496. குகைவாசிகளின் எண்ணிக்கை சிலருக்குத் தெரியும் என்பதன் பொருள்

 

இவ்வசனத்தில் (18:22) குகைவாசிகள் எனப்படுவோர் எத்தனை பேர் என்பது குறித்து அன்றைய மக்கள் மத்தியில் இருந்த சில கருத்துக்களை அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான். அவர்கள் தம்முடன் அழைத்துச் சென்ற நாயையும் சேர்த்து நான்கு, நாயையும் சேர்த்து ஆறு, நாயையும் சேர்த்து எட்டு என மூன்று கருத்துக்கள் அன்றைய மக்களிடம் இருந்தன என்றும், அவர்களின் சரியான எண்ணிக்கையை அல்லாஹ்வே அறிவான் என்றும் கூறி இம்மூன்று எண்ணிக்கையும் தவறானது என்று அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்.

 

சரியான எண்ணிக்கை அல்லாஹ்வுக்கு மட்டும் தெரியும் என்று சொன்னதோடு அல்லாஹ் நிறுத்தவில்லை. அவர்களின் எண்ணிக்கையைச் சிலரைத் தவிர யாரும் அறிய மாட்டார்கள் என்றும் கூறுகிறான். மனிதர்களில் சிலருக்குத் தெரியும் என்று ஏன் கூறவேண்டும்? மனிதர்கள் தெரிந்து வைத்து இருந்த மூன்று எண்ணிக்கையும் தவறு என்று அல்லாஹ் சொல்லி விட்டதால் மனிதர்களில் ஒருவருக்கும் தெரியாது என்று தானே கூற வேண்டும்?

 

இப்படி ஒரு சந்தேகம் எழலாம்.

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்திலும், அவர்களுக்குப் பின்னரும் சரியான எண்ணிக்கை யாருக்கும் தெரியாது என்றாலும் குகைவாசிகள் குகையில் மரணித்துக் கிடந்ததை நேரில் கண்டு அவர்கள் மீது வழிபாட்டுத் தலத்தை எழுப்பினார்களே அந்த மக்களுக்கு சரியான எண்ணிக்கை தெரிந்திருக்கும். அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரியும் என்று சொல்லி இருந்தால் அவர்கள் மரணித்தபின் சடலங்களைக் கண்டவர்களுக்கு சரியான எண்ணிக்கை தெரியுமே என்று யாரும் கேட்டு விடலாம். அதைத் தவிர்ப்பதற்காகவே இவ்வாறு அல்லாஹ் பயன்படுத்தி இருக்க வேண்டும்.

 

பொதுவாக சரியான எண்ணிக்கை சிலருக்குத் தெரிந்து விட்டால் அந்தச் சிலர் வழியாக அந்த எண்ணிக்கை அனைவருக்கும் தெரிந்ததாக ஆகிவிடும். குறைந்த எண்ணிக்கையினருக்குத் தெரிந்ததாகவே அது நீடிக்கும் என்று சொல்ல முடியாது.

 

அந்தக் காலத்தில் வாழ்ந்து மரணித்து விட்டவர்களுக்குத் தெரியும் என்பதைத் தான் அல்லாஹ் இப்படிச் சொல்லி இருக்கிறான். மரணித்தவர்கள் அறிந்திருந்த சரியான எண்ணிக்கையை மற்றவர்கள் அறிய இயலாது. எனவே அந்த எண்ணிக்கையை அறிந்தவர்கள் குறைவானவர்களாகவே நீடிப்பார்கள். இப்படி பொருத்தமாக வார்த்தைகளைப் பயன்படுத்தி இருப்பது நுண்ணறிவாளனாகிய இறைவனின் வார்த்தை என்பதற்கு ஆதாரமாக எடுத்துக் கொள்ளலாம்.

 

 








free counters
மொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் | © 2019 tamilquran.in. Designed by Ahadh Media.
You 're visitors No. 219828