501. முன்னோரைப் பின்பற்றலாமா?

 

ஹிஜ்ரத் செய்வதில் முந்திக் கொண்டவர்களையும் அவர்களுக்கு உதவி செய்வதில் முந்திக் கொண்டவர்களையும் பின்பற்றுமாறு இவ்வசனம் (9:100) கூறுகிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தோழர்கள் எதைச் சொன்னாலும் அதை நாம் பின்பற்ற வேண்டும் என்ற தவறான கொள்கை உள்ளவர்கள் இவ்வசனத்தை (9:100) தமக்குரிய ஆதாரமாகக் காட்டி மக்களை வழிகெடுக்க முயல்கின்றனர்.

 

இவ்வசனம் இவர்கள் கூறுகின்ற அர்த்தத்தைத் தரவில்லை. இதை விளங்குவதற்கு முன்னால் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

 

இஸ்லாம் என்ற பெயரில் எதைச் செய்வதாக இருந்தாலும் அது அல்லாஹ் சொன்னதாக இருக்க வேண்டும். அல்லது அவனது வஹீ மூலம் அவனது தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னதாக இருக்க வேண்டும்.

 

அல்லாஹ்வும், அவனது தூதரும் சொன்னதற்கு மாற்றமாக யார் சொன்னாலும் அதற்கும் இஸ்லாத்துக்கும் சம்மந்தமில்லை. அதுபோல் அல்லாஹ்வும், அவனது தூதரும் சொல்லாத ஒன்றை இஸ்லாத்தின் பெயரால் யார் சொன்னாலும் அதற்கும் இஸ்லாத்துக்கும் சம்மந்தமில்லை.

 

இதுதான் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை.

 

அல்லாஹ்வும், அவனது தூதரும் சொல்லாத ஒன்றை நபித்தோழர்கள் சொல்லி இருந்தாலும், நல்லறிஞர்கள் என அறியப்பட்டவர்கள் சொல்லி இருந்தாலும் அதற்கும் இஸ்லாத்துக்கும் சம்மந்தமில்லை.

 

நேர்வழி காட்டும் அதிகாரம் எவருக்கும் இல்லை; அது எனக்கு மட்டுமே உரியது என்பது தான் இறைவனிடமிருந்து மண்ணுலகுக்கு வந்த முதல் கட்டளை.

 

முதல் மனிதரான ஆதம் (அலை) அவர்கள் இறைவனால் நேரடியாகப் படைக்கப்பட்டவர்கள். இறைவனது ஆற்றலைக் கண்கூடாகக் கண்டவர்கள். வானவர்களை மிஞ்சும் அளவிற்கு அறிவாற்றல் வழங்கப்பட்டவர்கள்.

 

இத்தகைய சிறப்பு வாய்ந்த ஆதம் (அலை) அவர்களும், அவர்களின் துணைவியான அன்னை ஹவ்வா (அலை) அவர்களும் இறைவனின் ஒரு கட்டளையை மீறி விட்டனர். இதன் காரணமாக அவர்கள் வசித்து வந்த சோலையிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

 

அவர்களை வெளியேற்றும்போது அவர்களிடம் இறைவன் பின்வருமாறு சொல்லி அனுப்பினான்.

 

இங்கிருந்து அனைவரும் இறங்கி விடுங்கள்! என்னிடமிருந்து உங்களுக்கு நேர்வழி வரும்போது எனது நேர்வழியைப் பின்பற்றுவோருக்கு எந்த அச்சமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்' என்று கூறினோம்.

திருக்குர்ஆன் : 2:38

 

இருவரும் ஒட்டுமொத்தமாக இங்கிருந்து இறங்குங்கள்! உங்களில் சிலர் மற்றும் சிலருக்கு பகைவர்களாவீர்கள். என்னிடமிருந்து உங்களுக்கு நேர்வழி வரும். அப்போது எனது நேர்வழியைப் பின்பற்றுபவர் வழி தவற மாட்டார். துர்பாக்கியசாலியாகவும் மாட்டார். எனது போதனையைப் புறக்கணிப்பவனுக்கு நெருக்கடியான வாழ்க்கை உண்டு. அவனை கியாமத் நாளில் குருடனாக எழுப்புவோம்.

திருக்குர்ஆன் : 20:122, 123, 124

 

தமக்கு வழங்கப்பட்ட அறிவைக் கொண்டு மனிதர்கள் நேர்வழியைக் கண்டறிந்து கொள்வார்கள் என்றால் இவ்வாறு இறைவன் சொல்லி அனுப்பத் தேவையில்லை.

 

உமக்கு நான் அளப்பரிய அறிவைத் தந்துள்ளேன். அந்த அறிவைக் கொண்டு நேர்வழியைக் கண்டுபிடித்து அதன்படி நடந்து கொள் என்று இறைவன் சொல்லியிருக்கலாம். அவ்வாறு சொல்லாமல், என்னிடமிருந்து உங்களுக்கு நேர்வழி வரும். அந்த நேர்வழியைப் பின்பற்றினால் தான் வெற்றி பெற முடியும் என்று சொல்லி அனுப்பினான்.

 

மனிதர்களிலேயே மாமேதையான ஆதம் நபி அவர்களே சுயமாக நேர்வழியைக் கண்டுபிடிக்க முடியாது; இறைவனிடமிருந்து தெரிவிக்கப்படும் வழிகாட்டுதலின்படி நடக்க வேண்டும் என்றால் இறைவன் தவிர வேறு எவருடைய கூற்றையும் நடவடிக்கைகளையும் நாம் மார்க்கமாக ஆக்கக் கூடாது என்பது தான் பொருள்.

 

ஆதம் (அலை) அவர்களே இறைவனிடமிருந்து வரும் நேர்வழியை - வஹீயை - மட்டுமே பின்பற்ற வேண்டும் என்றால் நபித் தோழர்களோ, மற்றவர்களோ அவரை விட உயர்ந்தவர்களா?

 

2:170, 3:103, 6:106, 6:114,115, 7:3, 10:15, 33:2, 39:3, 39:58, 46:9, 49:16, 24:51,52, 5:3, 16:116, 42:21, 5:87, 6:140, 7:32, 9:29, 9:37, 10:59, 5:48 49 ஆகிய வசனங்களில் இக்கொள்கையை அல்லாஹ் இன்னும் தெளிவாக விளக்கியுள்ளான்.

 

மார்க்கத்துக்காக மக்காவைத் துறந்து மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்தவர்களையும், ஹிஜ்ரத் செய்து மதீனா வந்தவர்களுக்கு உதவியவர்களையும் இவ்வசனம் புகழ்ந்து பேசுவதுடன் அவர்களைப் பின்பற்றியவர்களையும் புகழ்ந்து பேசுகிறது. அவர்களைப் பொருந்திக் கொண்டதாகவும் அவர்களுக்காக சொர்க்கம் தயார் நிலையில் உள்ளதாகவும் இவ்வசனம் கூறுகிறது.

 

நபித் தோழர்களைப் பின்பற்றுமாறு அல்லாஹ்வே கட்டளையிட்டதால் தான் நபித்தோழர்களைப் பின்பற்ற வேண்டும் என அவர்கள் வாதிடுகின்றனர்.

 

இவ்வசனத்தை உரிய கவனத்துடன் அணுகாத காரணத்தால் தங்களின் தவறான கொள்கைக்கு இதை ஆதாரமாகக் காட்டுகின்றனர். பின்பற்றுதல் என்ற சொல், பயன்படுத்தப்படும் இடத்துக்கு ஏற்ப பொருள் தரும் சொல்லாகும்.

 

குறிப்பிட்ட மனிதனின் பெயரைப் பயன்படுத்தி அவனைப் பின்பற்றி நடங்கள் எனக் கூறப்பட்டால் எல்லா வகையிலும் அவனைப் பின்பற்றுங்கள் எனப் பொருள் வரும்.

 

ஒரு மனிதனின் பதவி, தகுதியைக் குறிப்பிட்டு அவரைப் பின்பற்றுங்கள் என்று கூறப்பட்டால் அந்தத் தகுதியுடன் தொடர்புடைய விஷயங்களில் அவரைப் பின்பற்றுங்கள் என்று பொருள் வரும்.

 

காவல்துறை அதிகாரியைப் பின்பற்றுங்கள் என்றோ காவல்துறை அதிகாரியான மூஸாவைப் பின்பற்றுங்கள் என்றோ கூறப்பட்டால் காவல்துறை அதிகாரி என்ற முறையில் அவருக்கு என்ன அதிகாரம் உள்ளதோ அந்த விஷயத்தில் பின்பற்றுங்கள் என்று பொருள் கொள்ள வேண்டும். வியாபாரம், திருமணம், வணக்கம் போன்றவற்றில் அவரைப் பின்பற்ற வேண்டும் என்ற பொருள் வராது.

 

கொடை வள்ளலை, அல்லது கொடைவள்ளலான இப்ராஹீமைப் பின்பற்றுங்கள் எனக் கூறப்பட்டால் வாரி வழங்கும் தன்மையில் மட்டும் அவரைப் பின்பற்ற வேண்டும் என்ற பொருள் வரும். அவர் என்ன சொன்னாலும் கேளுங்கள்! அவர் என்ன செய்தாலும் அதையே செய்யுங்கள் என்று பொருள் கொள்ள முடியாது.

 

இவ்வசனத்தில் எந்த மனிதரையும் பின்பற்றுமாறு கூறப்படவில்லை. மாறாக ஹிஜ்ரத் செய்வதில் முந்திக் கொண்டவர்களையும் அவர்களுக்கு உதவி செய்வதில் முந்திக் கொண்டவர்களையும் பின்பற்றுமாறு தான் இவ்வசனம் கூறுகிறது.

 

அதாவது ஹிஜ்ரத் செய்வதில் யார் முந்திக் கொண்டார்களோ அவர்களைப் பின்பற்றி சிலர் தாமதமாக ஹிஜ்ரத் செய்தனர் என்பதே இதன் பொருள். உதவி செய்வதில் முந்திக் கொண்டவர்களைப் பின்பற்றினார்கள் என்றால் உதவுவதில் அவர்கள் வழியில் சென்றார்கள் என்பது தான் பொருள்.

 

ஆரம்ப காலத்தில் ஹிஜ்ரத் செய்தவர்களும், அவர்களைப் பின்பற்றி ஹிஜ்ரத் செய்தவர்களும் இறைதிருப்திக்கு உரியவர்கள். இதே போல் ஆரம்ப கால அன்ஸார்களைப் போல் பிற்காலத்தில் உதவிய அன்ஸார்களும் இறைதிருப்திக்கு உரியவர்களே என்பதைத் தான் 9:100 வசனம் கூறுகிறது.

 

முஹாஜிர்கள், அன்ஸார்கள் என அல்லாஹ் கூறுவது சஹாபாக்களைத் தான் என்றாலும் அவர்களைப் பின்பற்றுமாறு இதில் நமக்கு எந்தக் கட்டளையும் இல்லை. அவர்களை யார் பின்பற்றுகிறார்களோ என்று வருங்கால வினைச் சொல்லாக இறைவன் கூறாமல் பின்பற்றினார்களோ என்று இறந்தகால வினைச் சொல்லாகக் கூறுகிறான். பின்பற்றுகிறார்களோ என்று கூறினால் இப்போதும் அவர்களைப் பின்பற்றலாம் என்ற பொருள் வரும். பின்பற்றினார்களோ என்று கூறினால் இவ்வசனம் அருளப்படுவதற்கு முன்னர் பின்பற்றி நடந்தவர்களைத்தான் அது குறிக்கும் என்பதும் கவனிக்கத்தக்கது.

 

எனவே முஹாஜிர்கள், அன்ஸார்கள் என்பது எவ்வாறு நபித் தோழர்களைக் குறிக்குமோ அது போல் முஹாஜிர்களைப் பின்பற்றியவர்கள் என்பதும் அன்ஸார்களைப் பின்பற்றியவர்கள் என்பதும் நபித்தோழர்களைத் தான் குறிக்கும்.

 

ஹிஜ்ரத் செய்வதிலும், ஹிஜ்ரத் செய்தவர்களுக்கு உதவுவதிலும் முந்திச் சென்றவர்களைப் பின்பற்றியவர்களைப் புகழ்ந்து பேசும்போது மற்றொரு நிபந்தனையையும் இறைவன் இணைத்துக் கூறுகிறான்.

 

அழகிய முறையில் அவர்களைப் பின் தொடர்ந்தவர்கள் என்பது தான் அந்த நிபந்தனை.

 

முன்னதாக ஹிஜ்ரத் செய்தவர்களிடம் ஹிஜ்ரத்தின்போது தவறான காரியங்கள் நிகழ்ந்திருக்கலாம். அதைப் பின்பற்றக் கூடாது என்பதற்காகத்தான் அழகிய முறையில் பின்தொடர்ந்தவர்கள் என்று அல்லாஹ் கூறுகிறான்.

 

மேலும் வஹீயை மட்டுமே பின்பற்ற வேண்டும் எனக் கூறும் ஏராளமான ஆதாரங்களுக்கு முரணில்லாத வகையில் இவ்வசனத்தை விளங்கும் சரியான முறை இதுவேயாகும்.

 

முஹாஜிர்கள், அன்ஸார்கள் ஆகியோர் மார்க்கம் என்று எதைச் சொன்னாலும், செய்தாலும் அதை அப்படியே நாமும் பின்பற்ற வேண்டும் என்று பொருள் கொண்டால் வஹீயை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்ற கருத்துடைய வசனங்கள் நிராகரிக்கப்படும் நிலை ஏற்படும். அல்லது நபித் தோழர்களுக்கும் வஹீ வந்தது என்ற நிலை ஏற்படும். இரண்டுமே தவறாகும்.

 

எனவே நபித் தோழர்களின் சொற்கள் செயல்கள் மார்க்க ஆதாரங்களாகும் என்ற கருத்தை இவ்வசனம் தரவில்லை.

 

மாற்றுக் கருத்துடையவர்கள் இவ்வசனத்துக்கு அளிக்கும் விளக்கம் தவறு என்பதை இதுபோல் அமைந்த மற்றொரு வசனத்தின் மூலமும் நாம் அறிய முடியும்.

 

யார் நம்பிக்கை கொண்டு அவர்களின் சந்ததிகளும் நம்பிக்கை கொள்வதில் அவர்களைப் பின்பற்றினார்களோ அவர்களுடன் அவர்களின் சந்ததிகளைச் சேர்ப்போம். அவர்களின் செயல்களில் எதையும் குறைக்க மாட்டோம். ஒவ்வொரு மனிதனும், தான் செய்ததற்குப் பிணையாக்கப்பட்டவன்.

திருக்குர்ஆன் 52:21

 

9:100 வசனத்தை மாற்றுக் கருத்துடையவர்கள் விளங்கியது போல் இவ்வசனத்தையும் விளங்குவதாக இருந்தால் ஒவ்வொருவரும் தனது முஃமினான பெற்றோரைப் பின்பற்றலாம் என்ற கருத்து வரும். அதாவது ஸஹாபாக்களை மட்டும் பின்பற்றுவது அவசியம் இல்லை. தனது தாய் தந்தை எதை மார்க்கம் என்று கடைப்பிடித்தார்களோ அதையே நாமும் செய்ய வேண்டும் என்ற கருத்து வரும்.

 

சரியான முறையில் நம்பிக்கை கொண்ட பெற்றோரை அது போல் சரியான நம்பிக்கை கொண்டு பிள்ளைகளும் பின்பற்றினால் அவர்களின் கூலியைக் குறைக்காது அளிப்போம் என்பது தான் இதன் பொருள்.

 

பெற்றோரின் எல்லா நடவடிக்கைகளையும் அப்படியே பின்பற்ற வேண்டும் என்பது இதன் பொருள் அல்ல என இவர்களே ஒப்புக் கொள்கிறார்கள்.

 

ஒரே மாதிரியாக அமைந்த இரண்டு வசனங்களுக்கு வெவ்வேறு விதமாக விளக்கம் அளிப்பதிலிருந்து அவர்களின் வாதம் தவறு என்பதை அறியலாம்.

 

உங்களில் சிறந்தவர்கள் என் காலத்தவர்கள். பின்னர் அவர்களை அடுத்து வருவோர். அதன் பின்னர் அவர்களை அடுத்து வருவோர் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். மேலும் தொடர்ந்து உங்களுக்குப் பின் நாணயமாக நடக்காத மோசடி செய்பவர்களும், சாட்சியம் அளிக்க அழைக்கப்படாமலே சாட்சி கூறுபவர்களும், நேர்ச்சை செய்து அதை நிறை வேற்றாதவர்களும் தோன்றுவார்கள். அவர்களிடம் பகட்டு வெளிப்படும் எனவும் கூறினார்கள்.

நூல் : புகாரி 2651, 3650, 6428, 6695

 

தமது காலத்தவரையும், அதற்கு அடுத்த காலத்தவரையும் மிகச் சிறந்த சமுதாயம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளதால் நபித் தோழர்களை நாம் பின்பற்றலாம் என்றும் அவர்கள் வாதிடுகின்றனர்.

 

இந்த நபிமொழி ஆதாரப்பூர்வமானது என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் இதில் நபித்தோழர்களைப் பின்பற்றச் சொல்லும் வகையில் ஒரு வாசகமும் இல்லை. இதன் பொருள் என்ன? என்பதை இதன் இறுதியிலேயே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கியுள்ளார்கள்.

 

அதாவது அந்தச் சமுதாயத்தில் நாணயம், நேர்மை, வாக்கை நிறைவேற்றுதல், வலியச் சென்று எதிலும் தலையிடாமல் இருப்பது போன்ற நற்பண்புகள் அதிக அளவில் இருக்கும். பிந்தைய சமுதாயத்தில் அது குறைந்து விடும் என்பது தான் அந்த விளக்கம்.

 

நபித் தோழர்களின் சிந்தனையிலும், தீர்ப்புகளிலும், முடிவுகளிலும், ஆய்வுகளிலும் எந்தத் தவறும் ஏற்படாது என்பதால் அவர்கள் சிறந்தவர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருந்தால் அவர்களைப் பின்பற்றலாம் என்ற கருத்து அதனுள் அடங்கி இருப்பதாக எடுத்துக் கொள்ளலாம்.

 

அவர்களின் நாணயம், நேர்மை காரணமாக சிறந்தவர்கள் என்று தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். நாணயமாகவும், நேர்மையாகவும் உள்ளவர்களாக இருப்பதால் அவர்களின் சிந்தனையில் தவறே ஏற்படாது என்று அறிவுடையோர் கூற மாட்டார்கள்.

 

மேலும் வஹீயை மட்டும்தான் பின்பற்ற வேண்டும் என்று நாம் எடுத்துக் காட்டிய ஏராளமான ஆதாரங்களுக்கு முரணாக இந்த ஹதீஸை நாம் விளங்கினால் நபித் தோழர்களுக்கும் இறைவனிடமிருந்து வஹீ வந்துள்ளது என்ற விபரீதமான முடிவுகள் ஏற்பட்டு விடும்.

 

 








free counters
மொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் | © 2019 tamilquran.in. Designed by Ahadh Media.
You 're visitors No. 219847