில் உள்ள புனிதப் பள்ளிவாசலுக்கு உண்டு. அங்கே ஆண்கள் ஹஜ் கடமையை நிறைவேற்றுவது போல் பெண்களும் நிறைவேற்றுகின்றனர்; தொழுகின்றனர்.
எனவே பெண்கள் பள்ளிவாசலுக்கு வருவதை இவ்வசனம் தடுக்கவில்லை என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
அப்படியானால் அந்தப் பள்ளியில் தூய்மையான ஆண்கள் உள்ளனர் என்று ஏன் கூறப்பட்டுள்ளது? வீட்டு வசதி இல்லாத ஆண்கள் குறிப்பிட்ட அந்தப் பள்ளியில் தங்கி இருந்தனர். அதன் காரணமாகவே இவ்வாறு கூறப்பட்டுள்ளது. ஆண்கள் மட்டும் தான் பள்ளிவாசலுக்கு வரவேண்டும் என்ற கருத்து இதில் இருந்து கிடைக்காது.