507. வானம் என்பது என்ன?
வானம் என்ற சொல் திருக்குர்ஆனில் இரு அர்த்தங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
மேலே தென்படும் வெட்டவெளி என்பது ஒரு அர்த்தமாகும்.
வானத்தில் இருந்து மழையை இறக்கியதாக 2:21, 6:98, 8:11, 13:17, 14:23, 15:22, 16:10, 16:65, 20:53, 22:63, 23:18, 25:48, 27:60, 29:63, 30:24, 31:10, 35:27, 31:21, 43:11, 50:9 ஆகிய வசனங்கள் கூறுகின்றன.
இந்த வானத்தை நாம் எளிதில் அடைந்து விடலாம். விமானத்தில் பயணம் செய்பவர் இந்த வானத்துக்கும் மேலே அதாவது மழைபொழியும் மேகங்களுக்கும் மேலே பயணம் செய்ய முடியும்.
பறவைகள் வானத்தில் வட்டமடிக்கின்றன என்று குர்ஆன் சொல்வது வெட்ட வெளியைத்தான்.
விஞ்ஞானிகள் இந்த வானத்தையே திடப்பொருள் அல்ல எனவும் சூனியம் எனவும் கூறுகின்றனர். இதனால் தான் நாம் இதை விமானத்தின் மூலம் தடையில்லாமல் கடந்து செல்ல முடிகிறது.
இது அல்லாத இன்னொரு வானத்தைப் பற்றியும் திருக்குர்ஆன் கூறுகிறது. அது மனிதன் இன்னும் சென்றடையாத தொலைவில் இருக்கிறது. ஏழு அடுக்குகளைக் கொண்டதாக அது படைக்கப்பட்டுள்ளது.
இரண்டு நாட்களில் ஏழு வானங்களை அமைத்தான். ஒவ்வொரு வானத்திலும் அதற்குரிய கட்டளையை அறிவித்தான். கீழ் வானத்தை விளக்குகளால் அலங்கரித்தோம். (அவற்றை) பாதுகாக்கப்பட்டதாக (ஆக்கினோம்). இது அறிந்தவனாகிய மிகைத்தவனின் ஏற்பாடாகும்.
திருக்குர்ஆன் 41 : 12
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிஃராஜ் எனும் வின்னுலகப் பயணம் அழைத்துச் சென்றபோது அவர்கள் ஒவ்வொரு வானத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டபோதும் அங்கே வானவர்களை திறக்கச் சொல்லி அதன் வாசல்கள் திறந்த பின்பே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உள்ளே செல்ல முடிந்தது.
இவ்வாறு ஏழு வானங்கள் உள்ளன. இந்தவானத்தை விஞ்ஞானிகள் இன்னும் அறிவால் கூட அடையவில்லை. இவர்கள் ஆகாயம் எனும் வெட்ட வெளியின் இறுதி எல்லையைக் கூட அடையவில்லை. அது திடப்பொருள் என்றோ திரவப்பொருள் என்றோ இன்னும் அவர்கள் கருத்து எதுவும் சொல்லவில்லை.
எந்த வசனத்தில் எந்த வானம் பற்றி பேசப்படுகிறது என்பதை நாம் எளிதாக அறிந்து கொள்ளலாம்.
மனிதனுடன் தொடர்புடைய விஷயங்களைப் பற்றி பேசும்போது வானம் என்பது வெட்டவெளி என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டு உள்ளது.
மனிதன் அறிந்திராத நம்பிக்கை சார்ந்த விஷயங்கள் குறித்து வானம் என்று சொல்லப்பட்டால் அது மனிதன் சென்றடையாத ஏழு அடுக்குகளைக் கொண்ட திடப்பொருளான வானம் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.