497. முஸ்லிமல்லாதவருக்காகப் பிரார்த்திக்கலாமா?

 

இவ்வசனங்கள் (2:124, 2:126) முஸ்லிமல்லாதவர்களின் நன்மைக்காகப் பிரார்த்தனை செய்யலாமா? என்ற முக்கியமான கேள்விக்கான விடையாக அமைந்துள்ளன.

 

இப்ராஹீம் நபி அவர்களை மனிதகுல வழிகாட்டியாக ஆக்கியதாக அல்லாஹ் குறிப்பிட்டதையும், என்னை மட்டுமின்றி எனது வழித்தோன்றல்களிலும் இவ்வாறு ஆக்குவாயாக என்று இப்ராஹீம் நபி கேட்டதையும், உமது வழித்தோன்றல்களில் யார் நல்லவர்களாக இருக்கிறார்களோ அவர்கள் விஷயத்தில் தான் இந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொள்வேன் என்று அல்லாஹ் சொன்னதையும் 2:124 வசனம் சொல்கிறது.

 

இப்ராஹீம் நபியின் வழித்தோன்றல்களில் நல்லவரும் இருப்பார்கள். தீயவரும் இருப்பார்கள். தீயவர்களையும் உள்ளடக்கும் வகையில் இப்ராஹீம் நபி பிரார்த்தனை செய்தது தவறு என்று அல்லாஹ் இவ்வசனத்தில் சுட்டிக் காட்டுகிறான்.

 

முஸ்லிமான மக்களுக்காகத் தான் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று இவ்வசனம் கூறுவது போல் தெரிகின்றது. இப்ராஹீம் நபியும் இப்படித்தான் இதைப் புரிந்து கொண்டார்கள் என்று 2:126 வசனத்தில் இருந்து அறிந்து கொள்ளலாம்.

 

2:126 வசனத்தில் தனது வழித்தோன்றல்களான மக்காவாசிகளுக்கு கனிகளை உணவாக அளிப்பாயாக என்று இப்ராஹீம் நபி பிரார்த்தனை செய்தபோது என் வழித்தோன்றல்களில் நல்ல முஸ்லிம்களுக்கு இவற்றை வழங்குவாயாக என்றுதான் துஆச் செய்கிறார்கள். தமது வழித்தோன்றல்கள் அனைவருக்காகவும் இந்தப் பிரார்த்தனையைச் செய்யவில்லை.

 

அதாவது 2:124 வசனத்தில் அனைவருக்காகவும் பிரார்த்தனை செய்யக் கூடாது அல்லாஹ் பொதுவாகச் சொன்னதாகப் புரிந்து கொண்டதால் அடுத்த பிரார்த்தனையின்போது நல்லவர்களுக்கு மட்டும் துஆச் செய்தார்கள்.

 

இந்த இரண்டாவது பிரார்த்தனையை நல்லவர்களுக்காக மட்டும் இப்ராஹீம் நபி செய்தபோது நல்லவர்களுக்கு மட்டுமல்ல; கெட்டவர்களுக்கும் செல்வத்தை அருளுவேன் என்று அல்லாஹ் சொல்கிறான். நல்லவர்களுக்காக மட்டும் துஆச் செய்தது தவறு என்று இங்கே அல்லாஹ் சுட்டிக் காட்டுகிறான்.

 

இந்த இரு வசனங்களும் ஒன்றுக்கொன்று முரண்படுவதாகக் கருதக் கூடாது. இரண்டு பிரார்த்தனைகளும் இருவேறு வகைகளாகும்.

 

இப்ராஹீம் நபி செய்த முதல் துஆ மறுமையில் மனிதனுக்கு நற்பேறுகளைப் பெற்றுத் தரும் மனிதகுல வழிகாட்டி என்ற தகுதி பற்றியதாகும். இதை ஒருவரின் வழித்தோன்றல் என்ற காரணத்துக்காக அல்லாஹ் வழங்க மாட்டான். யார் அல்லாஹ்வை நம்பி நல்லறங்கள் செய்கிறார்களோ அவர்களுக்குத்தான் வழங்குவான். எனவே இப்ராஹீம் நபி அனைவருக்கும் பொதுவாக செய்த முதல் துஆவை அல்லாஹ் தவறு என்று உணர்த்துகிறான்.

 

இப்ராஹீம் நபியின் இரண்டாவது துஆ இவ்வுலகில் உணவுகளை வழங்குவது சம்மந்தமான துஆவாகும். இவ்வுலகில் இறைவன் வழங்கும் பாக்கியங்கள், நல்லவர் கெட்டவர் என்ற அடிப்படையில் வழங்கப்படுவதில்லை. முஸ்லிம்களுக்கும் அல்லாஹ் உணவு அளிக்கிறான். அல்லாஹ்வை ஏற்காத முஸ்லிமல்லாதவருக்கும் உணவை அளிக்கிறான். இது போன்ற பிரார்த்தனைகளை முஸ்லிம்களுக்காக மட்டும் தான் கேட்க வேண்டும் என்று இப்ராஹீம் நபி நினத்தது தவறு என்று உணர்த்தி அனைவருக்கும் வழங்குவேன் என்று கூறுகிறான்.

 

முஸ்லிமல்லாதவர்கள் நமக்கு நண்பர்களாகவோ, உறவினர்களாகவோ இருந்தால் அவர்களின் வறுமை நீங்கவும், நோய் நொடிகள் தீரவும் துஆச் செய்யலாம். ஆனால் அவர்களின் மறுமை வாழ்க்கையில் சொர்க்கம் கிடைப்பதற்காக துஆச் செய்யக் கூடாது. இஸ்லாத்தை ஏற்காதவருக்கு சொர்க்கம் இல்லை என்று அல்லாஹ் அறிவித்து விட்டான். இந்தக் கருத்தைத் தான் இவ்விருவசனங்களும் கூறுகின்றன.

 

அவர்கள் இவ்வுலகில் வாழும்போது நேர்வழிக்கு வரவேண்டும் என்று துஆச் செய்யலாம்.

 

 








free counters
மொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் | © 2019 tamilquran.in. Designed by Ahadh Media.
You 're visitors No. 219772