343. முன் சென்ற தூதர்களிடம் கேட்க முடியுமா?
இவ்வசனத்தில் (43:45) முன்னர் சென்று விட்ட தூதர்களிடம் ஒரு கேள்வியைக் கேட்குமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குக் கட்டளையிடப்படுகிறது.
மரணித்துவிட்ட தூதர்களிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எப்படி கேள்வி கேட்க முடியும்? என்ற சந்தேகம் இதில் ஏற்படலாம்.
ஆனால் 'தூதர்களிடம் கேட்பீராக!' என்பதை, "தூதர்கள் கொண்டு வந்த போதனைகளில் தேடிப்பார்ப்பீராக'' என்ற கருத்தில்தான் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு புரிந்து கொள்வதற்கு திருக்குர்ஆனில் மற்றொரு வசனம் சான்றாக அமைந்துள்ளது.
திருக்குர்ஆனின் 4:59 வசனத்தில் "உங்களுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டால் அல்லாஹ்விடமும், அவனது தூதரிடம் கொண்டு செல்லுங்கள்'' என்று அல்லாஹ் கூறுகிறான். இங்கே அல்லாஹ்விடம் கொண்டு செல்லுங்கள் என்பதற்கு அல்லாஹ்வின் வேதத்தோடு உரசிப் பாருங்கள் என்பதைத் தவிர வேறு அர்த்தம் இருக்க முடியாது.
அதே போல அல்லாஹ்வின் தூதரிடம் கொண்டு செல்லுங்கள் என்றால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உயிருடன் இருந்த காலத்தில் அவர்களிடம் கொண்டு செல்ல முடியும். அவர்களின் மரணத்துக்குப் பிறகு எந்தப் பிரச்சினையையும் அவர்களிடம் கொண்டு செல்ல முடியாது. அவர்களின் வழிகாட்டுதலுடன் பொருத்திப் பார்க்க வேண்டும் என்பது தான் இதன் கருத்தாகும்.
அதுபோல் தான் இந்த வசனத்தையும் புரிந்து கொள்ள வேண்டும்.
திருக்குர்ஆன் பல இடங்களில் இறந்தவர்கள் செவியுற மாட்டார்கள், பதில் தர மாட்டார்கள் என்று கூறுவதால் இவ்வாறுதான் புரிந்து கொள்ள வேண்டும் என்பது மேலும் உறுதியாகிறது.